உங்கள் மகன் துன்மார்க்கனாகவும் குடிகாரனாகவும் ஆன பிற்பாடு கைகளைப் பிசைந்து கொள்வதால் பிரயோஜனமில்லை. அவன் சிறியவனாக இருக்கும்போதே அவனை நல் ஒழுக்கத்துக்குட்படுத்துங்கள். அவன் பாலகனாக இருக்கும்போதே உங்கள் ஜெபத்தோடும் கண்ணீரோடும் அவனைக் கிறிஸ்துவிடம் கொண்டுவாருங்கள்.
தாய்மார்களே, சோதனை நிறைந்த இடங்களுக்கு உங்களுடைய மகள்களை நீங்கள் செல்ல அனுமதித்தீர்களானால், அவர்கள் உங்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் காலம் வருவதற்கு அதிகநாள் செல்லாது. நமது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடியதை செய்துவிடுவோம். உலோகமானது உருகிய நிலையில் இருக்கும்போதுதான் அதை நமது இஷ்டப்படி வளைத்து நாம் விரும்பியவைகளை செய்ய முடியும். அது குளிர்ந்து கடினப்பட்டுவிட்டதானால், அதை எவ்வளவுதான் அடித்தாலும், நாம் விரும்பும் வடிவத்தைப் பெற இயலாது.
ஓ, நமது பொறுப்பில் விடப்பட்டிருக்கும் பிள்ளைகளை அவர்கள் நடக்க வேண்டிய வழியிலே நடத்தும்படிக்கு கிருபை பெறுவோமாக . அப்போதுதான் அவர்கள் தங்கள் முதிர்வயதிலும் அதை விடாமல் கடைப்பிடிப்பார்கள். சிறிய செடியாக இருக்கும்போதே வளைத்துத் திருப்பினால்தான் உண்டு. பெரிய மரமான பிற்பாடு அதை உங்களால் வளைத்துத் திருப்ப முடியாது . இதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள் . உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கும்போதே அதைப் பிடித்துக் கொள்ள விழிப்பாக இருங்கள் . இல்லையென்றால் உங்கள் பிள்ளைகள் பாவத்தில் விழுந்தபின்போ அல்லது பாதாளத்தில் அழியும்போதோ " ஐயோ , எனக்கு ஐயோ " என்று ஆத்துமபாரத்தோடு கண்ணீர் வடிப்பதால் பிரயோஜனம் ஒன்றுமில்லை .
கல்வியறிவில்லாத ஒரு ஏழைத் தாயின் துயரத்தை என்னால் ஒருபோதும் மறக்கவியலாது . அவரைக் கிறிஸ்துவிடம் நடத்துவதற்கு நான் கருவியாக இருந்தேன். கிறிஸ்துவுக்குள்ளாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு சிலகாலங்கள் இருந்ததை அறிவேன் . ஆனால் சிலகாலம் கழித்து அவர் மிகுந்த துயரத்தோடும் ஆவியில் கட்டுண்டவராகவும் இருந்ததைப் பார்த்தேன். " உங்களை வருத்தப்படுத்துவது எது? ” என்று கேட்டேன் . அவர் கூறிய பதில், "என் பிள்ளைகள்! என் பிள்ளைகள்,அவர்கள் எல்லோரும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். எல்லோரும் கடவுள் பக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் . என் கணவர் ஐந்தாறு பிள்ளைகளோடு என்னை விட்டுவிட்டு இறந்து போய்விட்டார் . நான் காலை முதல் இரவு வரை கடினமாக உழைத்தேன். இந்த பிள்ளைகளுக்கு உணவு அளிக்க வேண்டுமானால் அப்படி உழைத்தால் தான் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? என்னால் முடிந்த அளவிற்கு அவர்களை நன்றாக வளர்த்தேன்.
ஆனால், ஐயோ, நான் அவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து எண்ணிப் பார்க்கவில்லையே. எப்படி என்னால் எண்ணிப் பார்த்திருக்க முடியும்? நான் என்னுடைய ஆத்துமாவைக் குறித்தே நினைத்துப் பார்த்ததில்லையே. நான் இப்போது இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களோ உலகப்பிரகாரமாகவும் , கவலையீனமாகவும் இருக்கிறார்களே. இந்த நிலையை என்னால் மாற்ற முடியவில்லையே " என அழுதாள்.
தன் பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தினால் உந்தப்பட்டு. அவர்களிடம் சென்று அவர்களுடைய ஆவிக்குரிய நிலையைக் குறித்துப் பேசவேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டு, முதலாவதாக தனது மூத்த மகனுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறாள். அவனுக்கு இப்போது திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவனிடம் தனது மனந்திரும்புதலைக் குறித்து கூறி, தனது இரட்சிப்பையும், கர்த்தரில் அடைந்திருக்கும் மகிழ்ச்சியையும் பற்றி கூறத் தொடங்கும்போது, மகன் கொடூரமாக நகைத்து அவளை இகழ்ந்து பேசியது அவள் இருதயத்தை உடைத்துவிட்டிருக்கிறது. என்னால் இயன்ற அளவிற்கு அவளைத் தேற்றி ஆறுதல் அளிக்கத்தான் முடிந்தது.
சிறுபிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிற வாலிபவயதுள்ளவர்களுக்கு நான் கூறுகிறேன், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள். தவறவிட்டீர்களானால் நீங்கள் பின்னாளில் கதறவேண்டி வரும்!
Acknowledgement
சார்லஸ் ஸ்பர்ஜனின் போதனைகள் என்கிற புத்தகத்தில் இருந்து
'அன்பு மகனின் நலம் குறித்த கவலையான விசாரிப்பு' என்கிற தலைப்பில் சார்லஸ் ஸ்பர்ஜன் பிரசங்கித்த பிரசங்கத்தில் ஒரு சிறு பகுதி.
0 Comments