மார்ட்டின் லூத்தர் கிங் (1929 - 1968)
1929-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் மைக்கேல் லூதர் கிங். புராட்டெஸ்டாண்டு புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அந்தக் குழந்தையின் தந்தை மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரைப் பிற்பாடு தனது பிள்ளைக்கு வைத்தார். முன்னவருடன் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.
தனது தந்தை பாதிரியாராக இருந்த திருச்சபையிலேயே கிங்கும் 1947-ல் சேர்ந்தார். இந்தத் திருச்சபையில்தான் சில ஆண்டுகள் கழித்துக் கீழ்க்கண்டவாறு அவர் முழங்கினார்:
“அமெரிக்காவே, நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்கள் 1.9 கோடிப் பேரை மிதித்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டும், ஏதோ சில வெள்ளையர்கள் மட்டுமல்ல, எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா, உனது இலக்குக்குத் திரும்பிவா.”
ஏனென்றால், இனவெறி அமெரிக்கர்களிடையே இணைப்பிரியாமல் இருந்த காலம். கருப்பு நிறத்தவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு இழிவானவர்களாகவும் நடத்தப்பட்ட சூழ்நிலை. வெள்ளையர்களுக்கும், கருப்பர்களுக்கும் தனித்தனி பள்ளிகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு, கல்வி அளிக்கப்பட்டு வந்தது. ஒற்றுமை என்பது கானல் நீராக கூடக் காட்சி அளிக்காமல் இருந்தது.
மார்ட்டின் லூத்தர் கிங், புரட்சிகர மனிதனாக புதுமைகள் செய்யப் புறப்பட்டார். கறுப்பு இனத்தவரின் காவலனாக, வெள்ளை இனத்தவர்களுக்கு நண்பனாக, அவர்களிடையே சமத்துவம் ஏற்படவும், பொதுநீதி கிடைக்கவும் போராட்டங்களை நடத்தினார்.
60 லட்சம் மைல்கள் தூரம் அமெரிக்காவைச் சுற்றி வந்து, 2500 கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்தி, பகைவருக்கும் அன்பு செலுத்தும் ஆன்மீக வழியில் பதினொரு ஆண்டுகள் போராடி வெற்றி கண்டார்.
கருப்பு இன மக்களைத் தட்டி எழுப்பும் கடிதம் ஒன்றை எழுதினார். இது உலகப் புகழ்மிக்க உரிமைக் குரலாக அமைந்தது. உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். சுமார் 2.12 லட்சம் கருப்பு இனத்தவர்களைக் கூட்டிச் சேர்த்து, தன் கனவுகளை வெளிப்படுத்தினார்.
போராட்டங்கள் வெற்றிப் பெற்றதால் பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. 1964, டிசம்பர் 10 அன்று சமாதானத்துக்கான நோபல் பரிசை தமது 35ஆம் வயதிலேயே பெற்றார். 1965ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று டைம்ஸ் பத்திரிகை புகழ்ந்தது.
சமத்துவத்தை மலரச் செய்த இவர், நிறவெறி பிடித்த ஒருவனால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மாபெரும் விடுதலை வீரர் இறைப்பட்டம் பெற்ற ஓர் பாப்டிஸ்ட் சபையின் போதகர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்வி எதுவெனில், நாம் மற்றவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே.
-- மார்ட்டின் லூத்தர் கிங்
0 Comments