இறைவேண்டல்
ஞா. ஐசக் கிருபாகரன் BE மருதகுளம் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.
click here to download pdf of Meditation 24
தியான பகுதி: மத்தேயு 6: 5- 8
5அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். 7அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
முகவுரை
இறைவேண்டல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. சொல்லப்போனால், மனிதனுடைய இரண்டு கண்களில் ஒரு கண் போன்றது. வேதத்தின் மூலமாய் கடவுள் நம்மிடத்தில் பேசுவதும், இறைவேண்டலின் மூலமாய் நாம் அவரிடத்தில் பேசுவதுமான உறவே கிறிஸ்தவ வாழ்வில் இன்றியமையாததாகும். உறவின் வளர்ச்சிக்காய் கடவுள் அமைத்திருக்கும் இந்த ஜெபமானது, யூதர்களின் வாழ்க்கையில் ஜெபம் காலையில் அவர்களின் முதல் செயலாகவும், இரவில் அவர்களின் கடைசி செயலாகவும் இருந்தது. மேலும், ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகள் ஜெபிக்கிறவர்களாக இருந்தார்கள். அதனால் தான், எப்படி ஜெபிக்கக் கூடாது, எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுகிற இயேசுவுடைய இந்த செயல் ஜெபத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
தியானம்
இயேசு கிறிஸ்து இந்தப் பகுதியில், மனிதர்கள் இறைவனோடு பேசுவதற்கான ஜெபம் என்ற வழியிலுள்ள களைகளைக் காண்பிக்கிறார். யூதர்களுடைய ஜெப வாழ்க்கை வழக்கமாக ஒன்றாக இருந்தாலும், அதில் அர்த்தமற்றுப் போய்விட்ட நிலையிலிருந்த வேதபாரகர் மற்றும் பரிசேயரை மாயக்காரர் என்று சொல்லுகிறார். மத்தேயு 23: 2-5 மற்றும் லூக்கா 18: 9-14 வசனங்களை வாசிக்கும் போது, வேதபாரகர் மற்றும் பரிசேயர் ஆகியோர் மாயக்காரர் என்று அவர்களுடைய செயலினால் வெளிப்படுத்துகிறதை அறியலாம். இங்கேயும் (மத்தேயு 6.5) அப்படியே வெளிப்படுத்துகிறது. இந்த மாயக்காரர்களின் செயல், யூதர்களுடைய முறைப்படி ஜெபிக்க வேண்டிய வேளையில் பொது இடங்களில், மக்கள் நிறைந்திருக்கும் இடத்தில் நின்று கொண்டு ஜெபங்களை ஏறெடுப்பவர்களைக் குறிக்கிறது. அவர்களுடைய விருப்பம் தங்களை ஆவிக்குரிய சிந்தை கொண்டவர்களாகவும், தேவபக்தியுள்ளவர்களாகவும் மற்றவர்கள் முன்பு தன்னைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்தோடு இருந்தது.
இந்த மாயக்காரர்களின் ஜெபமானது சுய மகிமைக்கான கிரியையாக மாற்றிக்கொண்டார்கள். அதனால் இயேசு, தனிப்பட்ட ஜெபத்தின் அவலட்சணத்தை சுட்டிக்காண்பிக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், இறைவனோடு கூட பேசுவதற்கு இப்படிப்பட்ட செயல் அவசியமில்லை, அதனால் எந்த பயனுமில்லை. இப்படிப்பட்டவர்கள், தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று இயேசு கூறினார். நல்ல விஷயத்தை தவறான வழியிலும், தவறான காரணத்திற்காகவும் செய்வதினால் அந்த செயலுக்கான பலன் அடைந்தாயிற்று என்கிறார் இயேசு. இப்படிப்பட்டவர்கள் கடவுளிடத்திலிருந்து எந்த ஒரு பலனையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.
மத்தேயு 6 வசனம் 6-ல் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். அறை வீடு என்பது வீட்டிற்குள் உள்ள இரகசிய அறை, சேமிப்பு அறையைக் குறிக்கிறது. வீட்டிற்குள், கதவு உள்ள ஒரே ஒரு அறை, பூட்டப்படக்கூடிய ஒரே ஒரு அறை. அதுவே, அந்த உள் அறை வீட்டைக் குறிக்கிறது. அதற்குள், பொருளை பாதுகாப்பாக சேர்த்து வைக்கும், ஒரு தனி அறையாக காணப்பட்டது. இது தனிப்பட்ட ஒரு ஜெபத்தை வெளிப்படுத்துகிற ஒரு வசனம். அது ரகசியமாக ஜெபிக்க கூடியதாக இருக்க வேண்டும். அதற்காக இயேசு, ஆலய ஆராதனைகளில் வெளியரங்கமாய் ஜெபித்தலை இயேசு தடைசெய்யவில்லை. இவர்களைப் போன்று ஜெபத்தை காட்சிப்படுத்துவதை விரும்பவில்லை. நாம், கடவுளுடன் தனித்திருக்க அமைதியான மற்றும் தனிப்பட்ட இடம் ஒன்றைக் கொண்டிருப்பதின் மதிப்பை இந்த வசனம் காட்டுகிறது. அந்த ஜெபம் விளம்பரபடுத்துவதாகவும், தன்னை வெளிப்படுத்துவதாகவும் காணப்படக் கூடாது.
மத்தேயு 6.7 இல் வரும் அஞ்ஞானிகள் என்ற வார்த்தை வேதத்திலே அவிசுவாசிகளையும், புறஜாதி ஜனத்தையும் குறிக்கின்ற வார்த்தையாக உள்ளது. இங்கேயும் அவர்களையே குறிக்கின்றது. வீண் வார்த்தைகளை அலப்புதல் என்பது "சோம்பேறித்தனமான பயனற்ற பேச்சு" என்று அர்த்தம் பெறுகிறது. அர்த்தமற்ற திரும்பத் திரும்ப கூறும் வகையையே சொல்லுகிறது. சிந்திக்காமலேயே பேசுதல், வெறுமையான சொற்கள் அடுக்குகளை குவித்தல் மற்றும் மந்திரம் ஒன்றை உச்சரிப்பதுப்போல இயந்திரத்தனமாக ஜெபித்தல் என்ற அர்த்தையெல்லாம் கொண்டிருக்கிறது. புறஜாதியார் தெய்வீக பெயர்களின் நீண்ட பட்டியலைக் கொண்டு, அவற்றை முடிவில்லாமல் திரும்பத்திரும்ப உச்சரித்து, தாங்கள் விரும்பியவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினர். அதனால் தான் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்று இயேசு கூறினார். ஏனென்றால், "அஞ்ஞானிகளின் மூடநம்பிக்கையினுடைய மட்டத்திற்கு நம்முடைய ஜெபம் போய்விடக்கூடாது, மூழ்க அனுமதித்து விடக்கூடாது" என்பதற்காக எச்சரித்தார். ஜெபிக்கும் ஒருவரின் இதயத்திலிருந்து வராத, அர்த்தமற்ற, திரும்பத்திரும்ப உரைக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதை இயேசு வேண்டாம் என்று சொல்லுகிறார்.
யூதர்களும் புறஜாதிகளைப் போல, அதிக வசனிப்பினால் ஜெபம் கேட்கப்படும் என்று நம்பினர். அவர்கள் தெய்வத்தை வணங்கும் போது, தங்கள் இருதயத்தின் எண்ணப்போக்கை புறக்கணித்து, அதே வேளையில் சரியான சடங்குகளையே வலியுறுத்தினர். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சில ரபீக்கள், நீண்ட ஜெபமானது தேவன் கேட்டு பதில் அளிக்க ஏதுவானதாக இருந்தது என்று போதித்தனர். ஆனால், ஜெபித்த ஒருவரின் எண்ணப்போக்கு எப்படி இருக்கிறது என்பதிலே இயேசு அக்கறை கொள்கிறார். ஜெபிக்கின்ற ஒருவரின் அர்த்தமற்ற, இதயத்தில் உணர்ந்து சொல்லப்படாத வார்த்தைகளையே அவர் விரும்பவில்லை. ஜெபம் நீளமாக இருக்கக் கூடாது என்பது இயேசுவுடைய கண்டனமல்ல. உதாரணமாக, லூக்கா 6: 12- இல் இயேசு இரவு முழுவதும் ஜெபித்தார் என்று பார்க்கிறோம்.
இயேசு மத்தேயு 6.8 இல் நம் தந்தையாம் கடவுளின் மாட்சியை சொல்லுகிறார். "இப்படி ஜெபிக்கக் கூடாது?, அப்படி ஜெபிக்கக் கூடாது?" என்று இயேசு கூறி விட்டு, கடைசியாக; "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" என்று கூறுகிறார். நான் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே எனக்கு இன்னது தேவை என்று கர்த்தர் அறிந்திருக்கும் போது, நான் ஏன் ஜெபிக்க வேண்டும்? என்று சிந்திக்கத் தோன்றலாம். ஆனால், இந்த கடவுளின் மாட்சிமை ஜெபிப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது மற்றும் நம்பிக்கையூட்டுகிறது. ஜெபம் என்பது நம்முடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றும்படி கேட்பது கிடையாது, அது துதி, நன்றி, நம்பிக்கை, வேண்டுகோள், மன்னிப்பு, வழிநடத்துதல் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. ஆம், நாம் வேண்டிக் கொள்வதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார். ஆனாலும், நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். (யாக்கோபு 5:17) கருத்தாய் ஜெபிக்க வேண்டும்.
சிந்தனைக்கு...
நாமும் தானியேலே போன்று மூன்று வேளை ஜெபிக்கிறவர்களாக அல்லது அதற்கும் அதிகமாக ஜெபிக்கிறவர்களாக இருக்கலாம். அந்த ஜெபவேளை நேரங்களில் நாம் எங்கிருந்தாலும், நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும், நாம் நமது இருதயத்தின் அறைவீட்டிற்குள் சென்று கடவுளிடத்தில் பேசமுடியும். அந்த நேரத்திலே, சத்தம் போட்டோ அல்லது மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவோ இருக்கக்கூடாது. அந்த வேளையில் நம்மை ஆவிக்குரியவனாக மற்றவர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள இப்படிப்பட்ட தவறான எண்ணம் கொள்ளக்கூடாது. இயேசு மனிதனாக வாழ்ந்த நாட்களில், பிதாவினிடத்தில் மன்றாடினார் (லூக்கா 6:12). அவரது ஜெபம் பொது இடத்தில் தேவைப்படும் நேரத்தில் இருந்தது. அதே மாதிரி, அவருடைய தனி ஜெபம் மனுஷர் காணும்படியாக இல்லாமலிருந்தது. இது மனிதன் கடவுளோடு பேசுவதற்கு இறைவேண்டல் தான் வழி என்பதையும், அதற்கான மாதிரியையும் காண்பித்திருக்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வோம். இந்த நூற்றாண்டில் மனிதர்களோடு பேசி கொள்வதற்கு தொலைப்பேசி, தபால் முறையை பயன்படுத்துகிறோம். ஆனால், இறைவனோடு பேசிக்கொள்வதற்கு எப்போதுமே ஒரே வழி - இறைவேண்டல். அர்த்தமற்ற நீண்ட ஜெபம், திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிற புரிதலற்ற ஜெபம், வீண் வார்த்தைகளை அலப்புகிற ஜெபம், இப்படி ஜெபித்துக் கொண்டிருக்கிறோமா? எப்போதாவது சிந்திக்காமல் ஜெபித்திருக்கிறோமா? என்று நம்மை நாம் கேட்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அப்படி இருக்கிறேன் என்று சொன்னால், இயேசு சொன்னது போல் "அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்". ஆம், நீண்ட விண்ணப்பமோ, சுருக்கமான மன்றாட்டோ அது முக்கியமல்ல கருத்துள்ள இறைவேண்டலாக இருக்க வேண்டும். அப்போது அது கடவுள் விரும்பும் ஜெப தூபமாக இருக்கும். ஆமென்.
0 Comments