பாவ சஞ்சலத்தை நீக்க... பாடலை இயற்றியவர் ஜோசப் ஸ்கிரீவன் என்பவர் 1819 ம் ஆண்டு அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். தூய திரித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவருக்கு திருமணம் நிச்சைக்கப்பட்டது.
மண நாளுக்கு முந்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றை கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்துக்கொண்டு உதவிச் செய்யக் கூடாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அதனால் அவர் மனநிலையும் பாதிக்கப்பட்டது. இத்துயரத்தை மறக்க 1845ல் தமது 25 ஆம் வயதில் கனடா சென்றார்.
ஆண்டுகள் உருண்டோடின. ஸ்கிரீவன் "பிளைமவுத் சகோதரர்" என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மணநாளும் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன் அந்த சபையில் சேர விரும்பிய அவளுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது. அதைத் தொடர்ந்து அதிக காச்சல் வந்தது அவள் மரித்துப் போனாள்.
இத்திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பியிருந்த ஸ்கிரீவனின் தாயார் தாங்கமுடியாத துயரத்துக்குள்ளானார். தனது வேதனையின் மத்தியிலும் தன்னை நினைத்து வருந்தும் தாயை ஆறுதல் படுத்த ஸ்கிரீவன் 1855 ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை எழுதினார்.
இப்பாடலுக்கு ஸ்கிரீவன் கொடுத்த தலைப்பு "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்பதே. அவரை பராமரிக்க வந்த நண்பர் இப்பாடலின் கைப்பிரதியைப் பார்த்தார். அதைப்பார்த்து மனம் நெகிழ்ந்தவராக ஆச்சரியத்துடன் இப்பாடலை இயற்றியது யார்? என்று கேட்டார். அதற்க்கு ஸ்கிரீவன் "நானும் ஆண்டவரும் சேர்ந்து இயற்றினோம்" என்று தாழ்மையாய் பதிலளித்தார்.
இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் இயற்றப்பட்ட இப்பாடல் சாங்கியின் முதல் தர நற்செய்தி பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. இப்பாடலுக்கு ஜெர்மனியில் உள்ள வழக்கறிஞர் சார்லஸ் கான்வர்ஸ் அருமையான ராகம் கொடுத்தார்.
ஸ்கிரீவன் தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம், வறுமை, மற்றும் மன வியாகுலத்துடன் கழித்தார். இறுதியில் 1886ம் ஆண்டு தமது 66 வது வயதில் "நைஸ்லேக்" என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து மரித்தார்.
உலகமெங்கும் பல உயிர்மீட்சி கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும் இன்றும் பாடப்பட்டு வருகின்றது. பாமர மக்களும் எளிதில் புரிந்துக்கொள்ளும் இப்பாடல் உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழப்பட்டது.
இதோ அந்த பாடல் வரிகள்....
பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்ப்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்
கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்பை
தீய குணம் மாற்றுவார்
பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே
ஒப்பிலுலாத பிராண நேசா
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா
உம்மை நோக்கி கெஞ்சுவோம்.
0 Comments