தியானம் : 2 / 16.02.2022
தலைப்பு : புடமிடப்பட்ட வெள்ளி
திருவசனம் : சங்கீதம் 12.06 "கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள். மனிதர்கள் பயன்படுத்தும் உலோகங்களில் ஒன்றான வெள்ளி (Sliver) தங்கத்தைக் காட்டிலும் அதிக பயன்பாடுகள் கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த வெள்ளி பயன்பாட்டிற்கு வரும்முன் பல வழிமுறைகளைக் கடந்து, பின்னர் விற்பனைக்கு வருகிறது. அப்பேர்ப்பட்ட புடமிடபப்பட்ட வெள்ளியை உருவகமாக பயன்படுத்தி சங்கீதக்காரனாகிய தாவீது, ஆண்டவரின் சொற்களின் தன்மையை விளக்குகிறார். இந்த சங்கீதத்தில் மனிதர்களின் சொற்கள் எப்படிப்பட்டது என்றும் கடவுளின் சொற்கள் எப்படிப்பட்டது என்றும் தெளிவாக வித்தியாசப்படுத்தி பாடியுள்ளார் தாவீது அரசர்.
1. தனித்துவமானது
மண்குகையில் உருக்குதல் என்பது பண்டைய காலத்தில் அதிகமான வெப்பத்தில் நடைபெறும் புடமிடுதலின் ஒரு வகை. இதன் மூலம் வெள்ளியானது, அதனோடுள்ள கலப்பு பொருட்கள் நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி தனித்துவம் பெறுகிறது. அதேபோல் தான் ஆண்டவரின் கலப்பற்ற சொற்களும் அனைத்தையும் காட்டிலும் தனித்துவம் பெற்றவை.
2. திடமானது (உறுதியானது)
ஏழுதரம் உருக்கப்படும் வெள்ளி தன் உறுதித்தன்மையை இழப்பதில்லை. மாறாக இன்னும் திடமடைகிறது. இந்த வெள்ளிக்கொப்பான இறை சொற்களும் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல; மாறாக நிலையானவை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் இறை வார்த்தைகள் ஒழியாது.
3. தூய்மையானது
புடமிடப்பட்ட எதுவும் தூய்மையானது. ஆண்டவரின் சொற்கள் மாசற்ற சுத்த சொற்கள். ஏனென்றால், அவை மகா பரிசுத்தரின் வார்த்தைகள். வெள்ளியை புடமிட்டு தான் தூய்மையாக் வேண்டும்; ஆனால் இறைவார்த்தையானது ஒவ்வொரு மாந்தரின் உள்ளத்தையும் புடமிட்டு தூய்மையாக்கும் ஆற்றலுள்ளவை.
நிறைவுரை
தனித்துவமிக்க, திடமான, தூய்மையான ஆண்டவரின் சொற்களுக்கு நிகரெதுவும் இல்லை. இன்று சிந்தித்துப் பார்ப்போம்: என் வாழ்வில் வேதத்திற்கு தனித்துவம் கொடுக்கிறேனா? அதன் மூலம் நான் புடமிடப்பட இடம் கொடுக்கிறேனா? இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments