முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். நீங்களும் நானும் வழிபடுகின்ற கடவுள் செயல்பட இயலாத உயிரற்ற பொருள் அல்லர். அவர் செயல்படக்கூடியவர். அதுவும் அவர் அதிசயமாக, அதாவது வியத்தகு முறையில் செயல்படக் கூடியவர். அவரது செயல்களும் அதிசயமான செயல்கள் (கிரியைகள்) என்று திருமறை சான்று பகர்கின்றது. சங்கீதம் 139:14 இன் மையப்பகுதி சொல்லுகிறது: "உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." இந்த அதிசயமான கிரியைகள் கற்றுத் தரும் பாடங்கள் என்ன?
1. "கடவுள் அருகில்" என்பதை அறிவிக்கும் அதிசயமான இறைச்செயல்கள்
(சங்கீதம் 75. 1) ... உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
சங்கீதக்காரர் மேற்கண்ட வசனத்தில், கடவுள் நடப்பிக்கும் அதிசயமான கிரியைகள் மூலம், கடவுளின் திருப்பெயர் சமீபமாய் இருக்கிறது என்று தெளிவாக சொல்லுகிறார். அதாவது நம்மால் காண முடியாத கடவுளின் வெளிப்பாட்டையும், அவரது வல்லமையையும் மற்றும் அவரது நாமத்தையும், நாம் காணக்கூடிய வகையில் அல்லது அனுபவிக்க கூடிய வகையில் நடப்பிக்கும் அவரது வியத்தகு செயல்கள் மூலம் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
2. "தியானித்துப் பேச" அழைக்கும் அதிசயமான இறைச்செயல்கள்
(சங்கீதம் 145. 5 OV) உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.
(திருப்பாடல்கள் 145:5 CV) உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.
மேற்கண்ட வசனத்தில், மூல மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையான சியக் (שִׂיחַ - siach - meditate/ declare) என்ற வார்த்தை சிந்தித்து தியானிப்பதையும், மேலும் அதை அறிவித்து பேசுவதையும் குறிக்கிறது. இங்கு சங்கீதக்காரர் ஆண்டவரின் வியத்தகு செயல்களை தியானித்துப் பேசுவேன் என்று தன் அனுபவத்தை சொல்கின்றார். பரிசுத்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் நம்முடைய வாழ்வில் ஆண்டவர் நடப்பித்த அதிசயமான கிரியைகளை எந்தளவிற்கு தியானித்து பேசுகிறோம் என்று சிந்திப்போம்.
நிறைவுரை
நீங்களும் நானும் ஆண்டவரின் கரத்தின் அதிசயமான கிரியை என்றால் மிகையாகாது. அதிசயமாக நம்மைப் படைத்தவர் நம்மில் அதிசயமாக கிரியை செய்கின்றார். அந்த நம்பிக்கை நம்மிடத்தில் இருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் எதிர்மறையான காரியங்கள் எல்லாம் ஒன்றும் நம்மை செய்திட இயலாது. தினமும் அதிசயமான இறைச் செயல்களை அனுபவிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
0 Comments