இரக்கமுடையோர் பேறுபெற்றோர்
எ. எபனேசர் ஜெயராஜ் B.A., ரெட்டியார்பட்டி, ஆழ்வாநேரி சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
click here to download pdf of Meditation - 06
தியான வசனம்: மத்தேயு 5: 7
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
இரக்கம் என்பது என்ன?
இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் மிகவும் கஷ்டப்படுகிறான், அல்லது மிகவும் துன்பப்படுகிறான் என்றால் அவன்மீது மனதுருகி (Compassionate), அவனுக்கு தேவையான உதவி செய்வது இரக்கம் (Merciful) என்று கூறலாம். பணரீதியாகவோ அல்லது பொருள்ரிதியாகவோ அல்லது நோயின்நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் மேல் கரிசனையுள்ளவர்களாய் இரங்கி, வாயின் வார்த்தைகளால் மட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்கின்றவர்கள் இரக்க குணமுடையவர்களாவர். இரக்கம் என்பது உதவி அல்லது நன்மைகள் செய்வது மட்டுமல்ல. மேலும், மன்னித்து ஏற்றுக்கொள்வதிலும், இயலாமையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது.
லூக்கா. 10:25-35 வரை நாம் வாசித்து பார்ப்போம் என்றால், நல்ல சமாரியனின் உவமையை இயேசு சொல்லுகிறார். இதில் துன்பப்படுகிற அந்த யூத மனிதனுக்கு தாங்கள் பகைவர்களாகிய கருதிய, அந்த சமாரியன் எவ்வாறு உதவுகிறானோ அதேபோலத்தான் நாம் பிறருக்கு இரங்கி உதவவேண்டுமென்று கிறிஸ்து நமக்கு கற்றுத்தருகிறார்.
இரக்கத்தின் விளைவு என்ன?
இரக்கத்தின் விளைவு ஒன்று, பாக்கியவான்கள்; மற்றொன்று, இரக்கம் பெறுதல். பாக்கியவான்கள் என்பது ஆண்டவர் நமக்கு கொடுக்கக்கூடிய பரம ஆசீர்வாதமான வாழ்வாகும்.இதைத்தான் திருமறை நமக்கு உணர்த்துகிறது: (நீதிமொழிகள். 19:17) “ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்”.
மத்தேயு 18. 23 – 35 வரை நமது ஆண்டவர் சொன்ன இறையரசைப் பற்றிய உவமை, இரக்கத்திற்கான மிகத் தெளிவான வரையறையையும் விளைவையும் கற்பிக்கிறது. ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டவன், பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, காலக்கெடு கேட்க, தலைவரோ இரக்கம் கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால், அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளரிடம் கடனைத் திருப்பித் கேட்டுக் கழுத்தை நெரித்தான். இவன் காலக்கெடு கேட்டும் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான் இதையறிந்த தலைவன் அவனிடம், “நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டு அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். இதுதான் இரக்கத்திற்கும் இரக்கமற்றத் தன்மைக்கும் உள்ள வேறுபாடாகும்.
சிந்தனைக்கு...
இயேசு நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார் என்று வேதத்தில் காணலாம். அப்படியென்றால், நன்மைசெய்கிறவராம் இயேசுவின் வழியை பின்பற்றுகிற நாமும், அவரைப் போல இரக்ககுணம் உள்ளவர்களாக வாழ வேண்டும். கரிசனையோடு பிறருக்கு உதவிகள் செய்வோம். நம்மை ஆசீர்வதிக்கிற எல்லாம் வல்ல கடவுள் இன்றும் என்றுமான சதாகாலங்களிலும் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.
0 Comments