அன்று முதல் இன்று வரை அநேக கிறிஸ்தவ மக்களிடையே இருக்க கூடிய சந்தேகங்கள்:-
கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா?
பொங்கல் என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்று தான் சொல்லுவது தான் சரியா?
கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் அல்லது வீடுகளில் பொங்கல் வைக்கலாமா?
மற்றவர்கள் தரும் பொங்கலை சாப்பிடலாமா?
இன்றைய பொங்கல் விழா என்பது இறைவனை மறைத்து இயற்கையை முக்கியத்துவப்படுதுகின்றதா? Click here to Watch Video about Pongal
தை மாதம் முதல் தேதி பொங்கல் தினமாக தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு தமிழரின் அறுவடை பெருவிழா, தமிழர் திருநாள், தமிழ் வருடப்பிறப்பு என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்த விழாவிற்கு பின்னே புராணக் கதைகள் எதுவுமில்லை. இதற்கும் எந்த மத இன ஒழுங்குகளுக்கும் தொடர்பில்லை.
பொங்கல் விழா, தமிழர் திருநாள்! தமிழர் விழா! தமிழன் நன்றி மறவாதவன்! 'செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', என்பதை நன்கு உணர்ந்தவன். அந்த நன்றியுணர்ச்சியை காட்ட எழுந்ததே இப்பொங்கல் விழா. ஆடி மாதத்தில் தேடி விளைவித்த பயிர்களின் விளைச்சலை, அறுவடை செய்து, பயனடையும் பருவமே தை மாதம் ஆகும். ஆகவே அந்த மாதத்தின் துவக்க நாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆங்காங்கே வயல்வெளிகளில் கொண்டாடப்பட்ட விழா தான் இது. அதில் பொங்கல் விடுவது தான் சிறப்பு. தங்கள் மகிழ்ச்சிக்கு அடையாளமாகவும், குடும்பமாக உண்டு மகிழவும் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு சமய நம்பிக்கைக்கும் ஏற்ப, ஆசாரிக்கும் முறைகளில் மாற்றம் அடைந்தது. இதனால் பொங்கல் விழாவின் மாண்பு குறைந்து விட்டது என்று கூற முடியாது.
தமிழர்போல், ஒவ்வொரு இன, மொழி, சமய மக்களிடையேயும் இவ்வாறு அறுவடை விழா தங்கள் கால சூழ்நிலைகளுக்கேற்ப கொண்டாடும் வழக்கம் உள்ளது. உதாரணமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். யூத மக்களும் அறுவடை பண்டிகை என்று கொண்டாட வேண்டும் என்று கடவுளாகிய யாவே கற்றுக்கொடுத்த பிரமாணத்தை வேதத்தில் வாசிக்கிறோம். இந்திய திருநாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலைக் கடவுளுக்குப் படைத்தல்தான் பொங்கல் விழாவின் முக்கியக் கட்டமாய் அமைந்துள்ளது. இப்பொங்கல், நிலத்திலிருந்து கிடைக்கும் முதற்கனியாகிய அரிசியிலிருந்து சமைக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனியை இறைவனுக்குப் படைப்பது திருமறையில் எங்கும் காணப்படுகிறது.
தமிழ் கிறிஸ்தவர்கள் எவ்வித ஐயமுமின்றி, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடலாம். பொங்கல் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம். கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் அல்லது வீடுகளில் பொங்கல் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. மற்றவர்கள் தரும் பொங்கலை மன மகிழ்ச்சி மற்றும் முக மலர்ச்சியோடு வாங்கி சாப்பிட்டால், அன்பு வளரும். சில பின்னணிகள் இன்றைய பொங்கல் விழா என்பது இறைவனை மறைத்து இயற்கையை முக்கியத்துவப்படுதுகிறதாக இருக்கிறது என்று எண்ணினால், அதைக் குறித்து மனதைக் குழப்பாமல், நாம் சரியான நோக்கத்தோடு நேர்த்தியாக பிறருக்கு முன்னுதாரணமாக, ஆசரித்து காட்டுவோம்.
பொங்கல் ஓர் அறுவடை விழா. தமிழரின் பண்டிகை. ஆகவே எல்லாருக்கும் பொதுவான ஒரு சமூக விழா. ஆகவே பொங்கல் விழா இன,மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்குமுரிய ஒரு பொது விழா. நிலத்தை பண்படுத்திப் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலனை உண்டு மகிழும் அனைவருமே இந்நன்றிப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும்.
Acknowledgement
Meyego
0 Comments