கடவுளா? செல்வமா?
ரா. பால் கிருபாகரன் B.Com, (BD - 4) மனகாவலம்பிள்ளைநகர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
குருகுலம் லுத்தரன் இறையியல் கல்லூரி.
click here to download pdf of Meditation 29
தியான வசனம்: மத்தேயு 6.24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
முகவுரை
அந்தப் பக்கம் என்னை இழுக்கிறார்கள்… இந்த பக்கம் என்னை இழுக்கிறார்கள் என்ற நிலையில் வாழ்வது சரியா? செல்வத்தைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை 'மேமன்'. இதன் வேர்ச்சொல் 'மன்' என்ற அரமேய வார்த்தை. இந்த வார்த்தைக்கு, 'நான் நம்பும் கைத்தடி' என்பது பொருள். அதாவது, என் வாழ்வைத் தாங்கும் கைத்தடியாக நான் எதையெல்லாம் கருதுகிறேனோ, அதுதான் என் செல்வம். மேமன் என்ற வார்த்தை பணத்தின் தேவமாக கருதப்பட்டது. 'இந்தக் கைத்தடி வேண்டாம். ஏனெனில் நான் உன்னையே தாங்கிக் கொள்கிறேன்' என்கிறார் நம் தந்தையாம் கடவுள்.
செல்வமா? கடவுளா?
கைத்தடியா? கட்டின்மையா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுமுன் சில வினாக்களை எழுப்புவோம்…
'நீங்கள் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது' என்று சொல்லும் இயேசு, அந்த இரு தலைவர்களாக, 'செல்வத்தையும் கடவுளையும்' முன்வைக்கின்றார். இவர்கள் இருவரும் இரு தலைவர்கள் என்றால், இவர்கள் இருவரும் சமமானவர்களா?
'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை'
என்கிறது திருக்குறள். பொருளையும், அருளையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நம் தமிழ் மரபில், 'அறம், பொருள், இன்பம்' என முப்பால் பருகிய நாம், செல்வத்திற்கும், கடவுளுக்கும் இடையேயான கோட்டை எப்படி வரைவது?
இப்படி இருக்க, இயேசுவின் இந்தப் போதனையை நாம் எப்படி புரிந்து கொள்வது?
இயேசுவின் சமகாலத்தில் நிலவிய தலைவர்-அடிமை பின்புலத்தில்தான் இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்கின்றார். ஒரு அடிமை இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்வதால் வரும் கஷ்டத்தை இயேசு நேரில் கண்டிருக்கும் அல்லது கேட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
காலங்காலமாக மனிதர்கள் கடவுளின் இடத்தில் செல்வத்தை மட்டுமல்ல, பெயர், புகழ், பதவி, பாராட்டு, ஆகியவற்றையும், அத்தோடு சேர்த்து கவலை, கண்ணீர் ஆகியவற்றையும் வைத்திருக்கின்றனர். இயேசுவின் போதனை இதுதான்: 'நீ பிளவுபட்ட மனத்தோடு இருக்கக்கூடாது!' செல்வம் பின்னால் போக வேண்டாம் என சொல்லவில்லை. செல்வம் பின்னால் போகிறாயா?. அத்தோடு மட்டும் போ. அதை விட்டுவிட்டு, 'கடவுளும் வேண்டும் கொஞ்சம்' என்று சஞ்சலப்படாதே என்கிறார். ஆக, கடவுள் பின்னால் சென்றாலும், செல்வம் பின்னால் சென்றாலும் முழு உள்ளத்தோடு - அதாவது, பிளவுபடா உள்ளத்தோடு - செல்வது அவசியம்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது' என்பது இயேசு அறுதியிட்டு முன்வைக்கும் வாக்கியமாக இருக்கிறது. ஒருவரை 'வெறுத்து,' மற்றவரை 'அன்பு செய்வார்,' என்றும், ஒருவரைச் 'சார்ந்து கொண்டு,' மற்றவரைப் 'புறக்கணிப்பார்' என்றும் இரண்டு இணைவு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு. இங்கே 'வெறுப்பது,' 'அன்பு செய்வது,' 'சார்ந்திருப்பது,' 'புறக்கணிப்பது' என்பவை வெறும் உணர்வுகள் அல்ல. மாறாக, அவை செயல்கள். எப்படிப்பட்ட செயல்கள். ஒருவரைத் தேர்ந்து கொள்வதன், மற்றவரை தேர்ந்து கொள்ளாததன் செயல்கள். ஆக, கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்வது என்பது, எதை நாம் தேர்ந்து கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது.
இயேசுவின் சீடர்கள் பிளவுபட்ட உள்ளம் கொண்டிருத்தல் கூடாது என்பதுதான் மலைப்பொழிவின் சாராம்சமாக இருக்கிறது. ஆக, இறைவனைத் தேர்ந்து கொண்டு செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டும். அல்லது செல்வத்தைத் தேர்ந்துகொண்டு இறைவனைப் புறக்கணிக்க வேண்டும். 50-50 என்ற மனநிலை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
சிந்தனைக்கு…
இது எப்படி சாத்தியம்? சாத்தியம் என்றாலும் எல்லா நேரத்திலும் சாத்தியமா?
இதை வெகு எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் வாழ்வியல் சூழலில் இதன் பொருளை வரையறுப்பது கடினமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திருச்சபை மற்றும் அதன் தலைவர்கள் மற்றும் அதன் கண்காணிப்பாளர்கள் மேல் காலங்காலமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்களின் செல்வம் பற்றியதே. செல்வங்களைக் கொண்டு இவர்கள் பணி செய்கிறார்களா அல்லது பணி செய்வதால் செல்வம் சேர்க்கிறார்களா என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது.
இன்று யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?
சிந்திப்போம்... சீரமைவோம்
0 Comments