Ad Code

3. துயருறுவோர் பேறுபெற்றோர் | ஸ்.ஆபிரகாம் காட்வின் | Blessed are those who Mourn | மத்தேயு 5.4 Mattew

துயருறுவோர் பேறுபெற்றோர்

 


    ஸ். ஆபிரகாம் காட்வின்                                         கருவந்தா சேகரம்

              CSI திருநெல்வேலி திருமண்டலம்

BD - 1, ஐக்கிய வேதாகம கல்லூரி (UBS), புனே.  

 

click here to download pdf of Meditation 03

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மலை போதகம்  செய்யும்போது சொன்னது: "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." வேதத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தமுமும் அந்த வசனத்தை புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு துயரம் மற்றும் ஆறுதல் என்ற வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கற்றுக்கொள்வது நம் வாழ்வில் இறைவிருப்பத்தை நிறைவேற்ற வழிவகுக்கும்.

 

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்  (Blessed are those who Mourn)

 

இங்கு துயரம் என்பது கடவுளுக்கு ஏற்ற துயரத்தைக் குறிப்பிடுகிறதுஏனென்றால் இந்த துயரம் கொண்டவர்கள் பேறுபெற்றோர் என்று வேதம் சொல்லுகிறது. உலகப்பிரகாரமான வாழ்க்கையிலும் நமக்கு துயரத்தைத் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்; அதை நாம் பாக்கியம் என்றுகூறிட இயலாது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை πενθοντες (penthountes) ஆனது, நற்செய்தி நூல்களில் (மத் 2.18; 9.15; 24.30, லூக்கா 23.27), பிரிவினால் வரும் துக்கம், புலம்பல்கள் போன்ற உலகரீதியான துக்கத்தைக் குறித்தாலும், அப்போஸ்தலர்கள் பவுல் (1கொரி 5.2, 2 கொரி 7.7; 12.21) மற்றும் யாக்கோபு (யாக் 4.9) ஆகியோர், இந்த வார்த்தையை தங்கள் நிருபங்களில் ஆவிக்குரிய ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது நான் செய்த பாவத்தின் நிமித்தம் அல்லது மற்றவர்கள் செய்த பாவத்தின் நிமித்தம் துயரபப்படுகிறதை (Feel Guilty, Lament) கூறுகிறது.

 

உதாரணமாக, தாவீது தான் செய்த (சங்கீதம் 51) பாவத்தின் நிமித்தம் துயரப்படுவதை சொல்லலாம்.  திருத்தூதர் யாக்கோபு, ''நீங்கள் துயரப்பட்டு துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது" என்று மனந்திரும்ப அழைப்புக் கொடுக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாவது முறை அங்கு செல்கின்ற போது கொரிந்து சபையில் தவறு செய்தவர்கள், தாங்கள் செய்த பாவத்தினிமித்தம்  மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து துயரப்பட வேண்டுமோவென்று பயப்படுவதாக எழுதியுள்ளார் (2 கொரி 12.21).

 

இயேசுகிறிஸ்துவும் தம் மலைப்பிரசங்கத்தில், குறிப்பாக பாக்கியவான்கள் பகுதியில் இறையசைப் பற்றிதான் பேசுகிறார். ஆகவே, இங்கு துயரம் என்ற வார்த்தையை, தங்களுடைய பாவத்தினிமித்தமாக மற்றும் மற்றவர்களின் பாவங்களினிமித்தமாக துயரப்படுகிறவர்கள், மேலும் பரிசுத்தமாக வாழ்வத்தினிமித்தமாக கஷ்டங்களைச் சந்திப்பவர்களைக் குறிப்பதாக எடுத்துக்கொள்வதே சாலச்சிறந்தது. அவர்களைத் தான் பாக்கியவான்கள் (Extraordinary Blessings) என்று வேதம் சொல்லுகிறது.

 

ஆறுதலடைவார்கள் (will be Comforted)

           

ஆண்டவர் ஒருவரே ஆறுதலைக் கொடுக்கக்கூடியவர் என்பதுதான் உன்மை. தங்கள் இருதயத்தில் துக்கித்து, பாவத்திலிருந்து மனந்திரும்பி  அவருடைய பிள்ளையாக வாழ்ந்திட அர்ப்பணிக்கும் போது, கடவுள் ஆறுதலைக் கொடுக்கிறார். இங்கு ஆறுதல் என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் வரும் παρακαλέω (parakaleo) பதத்தின் வரையறையானது, (to call near) அருகில் அழைத்து நன்மதிப்புக் கூறுதல், அதாவது ஆற்றுதல்படுத்துதல் என்பதாகும். 2 கொரிந்தியர் 7:10 இல், பவுலடிகளார் சொல்லுகிறார்: “இறைவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.” உலக வாழ்க்கையில் படிப்பு வேலை , பொருள்கள் , பணம் etc போன்றவற்றின் மூலம் நமக்கு துயரம் வரலாம். அதற்கும் ஆண்டவர் தீர்வு கொடுத்து நம்மை ஆறுதல் செய்வார். ஆனால் இம்மைக்காக மாத்திரம் துயரமடையாமல் மறுமைக்காக நாமடையும் துயரம், நம் வாழ்வில் மேலான ஆறுதலைக் கொண்டுவரும்.

           

 

சிந்தனைக்கு…

 

இன்று நாம் தாவீதைப் போல நாம் செய்த பாவத்திற்காக வருந்தி துயரப்படலாம். பவுலைப் போல மற்றவர்கள் செய்த பாவத்திற்காக ஆண்டவரை நோக்கி அழுது துயரப்படலாம். ஆறுதலின் கடவுள் மெய்யான ஆறுதலையும், வெளி:21:4 இல் சொல்லப்பட்டுள்ளபடி, நம்முடைய கண்ணீரைத் துடைத்து, துயரமில்லாத நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தையும், எல்லாம் வல்ல கடவுள் நமக்குத் தந்தருளுவாராக.


Post a Comment

0 Comments