பூமிக்கு உப்பு
செ. ராபின் B.Sc., (BD – 4)
ஐக்கிய இறையியல் கல்லூரி,புனே.
தமிழாக்குறிச்சி, கீழஓமநல்லூர் சேகரம்
CSI திருநெல்வேலி திருமண்டலம்
click here to download pdf of Meditation 11
தியான வசனம்: மத்தேயு 5. 13
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.”
முகவுரை
மலைப்பிரசங்கம் நடைபெற்ற சூழ்நிலையானது, இயேசுவானவர் தமது ஊழியத்தின் ஆரம்ப காலக்கட்டமாகும். பெரும்பாலும் அவரை பின்பற்றினவர்கள் கடற்கரை அல்லது அதனோடு தொடர்புடைய, சீடர்கள் அல்லது மக்கள் கூட்டம் என்றால் மிகையாகாது. நிச்சயமாக இவர்களுக்கு உப்பு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்திருக்கும். ஆகவே, அதையே உருவகமாக வைத்து, ‘நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்று அவர் கற்றுக் கொடுக்கிறார்.
விளக்கவுரை
உப்பின் கிரேக்க பதம் ஹலால் (ἅλας – Salt) எனப்படுகிறது. இன்று உப்பின் விலை குறைவாக இருக்கலாம்; ஆனால் அதன் மதிப்பு மிக மிக உயர்ந்தது. தூய வெண்நிறம் கொண்ட உப்பின் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, சில நல்ல பாடங்களைக் கற்றுகொள்வோம்.
மாற்கு 9.50 சொல்லுகிறது: “உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானத்துடன் வாழுங்கள்.” ஒன்றொடொன்று எளிதாகக் கலந்துவிடக் கூடியது உப்பு; அது போல், நாமும் பிறரோடு சமாதானமாக இருக்கும் போது, இந்த பூமியில் உள்ளவர்களுக்கு உப்பாக வாழ முடியும்.
சிறிய பொருளாகிய உப்பு பொருட்களை கெட்டுப் போக விடாமல் பதப்படுத்தி, பாதுகாக்க உதவுகிறது. பூமிக்கு உப்பு என்பது, நாம் வாழ்கின்ற பகுதிகளில், ஒடுக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் உப்பாய்க் காணப்பட்டு, அவர்கள் கெட்டுப்போகாமல் அவர்கள் வாழ்க்கையை காக்கின்றவர்களாக நாம் காணப்பட வேண்டும்.
உப்பானது எளிதில் பரவக் கூடியது; அதே நேரத்தில், தன்னுடைய உப்புத்தன்மையை எல்லா இடத்திலேயும் கொடுக்கிறது. அது தன்னை கரைக்கும் போது மற்றவர்களுக்கு பயன்படுகிறது. நம்மையே கரைத்து, பிறருக்கு பயன்படுகிறவாறு, நம் வாழ்க்கை காணப்பட வேண்டும். மேலும், இந்த பூமியிலே பல பாடுகள் பிரச்சினைகளை மேற்கொள்ளும்போதும் நமது கிறிஸ்தவ தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
முடிவுரை
உப்பின் தன்மை இல்லாமற் போகுமானால், மீண்டும் கொண்டு வர இயலுமா? லூக்கா நற்செய்தி 14:34-35 சொல்லுகிறது: "உப்பு நல்லது; ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் (Taste / Quality) எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க (Saltness) முடியும்? அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும்…" ஆம் நாம் நம்முடைய உப்பு போன்ற தன்மையை இழப்போமென்றால், நாம் பயனற்றவர்களாகி விடுவோம். உப்பு என்பது பழைய ஏற்பாட்டில் இறை உடன்படிக்கையின் அடையாளமாக (லேவி 2.13) வருகிறது. ஆகவே, கடவுள் எதிர்பார்க்கின்றவாறு, அவர் நமக்கு கொடுத்துள்ள நற்குண சுபாவங்களோடு சாட்சியாக வாழ்வோம். உப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது போல நாமும் இயேசுவைக் குறித்ததான தாக்கத்தை ஏற்படுத்துவோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
3 Comments