Ad Code

16. பாவ நுகத்திலிருந்து விடுதலை | Freedom from the Burden of Sin | சங்கீதம் 32.1 Psalms

  Prepared by Meyego  

தியானம் : 16 / 13.03.2022
தலைப்பு : துன்புறுவோருடன் இணைந்து கொள்வோம்
திருவசனம் : சங்கீதம் 32.1 "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்."

முகவுரை: சங்கீதம் 32 பின்னணி

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். சங்கீதம் 32 இன் தலைப்பில், "மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஸ்கீல் என்று வரும் பன்னிரண்டு சங்கீதங்களில் இதுவே முதல் சங்கீதம். மஸ்கீல் என்ற என்பதற்கான எபிரேய வார்த்தைக்கு (maskil - Contemplation) "அறிவுறுத்தல் " என்று அர்த்தம்.  

இது ஒரு தவ சங்கீதம் (Psalm of Penitence), அதே நேரத்தில், இது கடவுளின் கிருபையின் அற்புதங்களில் மகிழ்ச்சியடையும் மீட்கப்பட்ட ஆத்மாவின் பாடலாக காணப்படுகிறது. இது போதனை மற்றும் அறிவுரை நிறைந்த தியானத்திற்கேற்ற சங்கீதமாகும். இது புனித அகஸ்டினுக்கு மிகவும் பிடித்த சங்கீதம். அகுஸ்டீன் அதை நன்றாக தியானிப்பதற்காக இறப்பதற்கு முன் தனது படுக்கைக்கு அடுத்த சுவரில் அதை பொறித்திருந்தார் என்பது வரலாறு.

விளக்கவுரை: பாவ மன்னிப்பே பாக்கியம்

"Blessed is he whose transgression is forgiven" பாக்கியம் என்றால் மிகப்பெரிய ஆசீர்வாதம். தாவீது, பெரிய ஆசீர்வாதம் என்பது கடவுளின் மன்னிப்பை பெறுவதே என்று சொல்லுகிறார்.  

இந்த சங்கீதம் 32 இன் முதல் இரண்டு வசனங்களில், பாவத்தை விவரிக்க தாவீது நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

1. மீறுதல் (Transgression): அத்துமீறல் என்பது , அதிகாரத்தை மீறுவது அல்லது போடப்பட்ட ஒரு கோட்டைக் கடப்பதாகும் (crossing a line).

2. பாவம் (Sin): பாவம் என்பது தவறுவது ஆகும். அதவாது ஒரு குறி தவறுவது அல்லது தவறவிடுவது என்பதாகும் (missing a mark).

3. அக்கிரமம் (Iniquity): அக்கிரம் என்பது வக்கிரம் (crookedness) மற்றும் திரித்து செயல்படுவது ஆகும்.

4. கபடம் (Deceit): கபடம் என்றால் வஞ்சகம் ஏமாற்றுதல் என்று பொருள். அதாவது, பாவ சிந்தனைகள், மனதில் வஞ்சகத்தோடு இருத்தல் என்று சொல்லலாம்.

மேலும், பாவத்தை நீக்க கடவுள் என்ன செய்கிறார் என்பதை விவரிக்க தாவீது நான்கு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

1. மன்னிக்கப்படுவது (Forgiven) என்பது ஒரு சுமையை நீக்குவது அல்லது கடனை தீர்ப்பதாகும்.

2. மூடப்பட்டது (Covered) என்பது முழுவதுமாக மறைக்கப்பட்டது என்பதைக் குறிக்கும். அதாவது பாவம் இனி அம்பலமாகாது; அது மூடப்பட்டிருக்கும்.

3. எண்ணாதிருத்தல் (Do not impute) என்பது கணக்கு வைப்பதற்காக எண்ணவில்லை. அதாவது ஒரு நபருக்கு எதிராக கணக்கிடப்படவில்லை என்பதாகும்.

4. ஆவியில் கபடமில்லை (No deceit in Spirit) என்பது பூரணமாக சுத்திகரிக்கப்பட்டதின் விளைவாக குற்ற உணர்ச்சி இல்லாத நிலையைக் குறிக்கிறது.

நிறைவுரை: விடுதலை வாழ்விற்கு வழி

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை வெளிப்படுத்தும் இந்த 32 ஆம் சங்கீதத்தில் கடவுளின் அன்பையும் மனுக்குலத்தின் நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடியும். தாவீது தன் நிலையைக் கூட இந்த சங்கீதத்தில் பாடியிருக்கலாம். குற்ற உணர்ச்சியில் கதறிய நிலையை 3 & 4 ஆம் வசனத்தில் சொல்லுகிறார். 5 ஆம் வசனத்தில் தாம் அறிக்கையிட்டதை சொல்லி கடவுள் தனக்கு தந்த விடுதலை வாழ்வைக் குறித்து பின்பகுதியில் பாடியுள்ளார். ஆம் நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டால், கடவுள் நம்மை மன்னித்து பாக்கிய வாழ்வை அருளிச் செய்வார். திருமறை சொல்லுகிறது (நீதிமொழிகள் 28.13): "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments