தியானம் : 26 / 22.05.22
தலைப்பு : ஞானம் கடவுளின் ஈவு
திருவசனம் : 1 இராஜாக்கள் 3.12 மு.உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்...
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். தலை சிறந்த ஞானி சாலொமோன் அராசனுக்கு கடவுள் ஈவாக ஞானத்தை கொடுத்தது குறித்து 1 இராஜாக்கள் 3.12 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். இறை ஞானம் எப்படிப்பட்டது? கடவுள் தரும் ஈவை நாம் எவ்வாறு பெறுகின்றோம்? மற்றும் எப்படி பயன்படுத்துகிறோம்? என்று இந்ததியானத்தில் தியானிப்போம்.
1. இறைவனே ஞானத்தின் ஊற்று
கொலோசெயர் 2.3 சொல்லுகிறது, (இயேசுவுக்குள்) அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. அப்போஸ்தலர் யாக்கோபு சொல்லுகிறார், விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது (யாக்கோபு 3:17)
2. இறைவனே ஞானத்தைத் தருகிறார்
நீதிமொழிகள் 2.6 சொல்லுகிறது: கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அப்போஸ்தலர் யாக்கோபு சொல்லுகிறார், உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர் (யாக்கோபு 1:5).
3. இறையச்சமே ஞானத்தின் தொடக்கம்
நீதிமொழிகள் 1.7 சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். நீதிமொழிகள் 8.13 இல் வாசிக்கிறோம்: தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் என்பது இங்குப் பயத்தை உணர்த்தாது. ‘யீரா' என்னும் எபிரேய வினைச் சொல்லுக்கு, ஆண்டவரை அன்புடன் ஏற்றுவழிபடுவது, அவருக்கு விருப்பமில்லாததைத் தவிர்ப்பது, அவரது திருவுளத்துக்குப் பணிந்து நடப்பது என்று பொருள்.
நிறைவுரை
திருமறை நமக்கு கற்றுத்தரும் பாடம் - "கடவுளே ஞானத்தின் ஊற்று, அவரே அதை மானிடர்க்கு வழங்குபவர்." அதைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட சாலொமோன் அதை முடிவுபரியந்தம் காத்துக்கொள்ளவில்லை. சுய வழிகளில் சான்று இறை ஞானத்தை விட்டு விட்டு இறைச்சமின்றி வாழ்ந்தான். முடிவில் அவன் நிலைமை மோசமானது. சீராக்கின் ஞானம் என்னும் தள்ளுபடி ஆகமத்தில் வருகிறது: இறைவனுக்கு அஞ்சிநடப்பதே ஞானத்தின் தொடக்கமாக ( 1 : 14) நிறைவாக ( 1 : 16) மணிமுடியாக ( 1 : 18)ஆணிவேராக (1 : 20) சாரமாகப் (1 : 1-12) போற்றப்படுகிறது. ஆகவே ஞானம் கிறிஸ்தவ அறநெறியஉருவாக்கும் பெரும் உந்துசக்தியாக இருக்கிறது. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments