✠ புனிதர் லூக்கா ✠ St. Luke ✠
திருத்தூதர், நற்செய்தியாளர், மறைசாட்சி
(Apostle, Evangelist, Martyr)
பிறப்பு :
அந்தியோக்கியா, சிரியா, ரோமப் பேரரசு
(Antioch, Syria, Roman Empire)
இறப்பு :
கி.பி. சுமார் 84 (வயது 84)
பியோஷியா அருகே, கிரேக்கம்
(Near Boeotia, Greece)
குறிப்பிடத்தகுந்த படைப்புகள் :
லூக்கா நற்செய்தி நூல்
அப்போஸ்தலருடைய நடபடிகள்
நற்செய்தியாளரான புனிதர் லூக்கா, ஒரு ஆதி கிறிஸ்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின்'படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.
அந்தியோக்கியா நகரில் பிறந்து வாழ்ந்த இவர், தொழில்ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார். இவரைப் பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலேமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் தீமொத்தேயு 4:11ல் காணக் கிடைக்கின்றது.
இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
அப்போஸ்தலர் புனிதர் பவுலின் சீடராகிய இவர், பிறகு பவுல் மறைசாட்சியாக மரிக்கும்வரை அவரைப் பின்பற்றுபவராக இருந்தார். திருமணமாகாத, குழந்தைகளில்லாத, தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்த புனித லூக்கா, கடைசிவரை ஆண்டவருக்கு சேவை செய்வதிலேயே தமது ஆயுளைக் கழித்தார். இவர் தனது 84ம் வயதில் மரித்தார் என்பர். இவரது நினைவுத் திருவிழாநாள் அக்டோபர் மாதம், 18ம் தேதி ஆகும்.
லூக்கா அடிப்படையில் புறவினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் எழுதிய நற்செய்தி நூல் புறவினத்தாருக்கு எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்நூலை அவர் கி.பி. 65- 85 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்கலாம் என்றும் திருச்சபையின் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். லூக்கா நற்செய்தியாளர் எருசலேமிருக்கு சென்று, அங்கே இருந்த அன்னை மரியாளைச் சந்தித்து, அவரிடம் வானத்தூதர் கபிரியேல் அவருக்கு தோன்றியது பற்றியும், அவர் எலிசபெத்தை சந்திக்கச் சென்றது பற்றியும், இயேசு கோவிலில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை தன்னுடைய நற்செய்தி நூலில் எழுதினார் என்றும் கூறுவார்கள்.
இவர் எழுதிய திருத்தூதர் பணிகள் நூல் தொடக்கத் திருச்சபை எப்படி வளர்ந்தது, அது எப்படி தூய ஆவியால் வழிநடத்தப்பட்டது என்பதை நமக்கு மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. ஆகையால் தூய லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய எழுத்தாற்றலால் திருச்சபைக்கு நல்கியிருக்கின்ற கொடைகள் அளப்பெரியது. அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கிறிஸ்தவ பாரம்பரியம், லூக்காவை முதல் பிரபல ஓவியர் என்கிறது. அவர் வரைந்த இறைவனின் தூய அன்னை மரியாளினதும் குழந்தை இயேசுவினதும் சித்திரங்கள் அதி பிரசித்தி பெற்றவை. முக்கியமாக, தற்போது காணாமல் போன “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) அருகேயுள்ள "ஹோடேகெட்ரியா" (Hodegetria image) அன்னையின் சித்திரம் பிரபலமானது. பதினொன்றாம் நூற்றாண்டில், அவரது கைத்திறமைகளுக்காக பல சித்திரங்கள் புனிதத்துவம் பெற்றன. எடுத்துக்காட்டாக, "செஸ்டோசோவா'வின் "கருப்பு மடோன்னா" (Black Madonna of Częstochowa and Our Lady of Vladimir) சித்திரம் முக்கியமானதாகும். இவர், புனிதர்கள் பவுல் மற்றும் பேதுரு ஆகியோரின் சித்திரங்களையும் வரைந்ததாக கூறப்படுவதுண்டு. அக்காலத்தில், ஒரு நற்செய்தி புத்தகத்தை நுண்ணிய முழு சுழற்சியுடன் விளக்கி எழுதியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
0 Comments