Ad Code

வாச்மன் நீ வாழ்க்கை வரலாறு • Watchman Nee Life


"எனக்கு எதுவும் வேண்டாம்; ஆனால்
என் கர்த்தருக்காக எனக்கு எல்லாம்
வேண்டும்" என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்த வாச்மன் நீ என்ற திருத்தொண்டர் வாழ்வை குறித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவுக்குள்ளான இளமைப்பருவம் 
வாச்மன் நீ பெற்றோர்களுக்கு மொத்தம் ஒன்பதுப் பிள்ளைகள். அதில் மூன்றாவது மகனாக வாச்மன் நீ. 1903-ம் ஆண்டு சீனாவில் பிறந்தார். உலகத்தாரைப் போல வாழ்ந்த "நீ" தனது 18-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை ஒப்பு கொடுத்தார். "ஆண்டவரே இந்த உலகத்தை நான் இழந்து விட்டேன், உம் சிலுவை
இந்த உலகத்தை விட்டு என்னை நித்தியமாய்ப் பிரித்துவிட்டது: நான் வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். என்னை கிறிஸ் துவுக்குள் நீர் எங்கே நிறுத்துகிறீரோ அங்கே நிலைத்து நிற்பேன்'' என்று ஞானஸ்நானத்தில் சாட்சி கொடுத்தார். 

கிறிஸ்துவின் நற்செய்தி பணிகள்
தனது 21-வது வயதில் பட்டம் பெறுவதற்குள் அநேக எழுப்புதல் கூட்டங்களை நடத்தி, அநேகரை கிறிஸ்துவின் பக்கம் திருப்பினார். அவர் கூட்டம் நடத்திய இடங்கள் அனைத்தும் எழுப்புதல் அக்கினியால் நிறைந்தது. தன் 20-வது வயதில் "ஆவிக்குரிய மனிதன்" என்ற புத்தகத்தைத் தொடங்கி அனுபவக்குறைவின் காரணமாக எழுதாமல் நிறுத்திவிட்டார். மூன்று வருடம் கழித்து மீண்டும் அதைத் தொடங்கி தன் 25-வது வயது முடிவதற்குள் எழுதி முடித்தார். 
அவ்வளவு சிறிய வயதில் அவருக்கு இருந்த பரலோக ஞானம் அந்த புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து விடும்.

1934-ம் ஆண்டு கல்லூரி அழகி என்றழைக்கப்பட்ட சேரிட்டி சேங்க் என்ற சகோதரியை மணந்து கொண்டார். ''நீ'' தம்பதிகளுக்கு கடைசி வரை பிள்ளைப் பேறு
இல்லாமல் போயிற்று. சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற இடங்களுக்குச் சென்று அசைக்க முடியாத ஊழியங்களைச் செய்தார்.

கிறிஸ்துவுக்காக் சிறை வாழ்வு
1952-ம் ஆண்டு கம்யூனிஸ தீவிரவாதிகளால் நீ சுவிசேஷத்தின் காரணமாக சிறையாக்கப்பட்டார் அநேகக் குற்றசாட்டுகள் அவர்மேல் சுமத்தப்பட்டன. இருபது வருடம் ''நீ'' சிறையில் கழித்தார். ஆனால் ஒரு நாள் கூட தன் ஆண்டவரை உபத்திரவத்தில் மறுக்கவில்லை.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் தன் கணவரை வரவேற்க வேண்டும் என்று எண்ணிய சேரிட்டி சேங்க் 1971-ம் ஆண்டு அசந்தர்ப்பமாக கீழே விழுந்தார். இதனால் எலும்புகள் முறிந்தன. அவ்வருடமே அவர் மரித்தார். இதைக் கேட்ட ''நீ'' சோர்ந்து போனார். 1972-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியோடு தன் சிறையிருப்பை ''நீ" முடித்தார். அதே வருடம் ஜூன் முதல் நாளில் மகிமைக்குள் பிரவேசித்தார். அவர் எப்படி மரித்தார் என்பது இது வரை புரியாத புதிராக இருக்கிறது.

அவர் மரணத்திற்கு வறுமை காரணமா அல்லது நோய்க்கொடுமையா என்பதுத் தெரியவில்லை. அவர் மரிக்கும்பொழுது யாராவது அவரோடு இருந்தார்களா என்பதும் தெரியவில்லை, ஆனால் சீனாவின் சபையைக் குறித்து எழுதும் பொழுது இந்த விசுவாச வீரனின் வாழ்க்கையைத் தொடாமல் இருக்க முடியாது. சீனாவின் சபையை நெருப்பில் போட்டாலும் இந்த விசுவாச வீரனின் ஊழியமும், செல்வாக்கும் நிலைத்து நிற்கும். அவர் செய்த பிரசங்கங்கள் இன்றைக்கு புத்தகமாக வெளியிடப்பட்டு வருகிறது. காரணம்
அவர் ஆவிக்குரிய மனிதன் என்ற புத்தகத்தைத் தவிர மற்ற எந்த புத்தகத்தையும் உட்கார்ந்து எழுதவில்லை. 

Post a Comment

0 Comments