சொல்லும் செயலும்
ஜோ. ஆனந்த் ஐசக் ஜெயமோகன் கீரன்குளம் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம் (BD – 3) கால்வின் இறையியல் ஸ்தாபனம், ஹைதரபாத்.
click here to download pdf of Meditation 39
தியானப் பகுதி: மத்தேயு 7.21-23
21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
முகவுரை
ஒரு காரியத்தை சொல்வது எளிது, அதை கடைப்பிடிப்பது தான் கடினம். “திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாய் இருங்கள்" என்று யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் எழுதுகிறார். (யாக்கோபு 1:22). இறையரசில் இயேசுவோடு கூட இணைந்து வாழ வைக்க தான் அவர் இந்த பூமிக்கு வந்து இரட்சிப்பை ஏற்படுத்தினார். இறையரசில் பிரவேசிக்க நாம் பிதாவினுடைய சித்தத்தை செய்பவர்களாக இருக்க வேண்டும். பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே என்று இயேசுகிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில் சொல்லுகிறார் . அவர் அதில் சொல்லுகிறவனோ அல்லது கேட்கிறவனோ என்று எழுதவில்லை. பிதாவின் சித்தம் செய்யாமல் பரலோகராஜ்யம் செல்ல முடியாது. பிதாவின் சித்தம் என்ன என்று அறிந்து கொண்டால்தான் நாம் பிதாவின் சித்தத்தை சரியாய் செய்ய முடியும். கிறிஸ்தவ வாழ்விற்கு அடிப்படையான சில இறைவிருப்பங்களைத் தியானிப்போம்
தியானம்
நாம் பரிசுத்தமாக வேண்டும் என்பதே பிதாவினுடைய சித்தமாக இருக்கிறது என்று சொல்லி பவுல் தன்னுடைய தெசலோனிக்கருக்கு எழுதிய நிருபத்தில் எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெசலோனிக்கேயர் 4:3). ஏனென்றால் நாம் எல்லாரும் பாவிகளாக இருக்கிறோம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பை பெற்று பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்று பரிசுத்தமாய் வாழ அழைக்கப்படுகிறோம். சொல்லும் செயலும் என்னும் போது, ஒருவேளை நாம் பரிசுத்தத்தை குறித்து சொல்லியும் செய்யாது இருப்போமானால் அப்படியே நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும் பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று சொல்லி வேதவசனம் கற்றுக் கொடுக்கிறது. ஆகையால் நாம் பரிசுத்தமுள்ளவர்களாய்மாற அழைக்கப்படுகிறோம். கடவுள் எனக்குக் கற்றுக்கொடுத்ததை சுருக்கமாக நான் இங்கு பதிவு செய்கிறேன்.
நான் பரிசுத்தத்தை பிரசங்கித்தும்!
நான் பரிசுத்தமாய் வாழாதிருப்பேனானால்!
நான் தானே கைவிடப்படுவேன்!
"என்னுடைய பிதாவினுடைய சித்தத்தை செய்வதே என்னுடைய போஜனமாய் இருக்கிறது" என்று நாம் ஆராதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சொல்லுகிறார். அவரும் தன்னுடைய வாழ்க்கையில் தான் சொன்ன எல்லாக் காரியங்களையும் செய்கிறவராய் நல்ல முன்மாதிரியை வைத்து போயிருக்கிறார். அவர் பிதாவினுடைய சித்தத்தை செய்து வந்தார். ஆகையால் நாமும் தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்ய அழைக்கப்படுகிறோம்.
கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அதில் பிரவேசிப்பதில்லை என்று 21ஆம் வசனத்தின் பின்பகுதியில் பார்க்கிறோம். நாம் ஒரு வார்த்தை சொல்லியும் அதன்படி செய்யாதவர்களாக இருக்கும் பொழுது அதில் பிரவேசிக்க வாய்ப்பில்லை என்பதை இந்த வேத வசனத்தின் மூலமாக தெளிவாய் நாம் பார்க்க முடிகிறது. 22 மற்றும் 23ஆம் வசனங்களை தியானிக்கும் போது வார்த்தையைச் சொல்லியும் பிதாவின் சித்தத்தை செய்யாதவர்களுடைய காரியங்களை நாம் இந்த வசனங்களில் பார்க்க முடிகிறது. நாம் இயேசுவின் நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைக்கலாம், நாம் அற்புதங்களை செய்யலாம், இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தலாம். ஆனால் ஆண்டவர் அவர்களை குறித்து அக்கிரமச் செய்கைக்காரரே என்று அழைக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆகையால் நம்முடைய சொல்லும் செயலும் இணைந்திருக்க வேண்டும் நாம் எதைச் சொல்கிறோமோ அதை செய்கிறாய் வாழ அழைக்கப்படுகிறோம்.
சிந்தனைக்கு…
இந்த வேத வசனங்களில் இந்த கிரியைகளை செய்தால் ஒருவேளை நம்மை பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பதற்காக அல்ல என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கிரியைகளை நாம் செய்யவும் வேண்டும் நம்முடைய பரிசுத்த வாழ்க்கையை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் எதை செய்தாலும் பிதாவின் சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் சரியாய் நிறைவேற்றுகிறோமா என்பதையும் நிதானிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாய் நாம் இறைவனுடைய சித்தத்தை கவனமாய் செய்ய, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை பிதாவின் சித்தத்தோடு ஒன்றுபடுகிறதா என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
0 Comments