Ad Code

28. உடலுக்கு விளக்கு | SSD. டேனியல் | The Lamp of the Body | மத்தேயு 6.22-23

உடலுக்கு விளக்கு

சா. சாலொமோன் தேவதாசன் டேனியல்,  மனகாவலம்பிள்ளைநகர் சேகரம், 

CSI திருநெல்வேலி திருமண்டலம்         

 BD - 4, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.          

 

click here to download pdf of Meditation 28

தியான பகுதி: மத்தேயு 6:22-23

22கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்.

 

முகவுரை

நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். கண் (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெளிச்சம் என்பது ஒரு மிக அத்தியாவசியமான ஒரு காரியம். வெளிச்சம் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆண்டவராகிய கர்த்தர் உலகத்தை படைத்த போது முதலாவது வெளிச்சத்தை படைத்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கண்கள் இல்லாமல் நாம் யாரையும் பார்க்க முடியாது. ஏனென்றால் கண்களே உடலின் விளக்கு.  அதை சரியாக வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் முக்கியம்.

 

தியானம்

மத்தேயு 6:22-23 வசனங்களில் இயேசுவானவர் கண்களை குறித்துத் தெளிவாக சொல்கிறார் கண்கள் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது. நமக்கு அது விளக்காய் இருக்கிறது என்று சொல்கிறார். ஆகவே வெளிச்சம் எப்படி முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல நம்முடைய கண்களும் நம்முடைய சரீரத்திற்கு ஒரு மிக மிக முக்கியமான அவயவமாய் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவானவர் சொல்கிறார் உன் கண் வெளிச்சமாய் இருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாய் இருக்கும் உன் கண் கெட்டதாய் இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாய் இருக்கும். நம்முடைய கண்கள் வெளிச்சமாய் இருக்கிறதா அல்லது இருளாய் இருக்கிறதா என்பதை இந்த நேரத்திலே தற்பரிசோதனை செய்து கொள்வோம்.

 

ஒரு மனிதனுடைய கண்கள் அவனுக்கு விளக்காக, வெளிச்சத்தைத் தரும் கருவியாக இயேசு குறிப்பிடுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்பது, கண்கள் நம்முடைய மனது அல்லது காரியங்களை விளங்கிக் கொள்ளும் திறனுக்கு உருவமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மனது சீராக செயல்பட வேண்டும் என்பதை “உன் கண் தெளிவாயிருந்தால்” என்று இயேசு குறிப்பிடுகிறார். நம்முடைய கண்கள் சிறிய அவயவமாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் முழு சரீரத்துக்கும் கடந்து வருகிறது. நம்முடைய முழு சரீரமும் வெளிச்சமாய் இருக்கிறதா அல்லது இருளாய் இருக்கிறதா என்பதை இந்த சிறிய இரு கண்களே தீர்மானிக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமாகிய கண்களினாலே அநேகர் பாவத்திலே விழுந்ததை வேதத்திலே நாம் வாசிக்க முடியும். ஏவாள் தன் கண்களினாலே பாவத்தில் விழுந்தாள். லோத்து தன் கண்களினாலே சோதோம் கொமோராவை நல்ல தேசம் என்று தெரிந்தெடுத்து சென்றான். வாழ்க்கை தலைகீழாக மாறியது. தாவீது நல்ல ஒரு மனிதன் நல்ல ஒரு யுத்த வீரன் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று கர்த்தரால் சாட்சி பெற்றவன் ஆனாலும் தன் கண்களினாலே பாவத்திலே விழுந்தான். சிம்சோன் நியாயாதிபதி பலசாலியான ஒரு மனிதன் தன் கண்களினாலே பாவத்தில் விழுந்து தன் கண்களை இழந்தான். ஆகவே நம் பார்வைகளில் கவனமாகவும், ஞானமாகவும் இருக்க வேண்டும்.

 

சிந்தனைக்கு...

பேதுரு ஆண்டவராகிய இயேசுவானவரோடு கடலில் நடக்க முற்பட்ட பொழுது இயேசுவின் மேல் தன் கண்களை வைத்து தண்ணீரின் மேல் நடந்தான். ஆனால் எப்பொழுது தன் கண்களை அவருடைய முகத்திலிருந்து எடுத்து அலைகளை பார்த்தானோ காற்றை பார்த்தானோ உடனடியாக மூழ்கி போக வேண்டிய நிலை. நம்முடைய கண்கள் சிலுவையில் நமக்காக அறையப்பட்டிருக்கிற இயேசுவானவரை எதிர் நோக்கியிருக்கும் போது கண்கள் வெளிச்சமாய் இருக்கும். அப்போது நம்மால் மற்றவர்களை வெளிச்சத்தின் பாதையில் நடத்த முடியும். அவ்விதமாக நம்  சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக அனேகர் மெய்யான ஒளியாகிய கிறிஸ்துவினிடத்தில் வந்து சேருவார்களாக, ஆமென்.

 

Post a Comment

0 Comments