கர்த்தருடைய ஜெபம்
செ. சாமுவேல் சேவியர் ராஜா B.A, பங்களா சுரண்டை சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
click here to download pdf of Meditation 25
தியானப் பகுதி: மத்தேயு 6. 9-15
9நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 10உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 12எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 13எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 14மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
முகவுரை
பரமண்டலங்களிலிருக்கிற…. என்று ஆரம்பித்தாலே போதும், கடகடவென்று … ஆமென் வரை சொல்லி முடித்துவிடுவோம். வல்லமைமிக்க இந்த இறைவேண்டலை இயேசுகிறிஸ்து கற்ப்பித்ததின் நோக்கமும், அதின் அர்த்தமும் நம் வாழ்வின் அங்கமாக இருக்கிறதா? என்று தியானிக்க அழைக்கப்படுகிறோம். மத்தேயு நற்செய்தியில் ‘நீங்கள் ஜெபம்பண்ண வேண்டியவிதமாவது’ என்று இயேசு தாமாகவும், லூக்கா நற்செய்தியில் (லூக்கா 11:2-4), ‘சீஷர்கள் அவரிடத்தில் கற்றுத்தரும்படி கேட்டவாறும்’ உள்ளன. இருவரும் வெவ்வேறு சூழலில், பின்னணியில் எழுதியதை அறிந்து கொள்ளமுடியும். அதே நேரத்தில் அந்த ஜெபத்தின் கருத்தக்களின் தன்மை மாறுபடவில்லை.
தியானம்
பரலோகத்திலுள்ள எங்கள் தந்தையே என்று சொல்லுவது, நாம் யாரிடம் ஜெபிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகின்றது. கிருபையென்னும் ஒரு சலுகை பெற்ற உறவை நிரூபிக்கும் ஒரு சிறப்புரிமை பட்டமே தந்தை. அன்றைய யூதர்கள் கடவுளை "அப்பா (Father)" என்று அழைப்பது மிகவும் அசாதாரணமானது, ஏனென்றால் அது மிகவும் நெருக்கமானதாகக் (Closed circle) கருதப்பட்டது. பிரபஞ்சத்தின் வலிமைமிக்க இறையாண்மை கடவுள் என்பது உண்மைதான். அவர் எல்லாவற்றையும் படைத்தார், நிர்வகிக்கிறார், தீர்ப்பார். சிறப்பாக, அவர் நம் தந்தை, ஆனால் அவர் பரலோகத்தில் உள்ள நம் தந்தை. “பரலோகத்தில்” என்று சொல்லும்போது, கடவுளின் பரிசுத்தத்தையும் மகிமையையும் உணர முடியும்.
மிக நேர்த்தியான இறைவேண்டல், கடவுளின் மகிமை மற்றும் அவரின் விருப்பத்தை உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பெயரையும் நற்பெயரையும் பாதுகாக்க விரும்புகிறார்கள். ஆனால் முதலில் நம்மைப் பாதுகாத்து மேம்படுத்தும் போக்கை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அவரது பெயர், இறையரசு மற்றும் அவரின் சித்தத்திற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். நம்முடைய ஜெபமோ அல்லது ஒத்துழைப்போ இல்லாமலேயே கடவுள் தம்முடைய சித்தத்தைச் செய்ய வல்லவர்; இருப்பினும், அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதைப் போலவே, பூமியிலும் செய்யப்படும் வண்ணம், நமது ஜெபங்கள், மற்றும் நமது செயல்களில் பங்கேற்கும்படி அவர் அழைக்கிறார்.
தாராளமாக தன் தேவைகளை கடவுளிடம் சொல்லவும் இயேசு கிறிஸ்து கற்பிக்கிறர். தினசரி தேவைகள், மன்னிப்பு மற்றும் சோதனையை எதிர்கொள்ளும் வலிமை ஆகியவை இதில் அடங்குகின்றன. இயேசு அப்பத்தை பற்றிப் பேசியபோது, நாம் நமது உணவுக்காக கூட கடவுளையே சார்ந்து நிற்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.
நமது பாவங்களை நாம் இறைவனிடத்தில் அறிக்கைச் செய்யவேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்றும் நம்மை ஞாபகப்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் குற்றங்களை அறிக்கையிட்டு மன்றாடும் போது, அந்த ஜெபம் மிகவும் வலிமை பெறுகிறது. பல நேரங்களில் படைத்துப் பாதுகாத்து வரும் இறைவனிடம் மன்னிப்பை எதிர்ப்பார்த்தாலும், நாம் பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இதனால், குற்றப்பழியுணர்வுகளும், தாழ்வு மனப்பான்மை எண்ணங்களும் ஆட்கொள்ளுகின்றன. ஆகவே, ஒருவரையொருவர் மன்னித்து மகிழ்வாக வாழ்வோம்.
எல்லாம் வல்ல கடவுள் நம்மை தீமையின்று காத்து இரட்சிக்க போதுமானவர் என்றால் மிகையாகாது. அப்போஸ்தலராகிய பவுல் ஒரு உறுதியைக் கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 10:13): “உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்.” இந்த விசுவாசத்தில் ஒவ்வொரு நாளும் ஜெபித்து வாழ்வோம்.
இயேசு தாம் கற்பித்த ஜெபத்தின் இறுதியில், தந்தையாம் கடவுளுக்கு மகிமையை செலுத்த கற்றுக்கொடுக்கிறார். 1 நாளாகமம் 29.10-11 வசனங்களின் அடிப்படையில் இது அமைவதைக் காண முடியும். நம்முடைய எல்லா ஜெபங்களும், வார்த்தைகளில் மட்டுமல்ல, வாழ்விலும் கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நற்செய்தியாளர் லூக்கா இந்த வரியைக் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த இறைப்புகழ்சிப்பா (Doxology) இந்த ஜெபத்தின் நோக்கத்தையும் அர்த்ததையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
நிறைவுரை
மத்தேயு 6. 14-15 வசனங்கள் ஜெபம் இல்லையென்றாலும், இந்த ஜெபத்தோடு மிகவும் தொடர்புடைய செயல்வடிவமாகும். இறைவேண்டலுக்கான ஆயத்தமும், அதன் மையமும் மற்றும் அதன் நிறைவான சாரம்சமும் இதில் அடங்கியிருக்கிறது. கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிற நாம், மற்றவர்களுடைய அமைதியிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் சொல்லுகிற இந்த ஜெபத்தை, தினமும் நாம் வாழ்வாக்கும் போது, இறையரசும் இறைசித்தமும் இந்த பூமியில் நம் வாயிலாக நிறைவேறி தந்தையின் திருப்பெயர் மாட்சிப் பெறுவதாக, ஆமென்.
0 Comments