Ad Code

30. கவலைப்படாதே | தா. ரெபின் ஆஸ்டின் | Do not Worry | மத்தேயு 6.25 - 32

கவலைப்படாதே

தா. ரெபின் ஆஸ்டின் B.A,                                சிவசைலயனூர், புலவனூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம

 BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.          

click here to download pdf of Meditation 30

தியான பகுதி: மத்தேயு 6:25-32

25ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. 29என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

 

தியானம்

கவலையில்லாத மனுஷர் உண்டா? கவலையின்றி வாழ முடியுமா? கவலைக்குக் காரணம் என்ன? கவலைக்கு மருந்து என்ன? என்ற கேள்விக்களுக்கு விடைகளைத் தேடி தியானிப்போம். 'ஆகையால்' என்று இந்தப் பகுதி தொடங்குகின்றது. முந்தைய 24 ஆம் வசனத்தில் கடவுளா? செல்வமா? என்ற நிலையில் நாம் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் உலக கவலைகள் ஆட்கொள்ளுமோ? என்பதற்கு இந்தப் பகுதியில் தெளிவாக இயேசு கவலையற்ற வாழ்வைக் குறித்துக் கற்றுக்கொடுக்கிறார். கவலை என்பதின் (merimao – Anxiety) மற்றொருப் புரிதல் பயத்தோடிருப்பது (Being Fearful), அல்லது தூங்காமல் இருப்பது (Sleepless) என்பதாகும்.

           

அடிப்படைத் தேவைகளுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்பதை சீஷர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக இயேசு, வானத்துப் பறவைகளையும், வயல்வெளியில் உள்ள மலர்களையும் உவமையாக பயன்படுத்துகிறார். மலர்கள் கலிலேயா நிலப்பரப்பில் அதிகமாக காணப்படும். சாலமோன் ராஜா கூட இந்த மலர்களைப்போல ஆடைகளை உடுத்தியிருந்ததில்லை. ஏன் இயேசு சாலமோன் ராஜாவை குறிப்பிடுகிறார் என்றால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் சாலமொன் ராஜா மிகவும் வசதி படைத்தவர் (I இராஜாக்கள் 3:13) மற்றும் ஊதாரியாக செலவு செய்தவர். அப்படிப்பட்ட ராஜா கூட காட்டில் வளரும் பூவைப்போல வண்ண, உடைகளை அணியவில்லை. இந்த பறவை, பூக்களை எல்லாம் கடவுள் பராமரிக்கிறார், உணவு கொடுக்கிறார். யூதர்களுடைய நம்பிக்கையும் கூட கடவுள் வன விலங்கு, பறவைகளுக்கு உணவு அளிக்கிறார் என்று நம்புகிறார்கள் (சங்கீதம் 104: 14; 149:9).

 

கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் அதனால் நாம் உழைக்க வேண்டுவதில்லை என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் கவலைப்படுவதற்கும் (Anxiety, Worry) மற்றும் உண்மையான அக்கறைக்கும் (Genuine, Concern) வித்தியாசம் உண்டு. கவலை ஒரு மனிதனை செயல்பட்டால் முடக்கிவிடும். ஆனால் ஒரு காரியத்தின் மேல் உள்ள உண்மையான அக்கறை நம்மை செயல்பட வைக்கும். கடவுள் நம்மை வேலை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை மாறாக நம்முடைய தேவையை சந்திக்கும் கடவுள் மீது நம்பிக்கையை இழந்து கவலைப்பட்டு முடங்கி விடக்கூடாது. கடவுள் பறவைக்கு உணவை வாயில் கொண்டு கொடுப்பதில்லை, அதுவும் உணவை தேடுகிறது ஆனால் இந்த நாளுக்கு உணவு கிடைக்குமா, கிடைக்காதா என்று கவலைப்படுவது இல்லை காரணம் கடவுள் அவர்களை போதிக்கிறார். இதனால் அவர்களைக் காட்டிலும் விஷேசமுள்ள நம்மையும் கடவுள் போதிப்பார் என்கிற நம்பிக்கை வேண்டும்.

           

கவலைப்படுதினால் நம்முடைய சரீர அளவில் ஒரு முழம் (8 inches) கூட கூட்ட முடியாது என்று சீஷர்களுக்கு கற்று கொடுக்கிறார். இங்கே Helikian என்ற வார்த்தை நம்முடைய சரீர அளவைகுறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க மொழியில், Holikian என்ற வார்த்தை மனிதனுடைய உயரத்தை” (Heigm) குறிக்கிறது. பொதுவாக இங்கு இயேசு நமது வாழ்நாட்களை (Length of Life) பற்றி கூறுகிறார். ஏனென்றால், கவலைப்படுதினால் நம் வாழ்நாட்களில் ஒன்றை நாம் கூட்ட முடியாது. நாம் கவலைப்படும் போது நாம் விரைவாக முதுமையை அடைகிறோம் என்று அறிவியல் கூறுகிறது.

           

இறுதியாக, இயேசு கூறுகிறார் எதிர்காலத்திற்காக உங்களைத் தயார்படுத்துங்கள் என்றும் உலகத்தார் போல் வீணாக எதிர்காலத்தில் என்ன நடக்குமோ, எப்படி இருக்குமோ என்று கவலைப்படாமல், முழுவதும் பரலோக தந்தையை சார்ந்து இருக்க வேண்டும் மற்றும் முழுவதுமாக கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் வலியுறுத்தி, உங்களுடைய அடிப்படைத் தேவையெல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் இயேசு நம்பிக்கையூட்டுகிறார். இந்த நம்பிக்கை எல்லாவற்றைக் காட்டிலும் கடவுளுக்கு முதலிலிடம் கொடுப்பதில் வெளிப்படுகிறது.

 

சிந்தனைக்கு....

இன்றைய நாட்களில் மனிதர்கள் நன்றாக உழைக்கிறார்கள், வருமானத்தை சேர்க்கிறார்கள் என்றாலும் எதிர்காலத்தைக் குறித்த கவலை உண்டாகி அது பயமாக பின்பு நோயாக மாறி உயிரைப் பறித்துவிடுகிறது. அது மட்டுமல்ல ஆண்டவர் நம்மை ஊழியத்திற்கு அழைக்கும்போது நாமும் நம்முடைய பெற்றோர்களும் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படத் தொடங்குகிறோம். ஊழியத்திற்கு சென்றுவிட்டால் எப்படி வருமானம் வரும்? அடிப்படைத் தேவைகள் எப்படி பூர்த்தியாகும்? என்று எதிர்காலத்தை குறித்து கவலைப்பட்டு நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். ஆதித் திருச்சபையாரிடமும் பவுலும் பேதுருவும் எதைக் குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று வலியுறுத்துகிறார் (பிலிப்பியர் 4:6 ; 1 பேதுரு 5:7) ஆகவே எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் அறிந்திருக்கிற கடவுள் நமது எல்லா அடிப்படிடைத் தேவைகளையும் சந்திப்பாராக.

Do not worry, Be happy.           


Post a Comment

0 Comments