திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலிக்கன் முறைமையில் ஜனவரி 6 ஆம் தேதி பிரசன்னத் திருநாள் ஆசரிக்கப்படுகிறது.
மேலும், இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று ஞானிகளின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச் சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம் கூறுகிறது.
இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இன்றைய திருக்காட்சி பெருவிழா.இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
உண்மையான விண்மீன்களை அடையாளம் கண்டதால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், பிறரும் கிறிஸ்துவண்டை வந்திட, தடைகள் பல எழுந்தாலும், தளராமல், விண்மீன்களைப் போல் தொடர்ந்து, பிறருக்கு வழிகாட்டும் சுடர்களாய் வாழ்வோம்...
0 Comments