கனிவுடையோர் பேறுபெற்றோர்
டே. ஜோன்ஸ் ராஜாசிங் B.A, மருதடியூர், திப்பணம்பட்டி சேகரம்
CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 4, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.
தியான வசனம்: மத்தேயு 5:5 “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.”
முகவுரை
இயேசுகிறிஸ்து தம்முடைய மலைபிரசங்கத்தில் தன்னுடைய கொள்கைகளை மக்களுக்கு போதித்தார், அப்படி போதிக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றுதான் சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். இங்கு இயேசு மக்களுக்கு சாந்தகுணத்தோடு வாழ வேண்டும் என்கிறதான அழைப்பை கொடுக்கிறார். இந்த அழைப்பை ஏற்று அதின் படி நடப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது.
விளக்கவுரை
சாந்தகுணமுள்ளவர்கள்: சாந்தகுணம் என்பது நாம் செய்கிற ஒவ்வொரு செயலின் வெளிப்பாடு, இதை ஆங்கிலத்தில் Approach என்று சொல்லுகிறோம். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு ஒரு பிரச்சனை வரும் போது நாம் கேட்போம் அல்லவா, இதை நீ எப்படி கையாளப் போகிறாய் (Manipulation) அல்லது எப்படி அணுகுமுறை செய்ய போகிறாய் (Attitude) என்று, இதுவே ஒரு செயலின் வெளிப்பாடு. சாந்தகுணம் (πραΰς - praus - Meekness) என்பதற்கு கிரேக்க பதத்தில் ஒரு விலங்கானது தன்னுடைய எஜமானுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அடங்குவது (Approaching Attitude) என்று பொருள்.
சாந்தகுணம் இயற்கையாகவே ஒருவருக்கு இருப்பதில்லை; மாறாக இது கர்த்தர் கொடுக்கும் ஈவு. மோசே இயற்கையாகவே ஒரு கோபக்காரன், கொலை செய்கிறவன், கற்பனை பலகைகளை உடைத்தவன். ஆனால் பிற்காலத்தில் கர்த்தருடைய ஈவினால் மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் என்று நற்சாட்சி பெற்றான்.
யோவான் 10 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம், இயேசுவிற்கு விரோதமாக கூடி, தாக்க முற்ப்பட்டார்கள்; பிசாசு பிடித்தவன், பைத்தியகாரன் என்றெல்லாம் கடினமான வார்த்தைகளால் பேசினார்கள்; கல்லெறிய வேண்டும் என்று கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு அவர்களோடு சண்டையிடாமல், வாக்குவாதம் பண்ணாமல், அவர் வல்லமையை அவர்களுக்கு காண்பிக்காமல், அவ்விடத்திலிருந்து கடந்து சென்று தன்னுடைய சாந்தகுணத்தை காண்பித்தார். இங்கு இயேசுவின் அணுகுமுறை (Attitude) சாந்தகுணத்தை வெளிப்படுத்தியது.
பாக்கியவான்கள்: சாந்தகுணம் என்பது நாம் செய்கிற ஒவ்வொரு செயலின் வெளிப்பாடு. மக்களின் செயல்கள், சிந்தனை இவ்வாறாக இருக்கவே இயேசு இக்கட்டளையை போதித்தார். மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம், என்று இயேசு நமக்கு போதித்திருக்கிறார். இத்தகைய செயல்களில் நாம் பிரியமாயிருந்து அதை கைக்கொள்ளும் போது, பாக்கியவான்களாக ஆசீர்வதிக்கபடுகிறோம். இதைத்தான் சங்கீதக்காரரும் பாடுகிறார், அவருடைய கட்டளைகளையும் மிகவும் பிரியமாருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 112:1).
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்: சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் (மத்தேயு 5:5 b). இதை சங்கீதக்காரின் மொழியில் (சங்கீதம் 37:11) சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள், என்று காணலாம். ஆபிரகாம் லோத்து காரியத்தில் (ஆதி 13) ஆபிரகாமின் சாந்தகுணம் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை உரிமையாக்கிக் கொள்ள செய்தது.
நிறைவுரை
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவரை அவமானப்படுத்த எண்ணிய ஒருவர் உரத்தசத்தத்தோடு, “திரு. லிங்கன் அவர்களே! உங்களைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டாம், உங்கள் அப்பா தைத்த செருப்பைத்தான் நான் அணிந்து கொண்டிருக்கிறேன்” என்றார். உடனே சிறிது கூட கோபப்படாமல் லிங்கன் கூறினாராம், “நண்பரே! உங்களுக்கு நன்றி, இன்னும் நீங்கள் என் தந்தை தைத்த செருப்பை அணிந்து கொண்டிருக்கிறீர் என்றால் என் தந்தையின் தொழில் எவ்வளவு நேர்த்தியானது என்று எனக்குப் புரிகிறது, ஒருவேளை அந்தச் செருப்பு பழுதாகிப் போனால் ஜனாதிபதி மாளிகைக்கு தயங்காமல் கொண்டு வாருங்கள், நான் சரியாக தைத்துத் தருகிறேன்” என்று கூறினாராம். அதாவது லிங்கனை அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் தானே என்று அவமானப்படுத்தவே கூறிய அந்த நபரை லிங்கன் (Manipulation) கையாண்ட விதம்தான் சாந்தகுணத்தின் வெளிப்பாடு.
பிலிப்பியர் 4.5 கூறுகிறது, உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. இந்த வசனத்தின் படி நாம் சாந்தகுணத்தோடு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, நமக்கு எதிராக மக்கள் செயல்படும் போதும், கடினமான வார்த்தைகளை கொண்டு நம்மை பேசும் போதும் அதை நாம் எப்படி கையாளுகிறோம் (Manipulation) அல்லது எப்படி அணுகுமுறை (Attitude) செய்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
|
0 Comments