Ad Code

மாற்கு நற்செய்தி: ஓர் முகவுரை | Introduction to the Gospel According to St. Mark | Holy Bible

முன்னுரை
மாற்கு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது.

நூலின் பெயர்
மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மாற்கு எழுதிய நற்செய்தி, κατὰ Μᾶρκον εὐαγγέλιον (Kata Markon Euangelion = The Gospel according to Mark) என்பதாகும்.

நூலின் ஆசிரியர்
மாற்கு நற்செய்தி நூலை எழுதியவர் மாற்கு என்பது மரபு. திருமறையில் இந்நூலின் ஆசிரியர் குறித்து தெளிவாக இல்லா விட்டாலும், யோவான் மாற்கு என்பவராக தொடர்பு இருக்கலாம் (அப்போ 12:12, 25) என்று பலர் கருதுகின்றனர். இவர் உரோமையில் பேதுருவுக்குத் துணையாக இருந்ததாகவும் மேலும் பவுலோடு மிஷன் பயணம் செய்தவர் என்றும் அறியப்படுகிறது. மாற்கு என்னும் பெயர் எபிரெய பெயராகும். இவருடைய ரோமாபுரி பெயர் மார்கஸ் என்பதாகும். 

நூல் எழுதப்பட்ட சூழல் மற்றும் காலம்
நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி. 64ஆம் ஆண்டில் இருந்து 70ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். மாற்கு நற்செய்தி ஒருவேளை கலிலேயாவில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும், கி.பி. 70ஆம் ஆண்டில், உரோமைத் தளபதி (பின்னாள் பேரரசன்) தீத்துவின் காலத்தில் எருசலேம் திருக்கோவில் உரோமையரால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சியோடு தொடர்புடையதாகலாம் எனவும் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நூலின் பிரிவுகள்
1. முன்னுரை (1.1 - 13)
2. இயேசுவே மேசியா (1:14-8:21) 

2.1 இயேசுவும் மக்கள் கூட்டமும்
2.2 இயேசுவும் சீடர்களும்
2.3 இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்
2.4 இயேசு மெசியா என்னும் அறிக்கை

3. இயேசுவே மானிடமகன் (8:22-16:8) 

3.1 பயணம் செய்யும் மானிடமகன்
3.2 எருசலேமில் மானிடமகன்
3.3 மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல்

4. நிறைவுரை (16.9 - 16.20)

மாற்கு நற்செய்தியில் இயேசுவின் வேறு பெயர்கள் 
1. மானிடமகன், 
2. தாவீதின் மகன், 
3. இறைமகன், 
4. மெசியா, 
5. ஆண்டவர் 

நூலின் சுருக்கம்
மாற்கு எழுதின சுவிசேஷம் அளவில் சிறியது. மாற்கு நற்செய்தி நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம்மாறும் மக்கள் பாவமன்னிப்புப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிட மகன் (10:45) என்ற கருத்து, இரண்டாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. "இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்" என்னும் தொடக்க காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில், இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகின்றார்.

இறையியல் கருத்துக்கள்
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி" என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்குத் தலைப்பாக அமைகின்றன. நூலின் தொடக்கத்திலேயே இயேசு பற்றிய மையச் செய்தியை மாற்கு வாசகர்களுக்குத் தருகிறார் ( மாற் 1:1-13). இப்பகுதியில், இயேசு திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எனவும், இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் எனவும், அவர் சாத்தானின் சோதனையை முறியடித்து வெற்றிவாகை சூடினார் எனவும் மாற்கு தெளிவுபடுத்துகிறார். நற்செய்தியின் கதைக் கருவையும் அமைப்பையும் கதையின் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஓர் உச்சக்கட்டத்தை எட்டுவதையும் படிப்படியாக மாற்கு புவியியல் மற்றும் இறையியல் அடிப்படையில் விளக்குகிறார். . மத்தேயு எழுதின சுவிசேஷத்தைப்போல இந்த சுவிசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் பிரசங்கங்கள் விரிவாக எழுதப்படவில்லை. ஆயினும் இயேசுகிறிஸ்து நடப்பித்த அற்புதங்களுக்கு இந்த சுவிசேஷத்தில் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments