முகவுரை
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். உலகில் எத்தனையோ காரியங்களை பார்த்து நாம் வியந்திருப்போம். அவை எல்லாம் வல்ல கடவுளின் செய்கைகள். ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பிரமிக்க வைக்கிறார் என்றால் மிகையாகாது. சங்கீதக்காரர் தாவீது பாடியுள்ளார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்"
(சங்கீதம் 139:14). ஆம் நம் ஆண்டவர் நம்மிலும், நம்முடைய வாழ்விலும் பிரம்மிக்கத்தக்க அதிசயங்களை செய்கிறார், இனியும் செய்வார்.
1. இறை படைப்பில் பிரமிப்போம்
கடவுள் நம்மை அவர் சாயலில் (God's image), அவர் ரூபத்தில் (God's Likeness) படைத்திருக்கிறார். பிரமிப்பு என்பது பயத்தோடு கூடிய வியப்பு (To frightened) எனலாம். இன்றைய விஞ்ஞானமும் மருத்துவமும் கூட மனித உடலமைப்பு, உளவியல் கூறுகள் குறித்து எவ்வளவு தான் ஆராய்ச்சிகள் செய்தாலும், அவையெல்லாம் பிரமிப்பில் மலைத்துப் போய் நிற்கின்றன. நம் சரீரமே கடவுளால் மட்டுமே பிரமிக்கத்தக்க அதிசயங்களை செய்ய முடியும் என்பதற்கான தலைசிறந்த சான்று (சங் 139.14மு).
2. இறை செய்கைகளில் பிரமிப்போம்
கடவுளின் கிரியைகள் அதிசயமானவைகள் (சங் 139.14ந). நம்மை சுற்றியுள்ளவையெல்லாம் கடவுளின் அதிசயமான கிரியைகளை விவரித்துச் சொல்லுகின்றன. மேலும் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைக் கண்ட யாவரும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள் என்று வாசிக்கிறோம். உதாரணமாக, யவீரு மகளை உயிர்ப்பித்தல் (மாற்கு 5.42), கடலில் புயலை அமர்த்துதல் (மாற்கு 6.51). இவ்விதமாக நம்முடைய வாழ்விலும் கடவுள் நாம் ஆச்சரியப்படும் வகையில் நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார்.
3. இறைநம்பிக்கையோடு பிரமிப்போம்
என் ஆத்துமாவுக்கு நன்றாய் (utterly) தெரியும் (சங் 139.14பி) என்பது இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அப்போஸ்தலர் 8.13 சொல்லுகிறது, "சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்." விசுவாசிக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயங்கள் நடைபெறுகின்றது; பிரமிக்கத்தக்க அதிசயங்கள் நடைபெறும் போது, விசுவாசம் வலுப்பெறுகின்றது.
நிறைவுரை
என் கண்ணெதிரே இருக்கும் காரியங்களை எப்படி செய்து முடிப்பேன்? எப்படி இவையெல்லாம் நடக்கும்? என் சரீர வியாதிக்கு தீர்வு என்ன? என்று பல குழப்பங்களோடு திகைத்துக் கொண்டிருக்கிறோமோ? நாம் கடவுளை நம்பினால், நாமே பிரமிக்கும்வண்ணம் நம்மை நடத்துவார். நம்மை அதிசயமாய் படைத்தவர் நம்மை குணமாக்குவதும் அதிசயமே. நம் குறைகளை நிறைவாக்குவதும் அதிசயமே. நாம் பிரமிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் நம்மை வழி நடத்தும் கடவுளைத் துதித்து மகிழ்ந்து, புதிய அதிசயங்களை காண்போம். இறையாசி உங்களோடிருப்பதாக. ஆமென்.
0 Comments