இந்திய நாட்டின் பண்பாட்டு உடை என்றாலே அது வேட்டி-சேலை தான். என்னதான் புதுவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி. சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பாகவே நமது முன்னோர் வேட்டி அணிந்து வலம் வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான்.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினத்தை ‘யுனெஸ்கோ’ அறிவித்தது. அன்று தொடங்கி ஆண்டுதோறும் ஜனவரி 6-ந் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் பாரம்பரிய உடைகளையும் விரும்பி அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. Click here to to Read: Lungi Any Man's Leisure Wear
வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பெரிய பங்கு உண்டு. அவர் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், ‛ரோமானியர்களுக்கு ஆடை அனுப்பிய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். அந்த ஆடையை பெருமைபடுத்தும் விதமாக, தமிழ் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாக கொண்டாட வேண்டும்,’’ என்று அந்த கடிதத்தில் சகாயம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டி கட்டுவதை ஊக்குவிக்க பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் புதுப்புது யுக்தியை கையாண்டு வருகின்றன. அதில் சிறப்பாக பல வண்ணங்களில் வேட்டிகள் இன்று குறைந்த விலையில் தரமாக கிடைக்கின்றன.தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது. ஏற்கனவே வறுமையின் பிடியில் கிடக்கும் அவர்கள், தற்போது கொரோனா பேரிடராலும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையின் விளிம்புக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மானம் காத்த வேட்டியை தந்த, மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
எனவே இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும். புதிய ஆடைகள் வாங்கும்போது தவறாமல் ஒரு வேட்டியாவது வாங்கிட வேண்டும். வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் வேட்டி அணிந்து பணியாற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி நாம் வேட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவம் நமது பாரம்பரியத்தை மட்டுமல்ல, நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் சத்தமில்லாமல் உயர்த்தும். சிறப்பாக, நமது உடல் மற்றும் மன ஆரோக்கியமும் உண்டு என்பதை அறிந்து உணர்ந்து புரிந்து, அதனை இன்றைய தினத்தின் முக்கியமான உறுதிமொழியாக எடுத்து கொள்வோம்.
1 Comments
Traditional 😍😇🤩💗
ReplyDelete