முகவுரை
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். "எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் (கடவுள்) செய்கிறார்" என்று திருமறையில் இருவர் சொன்னதாக ஒரே புத்தகத்தில் வருகிறது. ஒருவர் தேமானியனாகிய எலிப்பாஸ் (யோபு 5.9), மற்றொருவர் பக்தன் யோபு (9.10). வரிகள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களின் புரிந்துகொள்ளுதல் எப்படியிருக்கிறது? எலிப்பாஸ் யோபுவைக் குறைகூறும் வண்ணம், கடவுளின் செயல்களை இந்த பகுதில் சொல்லுகிறார். யோபு பில்தாத்துக்கு மறுமொழியாக கடவுளின் செயல்கள் மகத்துவமானதால், அவரிடத்தில் கெஞ்சதான் முடியுமென்று உரைக்கிறார். மனிதர்களின் புரிதல் மாறுதலாக இருந்தாலும், கடவுளின் குணாதிசயம் மாறுபடுவதில்லை என்பது உண்மை. அப்படியென்றால், நாம் என்ன செய்ய வேண்டுமென்று தியானிப்போம்.
1.இறையறிவே மேன்மையென ஒத்துக்கொள்வோம்.
எண்ணிமுடியாத என்ற பதம் எண்ணிக்கையை மதிப்பிடுவது சாத்தியமில்லை (Impossible to Count) என்பதைக் குறிக்கும் (யோபு 5.9) மனிதர்களால் எண்ண முடியாததால், இறையறிவை அவர்களால் எட்ட முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள வேண்டுமானால், தங்கள் அறிவு குறைவுள்ளது என்பதை உணர வேண்டும். ஆம், மனித அறிவால் கடவுளின் அதிசயங்களை புரிந்து கொள்ள முடியாது. அதை ஆராய்ந்து எண்ண முயற்சிப்பவர்கள் தோற்றுப் போவார்கள்.
2. இறைவனிடமே கேட்போம்
முற்பிதாவாகிய யாக்கோபு, கடவுளிடம், அவரது வாக்கைப் பற்றிக்கொண்டு, "உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே" (ஆதியாகமம் 32.12) என்று ஜெபித்தார். இஸ்ரவேலின் வாழ்க்கையில் எண்ணி முடியாத அதிசயங்களை செய்தது போல், அவரைத் தேடுவோரின் வாழ்விலும் செய்ய வல்லவர்.
3. இறைநம்பிக்கையில் வாழ்வோம்
ஆண்டவர் ஆபிரகாமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (ஆதி 15.5) என்றார். ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (ஆதி 15.06). ஆபிரகாமின் நம்பிக்கை அவருடைய வாழ்வில் எண்ணி முடியாத அதிசயங்களை காண செய்தது.
நிறைவுரை
இறையதிசயங்கள் மனிதனால் எண்ண முடியாதவை என்பதை உணர்ந்து, அவரைச் சார்ந்து வாழ வேண்டும். அதுவே சரியான அணுகுமுறை. அப்போது, எல்லாம் வல்ல அதிசய கடவுள், வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் நம்மையும் நம் சந்ததியையும் ஆசீர்வதித்து எண்ணி முடியாதளவிற்கு பெருகச் செய்வாராக, ஆமென்.
Sermon by
Meyego.
0 Comments