பிளாரன்ஸ் சுவென்சன் அம்மையார் இங்கிலாந்து நாட்டில் பிறந்த பெருஞ்சீமாட்டி. இளமையில் ஒரு நடிகையாக விருப்பமுற்றிருந்தார். இறை சித்தமும், பெற்றோரின் ஜெபமும் அவரை ஒரு மிஷனரி ஆக்கிற்று.
இந்தியா வந்த இவர் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் என்ற நகரில் பெண்களுக்கான ஒரு கல்லூரியில் பணிபுரிந்து, பின்னர் சுகவீனத்தின் காரணத்தால் இந்நாடு விட்டு இங்கிலாந்து சென்றார்.
பூரணசுகம் பெற்றபின் பாளையங்கோட்டை சாரா டக்கர் கல்லூரி ஆசிரியையாகப் பணி ஏற்றார். இவர் ஆசிரியப்பணியோடு, சமுதாய சேவையாகப் பெண்களுக்குத் தையல் கற்றுக் கொடுத்தார். கற்க வந்த பெண்களில் ஒருவரான செவிட்டு ஊமைப்பெண்ணிடம் மிகவும் பரிவு கொண்டார். கற்றுக் கொள்ள வரும் பெண்களுக்குக் கடவுளைப் பற்றிய உபதேசத்தை கற்றுக் கொடுப்பார். அந்த ஊமைப்பெண் சில விஷயங்களை அறிந்தும் அறியாமலும் அந்த உபதேசத்தை ஆவலோடு கவனிப்பாள்.
இந்நிலையில் மேலும் மூன்று ஊமைப்பெண்கள் தையல் வகுப்பில் சேர்ந்தனர். அவரின் நலன் கருதிய அம்மையார் 1897-இல் ஒரு சிறு பள்ளியை ஆரம்பித்துப் படங்களையும் எழுத்துக்களையும் காட்டி விஷயங்களை அறிந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தார். இது கண்டு பலர் இப்பள்ளியில் சேர்ந்தனர்.
ஒரு பங்களாவை வாடகைக்குப் பொருத்தி ஊமையரின் பள்ளியைச் சற்று விரிவாக்கினார். மாணவிகளின் தொகை பெருகவே இன்றைக்கு இருக்கும் பிளாரன்ஸ் சுவென்சன் செவிடர் பாடசாலையைப் பல கட்டங்களுடன் பெரிதாக்கி 1900-ஆம் ஆண்டு ஒரு கல்வி நிலையமாக்கினார். தம் பொருள் அத்தனையையும் அதற்கென்று செலவழிக்க அர்ப்பணித்தார். செவிடர்களுக்குக் கற்பிக்கும் பயிற்சி பெற்ற ஒரு ஆங்கில பெண்மணியை ஆசிரியையாக அமர்த்தினார். 1919-இல் இவர் இங்கிலாந்து சென்று தமது 94வது வயதில் காலமானார்.
0 Comments