இன்றைக்கு பெரும்பாலான சபைகளில் ஆசீர்வாதத்தட்டு இல்லாத பண்டிகைகள் இல்லை. உண்மையிலேயே இது சரியான முறையா? ஆசீர்வாதத் தட்டால் ஆசீர்வாதம் கிடைக்குமா? பரிசுத்த வேதம் என்ன சொல்லுகிறது? இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆசீர்வாதத்தட்டின் தவறான நோக்கங்கள் என்ன?
1. சபையின் வருமானத்தை அதிகரித்து, ஆலய தேவைகளை இந்த பணத்தின் மூலம் சந்திக்க முற்படுதல்.
2. ஆசீர்வாதத்தட்டு என்னும் சடாங்காச்சாரமான முறையில் பொருத்தனை செய்தல்.
3. ஆசீர்வாதத்தட்டை எடுத்து வீட்டில் வைத்தால் இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதம் என்ற மூடநம்பிக்கை.
4. ஆசீர்வாதத்தட்டை என் குடும்பம் சார்பாக ஆலயத்தில் வைக்கிறேன் மற்றும் எடுக்கிறேன் என்ற பெருமை.
1. சபைக்கு வருமானம் திரட்டும் வீண் முயற்சி
சபையை நடத்த நிதி முக்கியம். அதற்காக தவறான முறைமைகளை, வேதத்திற்கு முரண்பாடான மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தி நிதி திரட்டுவது என்பது சரியான யுக்தி இல்லை. "ஆசீர்வாதத் தட்டை எடுத்துச் செல்லுங்கள், அது தான் ஆசீர்வாதம்" என்று பொய் தானே சொல்லக் கூடிய நிலை இன்று உள்ளது. காணிக்கையை அள்ளி அள்ளி தான் கொடுத்து மட்டும் தான் ஆசீர்வாதம் என்றால் ஏழைகளின் நிலைமை என்னவாகும்?
கிபி.15-16 ஆம் நூற்றாண்டுகளில் பாவமன்னிப்பு சீட்டு (Indulgence) விற்று புனித பேதுரு பேராலயம் கட்ட போப் முற்பட்ட போது, மார்டின் லூதர் போன்ற சீர்த்திருத்தவாதிகள் எதிர்த்து வெற்றி கண்ட வரலாறை யாரும் மறுக்க இயலாது. இன்றைக்கும் இந்த நிலை நீடிக்கிறது என்றால் இன்னொரு சீர்திருத்தம் காலத்தின் கட்டாய தேவை.
2. ஆசீர்வாதத்தட்டு என்னும் தவறான பொருத்தனை
சபை எதை செய்கிறதோ, ஊழியர் எதை போதிக்கிறாரோ, அதுவே பெரும்பாலான சபையாரின் வாழ்விலும் இருக்கும். அதில் ஒன்று தான் ஆசீர்வாதத் தட்டு என்று பொருத்தனை செய்தால் நினைத்தது கிடைக்கும் என்ற செயல்பாடு. கடவுளுக்கு பொருத்தனை செய்வது தவறல்ல. எந்த நோக்கத்தில் எதை செய்கின்றோம் என்பது முக்கியம்.
ஏலம் (Auction) விடும் முறை எப்போது வந்தது? மிஷனரிகளின் காலம் முதற்கொண்டே ஏலம் விடும் இருக்கிறது. பணமாக காணிக்கை படைக்க இயலாதவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வராத வண்ணம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் ஏலம் முறைமை வந்தது. தங்கள் விளைச்சலை ஆலயத்தில் படைப்பார்கள். பணம் வைத்திருப்போர் அவற்றை எடுத்துச் செல்வர். இது ஒரு பண்டக மாற்று முறைமை போல் தான். இன்றைக்கு ஏலம் என்ற பெயரில் என்னவெல்லாமோ சபைகளில் நடப்பது வருத்தத்திற்குரியது.
3. ஆசீர்வாதத் தட்டில் ஆசீர்வாதமில்லை
ஆசீர்வாதத்தட்டு ஆலயத்தின் ஆல்டரில் வைத்து ஊழியரால் ஜெபித்து தரப்படுவதால் நிறைவான ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள். வேதம் எங்கு சொல்லுகிறது? "இதைக் கொடுத்தால் தான் ஆசீர்வதிப்பேன்" என்று கடவுள் எப்போது சொன்னார்? உபாகமம் 28.2 என்ன சொல்லுகிறது? "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்."
இதில் வருத்தமான செயல் என்னவென்றால், இன்னும் கடன் வாங்கி ஆசீர்வாதத்தட்டை வைக்கிறவர்கள் மற்றும் எடுக்கிறவர்கள் உண்டு. கடன் தான் ஆசீர்வாதத்தின் அடையாளமா? ஆசீர்வாதத்தட்டை வைப்பவர்களும் எடுப்பவர்களும் குறுக்கு வழியில் ஆசீர்வாதத்தை பெற்று விடலாம் என்பது அவநம்பிக்கை. எவரும் பணத்தைக் கொடுத்து கடவுளிடம் இருந்து தாம் எதிர்பார்க்கும் காரியங்களை பெற்றுக் கொள்ள முடியாது.
4. ஆசீர்வாதத்தட்டினால் வீண் பெருமை
இன்றைக்கு பெரும்பாலான சபைகளில் உயர் பதிவு, கட்சி, குடும்ப அந்தஸ்து, பெயர் மற்றும் புகழ் (Family Identity) அடிப்படையில் ஆசீர்வாதத்தட்டை வைப்பதும் எடுப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் என்ன பயன்? கடவுளின் வீட்டில் கடவுளுக்கு மகிமையை செலுத்துவதை விட யார் யாருக்கோ செலுத்துகிறோம். (Partiality between Rich and Poor) வைப்பதும் எடுப்பதும் பணக்காரன் என்றால் இல்லாதவர்களை அவமானப்படுத்துவது போல் இல்லையா?
சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று:- ஆசீர்வாதத் தட்டை வைக்கிறவர் மற்றும் எடுக்கிறவர் இரண்டு பேரும் 'தட்டு என்ற ஒன்று இல்லாமல்' ஆலயத்திற்கு கொடுக்க முன்வருவார்களா? 2 கொரிந்தியர் 9:7 சொல்லுகிறது: "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்."
திருச்சபை இதற்கு என்ன முடிவெடுக்கப் போகிறது?
கிறிஸ்துவுக்குள் நடத்திய ஆதி மிஷனரிகள் இதைக் கற்றுத் தராத, ஆனால், யாரோ சிலரின் தவறான வழிகாட்டுதலில், திருச்சபைக்குள் நுழைந்த இந்த ஆசீர்வாதத் தட்டு என்னும் தவறான சடாங்காச்சாரத்திற்கு திருச்சபை முற்றுப்புள்ளி வைக்க முன்வருமா? திருச்சபை விசுவாசிகள் தங்கள் தவறான நம்பிக்கைகளில் இருந்து மாற முன் வர வேண்டும். ஒவ்வொரு தனி மனித மாற்றம் தான் இதற்கு சரியான தீர்வாக அமையும். தைரியமாக இந்த விழிப்புணர்வை ஒவ்வொரு சபை விசுவாசிக்கும் கொண்டு போய் சேர்ப்பது ஊழியரின் தலையாய கடமை. கடவுள் விரும்பும் மாற்றத்திற்கான கருவிகளாக செயல்படும் போது, கடவுளின் ஒத்தாசை எப்போதும் உண்டு.
Acknowledgement
Gold & Rebi
1 Comments