முகவுரை:
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். உங்களையும் என்னையும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் ஆண்டவர் நடத்துகின்ற விதமே அதிசயம் தான். யோவேல் 2:26 சொல்லுகிறது: "நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்."
இந்த வசனத்தைக் கற்றுக் கொள்ளும் முன்பு, யோவேல் புத்தகம் குறித்து அறிந்து கொள்வது சிறப்பு. யோவேலின் புத்தகம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம். குறிப்பாக, மக்களின் பாவத்தைக் குறித்து எச்சரித்து, மீட்பின் செய்தியை அறிவிக்கும் நூல். அதன் உட்பிரிவுகள் இதோ:
யோவேல் 1.1 - 2.17 - கடவுளின் நீதியை எதிர்ப்பவர்களுக்கு வரக்கூடிய அழிவின் அடையாளமாக வெட்டுக்கிளிகள் விளைவிக்கும் அழிவு.
யோவேல் 2. 18 - 27 - மனந்திரும்பி வருவோருக்கு கடவுள் கொடுக்கக்கூடிய மீட்பு மற்றும் நல்வாழ்வுக்கான உறுதி.
யோவேல் 2.18 - 3.21 - கர்த்தருடைய நாளைக் குறித்ததான இறைவாக்குகள்
இன்று நம் தியானத்திற்கு ஆதாராமாக யோவேல் 2. 18 - 27 பகுதியை மாத்திரம் எடுத்துக்கொள்வோம்.
1. திரும்ப அளித்து அதிசயமாக நடத்துகிறவர்
யோவேல் 2.25. "நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்."
2. திருப்தியாக்கி அதிசயமாக நடத்துகிறவர்
யோவேல் 2.19 & 26 a. (19) "ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே; ;நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்; நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்." (26a) "நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்..."
3. வெட்கப்படாதப்படி அதிசயமாக நடத்துகிறவர்
யோவேல் 2.26 b. "இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்."
நிறைவுரை:
யோவேல் புத்தகத்தின் மையக் கருத்தே - "கடவுளாகிய ஆண்டவரிடத்தில் திரும்புங்கள்" (யோவே 2.13). மனந்திரும்புதல் என்பது நமது எண்ணம், பேச்சு, செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு நாம் கடவுளுக்கு பிரியமான முறையில் வாழும் போது, கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஏனெனில் அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவரை விசுவாசித்து அவர் விருப்பத்தை செய்ய முன் வருவோம். ஒவ்வொரு நாளும் நம்மை அதிசயமாக வழிநடத்திச் செல்வாராக. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments