புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின் படி, யூதாசின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒத்தமை (Synoptic Gospels) நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு சீடர்கள் மத்தியில் எழுந்து நின்று இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
அங்கிருந்தவர்கள் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்னபா மற்றும் மத்தியா ஆகிய இருவரை முன்னிறுத்தினார்கள். இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் எங்களோடு கூட இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று பேதுரு கூறியதிலிருந்து மத்தியாஸ் இயேசுவோடு தொடர்புடையவர் என்பது தெளிவாகிறது.
அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். சுமார். 80 கி.பி களில் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, எருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சியாக இறந்ததாக சொல்லப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமைவாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டுக்கு முன்வரை ரோமன் கத்தோலிக்க சபையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிப்ரவரி 24 ஆம் தேதி அன்றே இப்போதும் சீர்திருத்த திருச்சபை இவரது திருநாளை ஆசரிக்கிறது. ஆனால் தற்போது மே மாதம் 14 ஆம் தேதியில் ரோமன் கத்தோலிக்கம் மற்றும் சில ஆங்கிலிக்கன் ஒன்றியங்கள் ஆசரிக்கிறது.
0 Comments