சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்களின் உழைப்பை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2005ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி புதுடெல்லியில் கொண்டாடப்பட்டது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
தேயிலை வாரியம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் உற்பத்தியாகும் 80 சதவீத தேயிலை, இந்திய மக்களின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில், தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தப்படுவது தேநீர். இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, தற்போது உலக அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், சமூகம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல், அனைவராலும் விரும்பப்படும் சமத்துவ பானமாக தேநீர் விளங்குகிறது.
உடல் எடைக் குறைப்பில் பெரும் பங்கு வகிக்கும் தேயிலையைக் கொண்டு, உலக அளவில் 1000-க்கும் மேற்பட்ட தேநீர் வகைகள் பயன்பாட்டில் உள்ளன. தேயிலையில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டவை என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புத்துணர்வு தரும் பானமாக மட்டுமில்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் அவசியத் தேவைகளில் ஒன்றாகவும் தேநீர் திகழ்கிறது.
0 Comments