Ad Code

26. உகந்த உபவாசம் | பே. மான்சிங் கிளிண்டன் | Optimal Fasting | மத்தேயு 6.16-18 Matthew | Jesus' View on the Fasting

உகந்த உபவாசம்

பே. மான்சிங் கிளிண்டன் M.A,    (BD – 1)        மஞ்சுவிளை சேகரம்,  CSI திருநெல்வேலி திருமண்டலம்

குருக்கல் இறையியல் கல்லூரி, சென்னை.

 

 

click here to download pdf of Meditation 26

தியானப் பகுதி: மத்தேயு 6.16-18

16நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

 

 

முகவுரை

உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். மேலும் உப என்பது ஒன்றின் கிட்டே போயிருப்பது அல்லது துணை என்பதை குறிக்கும். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கி திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும். அதற்கான  ஒரு வெளிப்படை அடையாளம் தான் உணவை வெறுத்து (tsum - fast - nēsteuēte – நோன்பு) அவரோடு வாசம்பண்ணுதலாகும். இயேசு கிறிஸ்து மத்தேயு 6:16−18 வசனங்களில் எப்படி உபவாசிக்கக் கூடாது, எப்படி உபவாசிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்தார்.

 

தியானம்

"நோன்பு" என்பது பாவநிவாரண நாளைக் குறிக்கிறது (லேவி 16:29). ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியநாளாக ஆசரிக்கப்பட்டது. மோசே சீனாய் மலையில் இறைவனைத் தரிசிக்க சென்ற போது, நாற்பது நாட்கள் உண்ணாமலும் குடியாமலும் இருந்தார் (யாத் 34.28). தங்கள் மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வண்ணம் உபவாசமிருந்ததையும் (யோவேல் 2.15), மற்றும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உபவாசமிருந்ததையும் (எஸ்தர் 4.16) வாசிக்க முடியும். இன்னும் சில சான்றுகளையும் வேதத்தில் காணமுடியும். ஆனால், காலம் செல்ல செல்ல, உபவாசம் என்பது, உண்ணாவிரதம் போன்று யூதர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. ஏசாயா 58 ஆம் அதிகாரத்தில் கடவுள் எச்சரித்ததையும் காணமுடியும். இவ்வாறு யூதர்கள் உபவாசத்தை ஒரு சடங்காச்சாரமாகவும் அர்த்தமற்றதாகவுமுள்ள செயல்பாடாக மாறிவிட்டது.  பரிசேயர்கள் உபவாசவாதிகளாக இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. பரிசேயர் யூதர்கள் வாரத்தில் இரண்டு தரம் அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சடங்காச்சாரம் போன்று உபவாசிக்கின்றனர்.  ஆகவே தான் இயேசு மாயக்காரர்கள் போல் உபவாசிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

 

யோவானின் சீஷர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் தவறாமல் விரதம் இருக்கிறோம்; ஆனால், உங்களுடைய சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?” என்று கேட்கிறார்கள். (மத்தேயு 9:14) விரதம் இருப்பதைப் பரிசேயர்கள் மத சடங்காக செய்துவருகிறார்கள். சம்பிரதாயமாக விரதம் இருப்பது போன்ற பழைய யூத மத பழக்கவழக்கங்களை இயேசுவின் சீஷர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்ற விஷயத்தை யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு மணவாளன் தோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் எனலாம்.

 

உபவாசம் இருக்கிறேன் என்று காண்பிப்பதற்கு புறம்பான தோற்றமாகிய முகவாடல், சோர்வோடு, கவலையோடு இருத்தல் என்பது ஆண்டவருக்கு பிரியமல்ல. பிறர் நம்மை பார்க்க வேண்டும் என்று உபவாசம் இருப்பதென்பது உகந்த உபவாசமல்ல. ஆகவே அப்படியிருக்காமல் அந்தரங்கத்தில் உபவாசம் பண்ணி கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். இயேசு கிறிஸ்து சொன்ன அறிவுரை: “நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.” நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாதவாறு, பரலோக தந்தைக்கு மட்டும் தெரியுமாறு இருக்க வேண்டும்.. அதைக் காணும் நம் தந்தை அதற்கேற்ற கைம்மாறு அளிப்பார்.

 

உபவாசம் என்பது கடவுளை நாடுவதில் ஒருவகையான முறைமை. இதன் அச்சாரம்: "... இயேசு... ஆவியானவராலே...போகப்பட்டார்" (மத்தேயு 4:1&2). ஆவியானவர் வழிநடத்துதல் இல்லாமல் இருக்கும் உபவாச நாட்கள் எல்லாம் சுயத்தில் இறைவனை பிரியப்படுத்த நினைப்பதே. விரும்பியதை பெற பிள்ளைகள் சாப்பிடாமல் இருப்பது போலாகும்.  யார் உபவாசஜெபம் நடத்தினாலும் அது ஆவியானவர் கட்டளையா என்பதை அறிய வேண்டும். உபவாசம் இறைவனுக்கும் நமக்குமுள்ள தனிப்பட்ட நல்லுறவை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். உபவாசம் என்பது நம்மை அவரோடு நெருங்க வைக்கும் ஒரு நல்ல வழிமுறை. நமது மாம்சத்தை ஒடுக்கி ஆவியில் கடவுளோடு ஒன்றித்து அவரை ஆராதிக்கவும் அவரது பாதத்தில் அமர்ந்திருந்து நம்மை ஆராய்ந்து பார்க்கவும் அது வழிவகுக்கிறது. அது நமக்கும் அவருக்குமிடையில் உறவை இன்னமும் நெருக்கமாக்க உதவுகிறது

 

 

அக்கிரமத்தின் கட்டுக்களை அவிழ்ப்பது நெருக்கப்பட்டோரை விடுதலையாக்குவது, பசியுள்ளவனுக்கு ஆகாரம் கொடுப்பது, சிறுமைப்பட்டவனை வீட்டில் சேர்ப்பது, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுப்பது, சகோதரனுக்கு ஒளிக்காமலிருப்பதுமல்லவோ உகந்த உபவாசம் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 58.6-7). எனவே, உபவாசம் என்பது ஒரு சுயநலமான காரியமாய் இராமல் பலகாரியங்களை உள்ளடக்கியுள்ளது. உபவாசம் என்பது மனுஷர் காணும்படியாக அல்ல; பிதா காணும்படியான ஒரு அந்தரங்க செயற்பாடு என்று இயேசு கற்பித்தார். எனவே, உபவாசிப்பது அந்தரங்கமானதாகவும், அதன்மூலம் பிறரின் துயரைத் துடைப்பதும் உணவளிப்பதும், வெளியரங்கமான கிரியைகளாகவும் இருக்கவேண்டும்.

 

சிந்தனைக்கு

 

சில சடங்காச்சர உபவாசங்களால் பயன் ஒன்றுமில்லை. சுய முயற்சிகளால் இறைவனை பிரியபடுத்த முடியாது. அடம்பிடிப்பு, பாரம்பரியம், கொள்கைரீதி, மனுஷ கட்டளை இவற்றினிமித்தம் உபவாசம் இருந்து உடலைக் கெடுக்காமல் இருப்பது நல்லது.  அல்சர் உள்ளவரை உபவாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, இருக்காவிட்டால் ஆசீர்வாதமில்லை என்கிற கூட்டமும் இருக்கிறது. இன்று உபவாசம் என்பதைத் தங்கள் சுயதேவை கருதி, இறைவனைத் தம் பக்கம் இழுக்கின்ற கருவியாகப் பாவிக்கிறவர்களும் உண்டு. நோன்பு என்பது காவடி எடுப்பது போலல்ல. அதேபோல் இந்தக் கிழமைகளில் தான் உபவாசமிருத்தல் வேண்டும் என்று ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. ஆகவே, உபவாசம் இருப்பதற்கு குறிப்பிட்ட நேரமோ, காலம , கிழமையோ கிடையாது. ஆண்டவருக்கு உகந்த படி இருப்பது தான் உகந்த உபவாசம். ஆண்டவர் சொல்லும் நேரத்தில் அவர் பாதத்தில் இருந்து அல்லது அவர் பணி செய்து சாப்பிட மறப்பது அல்லது தவிர்ப்பது தான் உபவாசம். அதுவே நம் வாழ்வில் வெளியரங்கமான பிரதிபலனைக் கொண்டுவரும்.

 


   


 


Post a Comment

0 Comments