Ad Code

6. சிதைந்த மனுக்குலம் | Disfigured Mankind | ஏசாயா 5.7 Isaiah | திருமறை தியானம்

                   

தியானம் : 6 / 20.02.2022
தலைப்பு : சிதைந்த மனுக்குலம்
திருவசனம் :  ஏசாயா 5.7 "சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு."

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். நவீன உலகில், அவசர அவசரமாக எல்லோரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்: மனுக்குலம் எப்படி இருக்கிறது என்று? எல்லாம் மேம்பட்டுக் கொண்டிருந்தாலும், மனுக்குலம் சிதைந்து தான் போய்க் கொண்டிருக்கிறது என்றால் தவறில்லை. இந்தக் காலத்தில் நீதி, நியாயம், பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியே.

உவமையின் மறைபொருள்

மகா செழிப்பான மேடு, நற்குல திராட்சை செடிகள், உறுதியான பாதுகாப்பு, மற்றும் மிக நேர்த்தியான தோட்டக்காரர் ஆகியவை இருந்தும் கசப்பான பழங்களைக் கொடுத்ததாக ஒரு உவமை பாடல் ஏசாயா 5 ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. இது சிதைந்துப் போன இஸ்ரவேல் எனும் மனுக்குலத்தைக் குறித்து பாடப்பட்ட பாடல். எல்லாம் இருந்தும் ஏன் சிதைந்துப் போனது?

1. மனம்போன போக்கில் வாழ்வு

இஸ்ரவேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுக்கு சாதகமாக, சுயவிருப்பப்படி, மாயையை பின்பற்றி (ஏசாயா 5.18,24) மனம்போன போக்கில் வாழ்ந்ததின் விளைவு சிதைந்து போனார்கள். ஆனாலும் அவர்கள் ஆண்டவரின் செயல்களை நோக்கவும் இல்லை; சிந்திக்கவும் இல்லை.

2. மாய்மாலமான வாழ்வு

எல்லாம் நன்றாக கிடைத்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததால், முடிவில் கனிகொடுக்கும் போது, மாய்மாலம் வெளிப்பட்டது. தீமையை நன்மையென்றும், நன்மையை தீமையென்றும் சொல்லி (ஏசாயா 5.20) வாழ்ந்து  வந்தந்தின் விளைவு சிதைந்து போனார்கள்.

3. மனமேட்டிமையின் வாழ்வு

மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்த்தப்படும் (ஏசாயா 5.15) என்பது போல், வீணான ஆடம்பரத்திலும் பெருமையிலும் இருந்த இஸ்ரவேலரின் வாழ்வில் நியாயம் நீதி இல்லை. எல்லாம் சிதைந்து போனது. ஆகவே பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு போகப்பட்டார்கள்.

நிறைவுரை

நீங்களும் நானும் கடவுளின் படைப்பு. அதை மறந்துவிட்டு, மனம்போன போக்கில் மாய்மாலமாக மனமேட்டிமையோடு வாழ்வோம் என்றால் சிதைந்து போவோம். எங்கு நியாயம் இல்லையோ, நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு மனுகுலம் சிதைந்துப் போகிறது எனலாம். ஆகவே நீதிக்காக குரல் கொடுத்து, நியாயம் செய்து மனுக்குலத்தைக் காப்போம். அதுதான் நற்கனி. இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments