கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா (நத்தார் தாத்தா, Santa Claus, சாண்டா குலோஸ்)எனப்படும் சாண்டா கிளாஸ் தான். இன்றைக்கு நாம் பார்க்கின்ற அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பின்னால் வரலாறே இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் கொண்ட பின்னணி சொல்லப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் தாத்தா என்ற மரபானது வரலாற்றில் நான்காம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வசித்த ஆயர், புனித நிக்கோலஸ் என்பவரை வைத்து சொல்லப்படும் மரபே பெரும்பாலும் நம்பப்படுகின்றது. இவர் கிரேக்கத்தில், பைசாந்தியப் பேரரசின் ஒரு மாகாணத்தின்(தற்போது துருக்கியில்) வாழ்ந்த கிறித்துவப் பேராயர் ஆவார்.
தனது வாழ்நாளில் ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பேராயர் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.
இந்த நிக்கோலஸ் என்பவர் பெருந்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் ஏழைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நல்ல குணம் படைத்தவர் ஆவார். குறிப்பாக, இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார்.
மேலும் இவர் ஏழ்மையில் வாழ்ந்த, இறை விசுவாசமுள்ள கிறித்தவர் ஒருவரின் மூன்று மகள்கள் வரதட்சணை நெருக்கடி காரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பரிசுகள் மூலமாக அதைத் தடுக்க பனிக்காலத்திற்கு ஏற்றாற்போல் ரோமத்திலான ஆடைகளால், வேடமணிந்து சென்று அக்குடும்பத்திற்கு உதவியதாக ஒரு மரபுவழிச் செய்தி உள்ளது.
இன்றைக்கு, சாண்டா குலோஸ் பொதுவாக, மகிழ்ச்சிகரமான, வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிறத்தினாலான கழுத்துப்பட்டி மற்றும் மணி கோர்ப்பதற்கான இடம், சில நேரம் கண்ணாடி அணிந்தும், சில நேரம் கண்ணாடி அணியாமல், சிவப்பு நிறத்தொப்பி மற்றும் கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் அல்லது இனிப்புகளுடன் வருபவராக சித்தரிக்கப்படுகிறார். உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.
இன்றைய நவீன உலகில், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது? இனிப்பு (சாக்லேட்) மற்றும் மரவிழா பரிசுகள் கொடுப்பதோடு திருப்தி அடைந்து விடுகிறோமோ? காணிக்கை வாங்கும் மாறுவேடக்காராக ஆக்கி விட்டோமோ? நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரபை இன்றைக்கு பொழுதுபோக்கு மற்றும் வியாபாரம் போல் மாற்றிவிட்டோமோ? சிந்திப்போம்... சிகப்பு ஆடை அணிந்தால் தான் என்றல்ல... அன்பு நிறைந்த உள்ளத்தோடு எல்லோருமே பிறருக்கு உதவிட வேண்டும் என்று திருமறை கற்றுத்தருகிறது. ஏதோ ஒரு வகையில் பிறருக்கு உதவி செய்வோம். முடிந்தவரை கிறிஸ்துமஸ் தாத்தா பவனி வாயிலாக இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து கிறிஸ்துவின் அன்பை பகிர்வோம்.
0 Comments