"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.
1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது.
இதை நினைவுகூரும் வகையிலும் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான இம்மாவட்டத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும் செப்டம்பர் 1 அன்று திருநெல்வேலி தினம் என கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி, நெல்லை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியின் சாட்டிலைட் படத்தில் நகர் சுற்றி நெல்வயல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக கூறுவதுண்டு.
திருநெல்வேலி, திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என்று மூன்று நிர்வாக மையங்களாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மக்கள் தொகை, வருவாய் ஆகியவற்றை கொண்டு 1999ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 1990ம் ஆண்டிற்கு முன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிந்து தனி மாவட்டமானது.
திருநெல்வேலி அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி அல்வாவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியால் நகரம் செழிப்புடன் காணப்படுகிறது. நெல்லையின் முக்கிய கல்வி மையமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் விளங்குகிறது.
1 Comments