தியானம் : 1 / 15.02.2022
தலைப்பு : திருமறையைத் தியானிப்போம்
திருவசனம் : சங்கீதம் 1.2 "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள்.... கடவுள் நமக்கு கொடுத்த ஈடு இணையில்லா பரிசு தான் பரிசுத்த வேதாகமம் என்னும் திருமறை. தூய ஆவியானவரால் இறை மனிதர்கள் எழுதிய புத்தகங்களின் புத்தகம் இது. இது நம் கைகளில் கிடைக்க இரத்தம் சிந்தி உழைத்தவர்கள் அதிகம். காரணம் என்னவென்றால் நாம் அதை தியானிக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதுவே நம் கடமை. தியானத்தின் (Meditation) நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். ஆம் கடவுளை அவர் வார்த்தைகளின் வாயிலாக தியானிப்பதே நம் தியானமாக இருக்க வேண்டும். அதைத் தான் சங்கீதம் 1.2 இன் முதல் வார்த்தை "ஆண்டவரின் வேதத்தில்" என்று சொல்லுகிறது.
1. எப்படி தியானிக்க வேண்டும்?
சங்கீதம் 1.2 இல் சொல்லப்பட்டுள்ளது... "பிரியமாயிருந்து" அதாவது, வேதத்தை முழு மனதோடு விருப்பப்பட்டு (Willingness) தியானிப்பதைக் குறிக்கிறது. பிரியமில்லாமால் செய்யக்கூடிய எந்தவொன்றிலும் பயனிருக்காது. மனமிருந்தால் மார்க்கமுண்டு. நாம் எப்படி தியானிக்கிறோம்?
2. எப்பொழுது தியானிக்க வேண்டும்?
தியானம் என்பதை ஒன்றை எண்ணுதல், சிந்தித்தல் அல்லது நினைத்தல் என்றும் சொல்ல முடியும். கடவுளின் வார்த்தைகளை எப்பொழுதும் நம் சிந்தனையில் வைத்து அசைபோட வேண்டும். அது தான் இங்கு "இரவும் பகலும்" (Day and Night) என்று வருகிறது.
3. எவ்வாறு வாழ்க்கை மாறுகிறது?
இறைவார்த்தை தியானம் ஒரு மனிதனை பாக்கியவானாக (Blessedness) மாற்றுகிறது. பாக்கியம் என்பது அசாதாரணமான ஆசீர்வாதத்தை குறிக்கும். நற்பேறும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தான், கடவுள் கொடுக்கக்கூடிய பாக்கிய வாழ்வு.
நிறைவுரை
நாம் அனைவரும் மனனமாக வைத்திருக்கக் கூடிய இந்த வசனம் கற்றுத் தருகிறது: நம் சிந்தனைகளில் மனப்பூர்வமாக எப்பொழுதும் திருமறை தியானமிருந்தால் பாக்கிய வாழ்வுண்டு. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments