Ad Code

27. உண்மை செல்வம் | எ. சாமுவேல் ஆபிரகாம் | True Treasures | மத்தேயு 6.19-21 Matthew

உண்மை செல்வம்

            எ. சாமுவேல் ஆபிரகாம் B.A,                                       தென்கலம், நாஞ்சான்குளம் சேகரம்,  CSI திருநெல்வேலி திருமண்டலம்  BD- 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.         

 

click here to download pdf of Meditation 27

தியான பகுதி:  மத்தேயு 6.19-21

19பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

 

முகவுரை

உலகில் வாழும் அனைவருக்கும் செல்வந்தர்களாக வேண்டுமென்ற ஆசையிருக்கும். மாளிகைகள், தங்க ஆபரணங்கள் மற்றும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் தான் செல்வமுடையவர்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை செல்வம் என்பது விலையேறப்பெற்றது, மதிப்புமிக்கது மற்றும் மிகவும் மேன்மையுள்ளதாக கருதப்படுகிறது. எது உண்மை செல்வம் (True Treasures)? அதைச் சேர்த்து வைப்பது (Store up) எப்படி? என்று தியானிப்போம்.

 

உண்மை செல்வம் எது?

இந்த உலகில் செல்வங்களை, பொக்கிஷங்களை சேர்த்து வைப்பவர்களில் பெரும்பாலானோர் நிம்மதியாக தூங்குவதற்கு முடியாமல் சிரமப்படுகிறார்கள். காரணம் மத்தேயு 6.19ல் குறிப்பிடப்பட்டுள்ளது போல திருடர்களின் தொந்தரவு இங்கு ஏராளம் இருக்கிறது கொள்ளையடிப்பதற்காக கொலை செய்ய திருடர்கள் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற உலகில் தான் செல்வத்தை சேமித்து வைக்க விரும்பி முடிவில் பயனற்றுப்போகிறார்கள். ஆனால் அன்பை உள்ளத்தில் தரித்து, தன்னிடம் இருப்பதிலிருந்து எடுத்து, இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்களே இறைப்பார்வையில் செல்வந்தர்கள்இறைவன் இல்லாத செல்வம் பயனற்றதே.

 

இறைநம்பிக்கையை விட்டு, பணத்தின் மீது பற்றுதலுள்ளவர்கள் தான் பூமியிலே சொத்துக்களை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் இருப்பார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று 1தீமோத்தேயு:6.10 இல் சொல்லப்பட்டுள்ளது. பூமியில் சொத்துக்களை சேர்த்து வைப்பதையே நோக்கமாக வைத்து நாம் செயல்பட்டால் பல தீய குணங்களுக்கு அடிமையாக வேண்டிய சூழல் உருவாகும், இதனால் பரலோக வாழ்வை அனுபவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

 

உண்மை செல்வத்தை பாதுகாப்பது எப்படி?

நற்கிரியைகள் மூலம் அன்பை செயல் வடிவத்தில் வெளிப்படுத்தினால் இறையரசில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க முடியும். எளியவர்களை விசாரித்து விசாரித்து நேசித்து, எல்லாருக்கும் நன்மை செய்து, பகைப்பவர்களிடமும் பாசம் காட்டினால் இறையரசில் பொக்கிஷங்களை சேர்ப்பது நமக்கு சாத்தியமே.

 

பூமியில் வாழும்போதே இறையரசில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க இயேசு கிறிஸ்து நமக்கு வாய்ப்பு தருகிறார். மத்தேயு:6.34-40 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பார்த்தால் எப்படி இறையரசில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதுக் குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்தல்; தாகமாயிருந்தவர்களின் தாகத்தை தீர்த்தல்; ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்குதல்; உடல்நலம் குன்றியவர்களை விசாரித்தல்; மற்றும் அந்நியர்களை ஒதுக்காமல் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய இவையனைத்தும் "அன்பு" என்னும் உண்மை செல்வத்தினால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

 

அப்போஸ்தலனாகிய பவுலும் மிகவும் மேன்மையுள்ளதாகவும் விலையேறப்பெற்றதாகவும் மற்றும் முக்கியத்துவம் நிறைந்ததாகவும் கருதியது அன்பை தான்.  அன்பின் மகத்துவத்தை தெரிந்த ஆண்டவர் இயேசு (மத்தேயு:22.37-39)ல் தமது இரண்டு கற்பனைகளிலும் அன்பு கூற வேண்டும் என்பதை ஆணித்தரமாக அறிவிக்கிறார். பரிசுத்த பவுல் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தில் அன்பு எவ்வளவு உன்னதமானது என்பதை வெளிப்படுத்துகிறார். “அன்பே பெரியது, அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை" என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.

 

சிந்தனைக்கு…

உண்மை செல்வமாகிய அன்பு ஒரு மனிதனிடம் காணப்பட்டால் அவன் உலகிலேயே உயர்ந்தவனாக காணப்படுவான். இதற்கு ஒர் சிறந்த உதாரணம் அன்பை ஆடையாக அணிந்து, எளியவர்களை அரவணைத்து, சிறப்பாக தொழு நோயாளிகளுக்கு தொண்டு செய்த அன்னைதெரசா அவர்கள், ஆண்டவரின் கற்பனைகளை பின்பற்றி அன்னை தெரஸா காட்டிய அன்பினால் எண்ணற்ற மனிதர்கள் நன்மை பெற்றார்கள். நம்மால் இன்று எத்தனை பேர் நன்மை பெற்ற இருக்கிறார்கள்? என்பதை சற்று சிந்தித்து பார்ப்போம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு தரும் ஆசீர்வாதங்களால் அவரை மகிமைப்படுத்தும் வண்ணம், அவர் நிச்சயம் நம்மை அன்பினால் அலங்கரித்து இறையரசில், உண்மை செல்வங்களைச் சேர்த்து வைப்பவர்களாக மாற்றுவாராக.


Post a Comment

0 Comments