Ad Code

மத்தேயு நற்செய்தி: ஓர் முகவுரை | Introduction to the Gospel According to the St. Matthew | Holy Bible

முன்னுரை
மத்தேயு நற்செய்தி (சுவிசேஷம் - Gospel) திருமறையின் (Holy Bible) புதிய ஏற்பாட்டிலுள்ள (New Testament) நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவது நூலாகும். இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது.

நூலின் பெயர்
மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மத்தேயு எழுதிய நற்செய்தி, κατὰ Ματθαῖον εὐαγγέλιον (Kata Matthaion Euangelion = The Gospel according to Matthew) என்பதாகும்.

நூலின் ஆசிரியர்
இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் மத்தேயு (Apostle Matthew) தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகின்றது. நற்செய்தியைத் திருத்தூதர் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. 

நூல் எழுதப்பட்ட சூழல் மற்றும் காலம்
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். மத்தேயு நற்செய்தியில் கி.பி. 70இல் உரோமைப் படையினர் எருசலேமை அழித்துத் தரைமட்டமாக்கிய செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதால் (மத் 21:41; 22:7; 27:25) அந்நூல் கி.பி. 85 அல்லது 90ஆம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞரின் கணிப்பு. 

நூலின் பிரிவுகள்
திருச்சட்ட நூலில் (Torah) ஐந்து நூல்கள் அமைந்திருப்பது போல் இந்நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.

1. முன்னுரை: இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும் (1-2)
2. விண்ணரசு பறைசாற்றப்படல்
     2.1 நிகழ்ச்சி
     2.2 அறிவுரை (மலைப்பொழிவு 5-7)
3. விண்ணரசுப் பணி
     3.1 நிகழ்ச்சி
     3.2 அறிவுரை (திருத்தூதுப் பொழிவு 10)
4. விண்ணரசின் தன்மை
     4.1 நிகழ்ச்சி
     4.2 அறிவுரை (உவமைப் பொழிவு 13)
5. விண்ணரசின் அமைப்பு 
     5.1 நிகழ்ச்சி
     5.2 அறிவுரை (திருச்சபைப் பொழிவு 18)
6. விண்ணரசின் வருகை
     6.1 நிகழ்ச்சி
     6.2 அறிவுரை (நிறைவுகாலப் பொழிவு 24-25)
7. முடிவுரை: இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும் (26 - 28) 

மத்தேயு நற்செய்தியாளர் ஐந்து பொழிவுகள் (பேருரைகள்) வாயிலாக, மூல ஆதாரங்களைப் பயன்படுத்தி, இயேசு ஒருவரே நம் ஆசிரியர் (மத் 23:10) என நிலைநாட்டுகிறார்.

மத்தேயு நற்செய்தியில் இயேசுவுக்கு வழங்கப்படும் பெயர்கள்
1. இம்மானுவேல் (1.23)
2. கடவுளின் மகன் (2.15)
3. தாவீதின் மகன் 
4. கடவுளின் ஊழியன் (8.17)
5. கடவுளின் ஞானம் (11.19)

நூலின் சுருக்கம்
மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் வம்சாவளியை முற்பிதா ஆபிரகாமில் இருந்து ஆரம்பித்து, கிறிஸ்துவின் குழந்தைப் பருவம் தொடர்பான சில விவரங்களைக் குறிப்பிடுகிறார். அவை வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை: சான்றாக, மரியாள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த யோசேப்பின் குழப்பம், ஞானிகளின் மரியாதை, ஏரோதின் படைவீரர்களிடமிருந்து தப்பிக்க , அப்பாவிகளின் படுகொலை மற்றும் புனித குடும்பம் எகிப்திலிருந்த சம்பவம். யோவான் ஸ்நானகரின் பிரசங்ம், அப்போஸ்தலர்களின் அழைப்பு மற்றும் இயேசுவின் பொது ஊழியத்தின் முக்கிய நிகழ்வுகளை மத்தேயு பின்னர் விவரிக்கிறார். இறுதிப் பகுதி யூதாசின் காட்டிக்கொடுத்தல், சிலுவையில் அறையப்படுதல், அடக்கம் செய்தல் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விவரிக்கிறது.

இறையியல் கருத்துக்கள்
மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அறிவித்த போதனையின் மையக் கருத்து விண்ணரசு (கடவுளின் ஆட்சி) ஆகும். யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக மத்தேயு நற்செய்தி கூறுகிறது. இதனை உறு‌தி‌ப்படு‌த்த குறை‌ந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது. மத்தேயுவின் ஆண்டவரின் பிரார்த்தனை (6:9–15) கிறிஸ்தவ தேவாலயங்களின் வழிபாட்டு முறைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments