Ad Code

பண்டித ரமாபாய் வரலாறு (1858-1922) • Panditha Ramabai History

"என்னைப் பயன்படுத்தியவர், உங்களையும் பயன்படுத்த வல்லவர்" என்று சூளுரைத்து தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவுக்காக் சமூகப் பணிகள் வாயிலாக இறைப் பணியாற்ற இந்தியப் பெண்மணி பண்டித இராமாபாய் குறித்துப் பார்ப்போம்.

இளமைக் காலத்தில் ராமாபாய் 
ரமாபாய் அவர்கள் மகாராஷ்ரா மாநிலத்தில் ஒரு இந்து பிராமண குடும்பத்தில் ஆனந்த் சாஸ்திரி மகளாக 1858 ம் ஆண்டு பிறந்தார். இந்துமத பக்திநிறைந்த இவரதுகுடும்த்தினர் பல புண்ணிய ஸ்தலங்கள் சென்று நீராடி அங்கிருந்த ஆலயங்களில் பக்த கோடிகளுக்கு சமஸ்கிருதத்தில் சுலோகங்கள் உபநியாசம் செய்வது வழக்கம். ரமாபாய் அவர்களின் பெற்றோர்கள், பெண்கள் கல்வி அறிவு பெறமுடியாமலிருந்த சூழ்நிலையில் சிறுவயதிலேயே சமஸ்கிருத மொழியையும், பிற பிறமொழிகளையும் ரமாபாய்க்கு கற்று கொடுத்தார்கள். ஆகவே 12 வயதுக்குள் ரமாபாய் 18,000 த்திற்கும் அதிகமான சமஸ்கிருத மொழியில் மனப்பாடம் செய்திருந்தார்.

ரமாபாய் இந்து கோவில்களில் பழம் புராண பாடல்களை பாடி சொற்பொழிவு ஆற்றுவார். மேலும் மராத்தி, பெங்காலி, இந்தி, ஒரியா, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி உட்பட 8 மொழிகளில் பேசவும், எழுதவும் புலமை பெற்று விழங்கினார். ஆகவே கல்கத்தாவில் சமஸ்கிருதத்தில் சொற்பொழிவு நடத்த ஆரம்பித்தார். ஆகவே ஒரு பெண் கல்வி அறிவுடன், போதனைகளை செய்வதை பார்த்து அவருடைய கூரிய அறிவை பாராட்டி இவருக்கு பண்டிதர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவபடுத்தியது. இந்தியாவில் பண்டிதர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரமாபாய் அவர்களே.

கிறிஸ்துவின் அன்பில் ராமாபாய் 
ரமாபாயின் இளமை கால வாழ்க்கை கொடிய வேதனை நிறைந்த ஒன்றாகவே இருந்தது. 1877 ம் ஆண்டு ஏற்பட்ட கொடிய பஞ்சமும், காலரா நோயின் தாக்கத்தினால் ரமாபாயின் தகப்பனார், தாய், சகோதரிமார் யாவரும் ஒருவர்பின் மரித்துப்போனார்கள். இப்போது ரமாபாயும் அவருடைய சகோதரனும் தனித்து விடப்பட்டனர். ராமாபாயின் 18 ம் வயதில் திருமணமாகி இரண்டு வருடத்திற்குள் 7 மாத கர்பிணியாய் இருக்கும் போது அவருடைய கணவரும் மரித்துவிட்டார். தமது இளம் வயதிலேயே ரமாபாயின் வாழ்க்கை சூனியமாகிவிட்டது. 

ஒரு கால கட்டத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த ரமாபாயும் அவரது சகோதரனும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்தபோது கல்கத்தாவில் இருந்த ஒரு இந்துமத பிராமண சமுதாயத்திலிருந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நெகேமியா கோரே என்பவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியின் மூலமாய் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ரமாபாய் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து ஒரு வேதாகமத்தையும் கொடுத்தார். அன்றிலிருந்து ரமாபாய் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். கிறிஸ்தவ ஆராதனைகளும் ஊழியங்களும் அவரை அதிகம் கவர்ந்தன. இதன் மூலம் உள்ளத்தில் சமாதானமும் இயேசுவின் அன்பையும் உணர்ந்து கொண்டார்.

ராமாபாய்க்கு அநேக மிஷனெரிகளின் ஐக்கியம் கிடைத்தது. ஆகவே தன் மகள் மனோரமாவுடன் கல்கத்தாவிலிருந்து பூனா சென்றார். அங்கு வாழ்ந்துவந்த மிஷனெரிகள் திரு. ஆலென் மற்றும் திரு. ஹர்போட் கிறிஸ்துவைபற்றி அநேக சத்தியங்களை கற்று கொடுத்தார்கள். கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் படித்த ரமாபாய் கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அறிய விருப்பம் கொண்டார். ஆகவே கிறிஸ்துவை இன்னும் அறிந்துகொள்ள 1883 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு படிக்க சென்றார். இவரை ஏற்றுக்கொண்ட மிஷனெரிகள் இவரது விசுவாசத்தை பலப்படுத்தினார்கள். இங்கிலாந்து தேசத்தில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில் கலந்துகொண்ட ரமாபாய், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஆகவே தன்னை இயேசு கிறிஸ்வின் சேவைக்கு முழுமையாய் அற்பணித்து, அங்குள்ள ஆலயத்தில் ரமாபாயும் அவருடைய மகள் மனோரமாவும் 1883 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் நாள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

கிறிஸ்துவின் பணியில் ராமாபாய் 
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் கிறிஸ்துவுக்காய் வாழவேண்டும், செயல்படவேண்டும் என்று வாஞ்சையோடு ஜெபிபித்துக்கொண்டு இருக்கும் போது இயேசுவானவர் இந்திய தேசத்தின் பெண்களின் நிலையை ரமாபாய்க்கு கான்பித்தார். இதன் மூலம் இயேசு கிறிஸ்து மாத்திரமே பெண்களுக்கு இரட்சகர், அவர் ஒருவர் மாத்திரமே வாழ்க்கையில் நசிந்துபோன இந்திய பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். 

பின்னர் இந்தியாவந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பம்பாயில் சாரதா சதன் என்ற அமைப்பை தொடங்கி ஆதரவற்ற பெண்கள், விதவைகள், சரீரத்தில் ஊனமுற்ற பெண்கள் மற்றும் அனாதைகளின் மேம்பாட்டிற்காக செயல்பட்டார்கள். இளம் வயதிலே பல இன்னல்களை வாழ்வில் அனுபவித்தாலும் அவைகளை பொருட்படுத்தாது சமூகதீமைகளை வேருடன் அகற்ற தன்னை அர்ப்பணித்தார்.

சாரதா சதனின் தேவைகளுக்காக ரமாபாய் கர்த்தரை நம்பியே இருந்தார். அவரிடம் கானப்பட்ட தாழ்மை, அன்பு, பொருமை, தன்னலமற்ற செயல்கள் மற்ற பெண்களை கிறிஸ்துவண்டை வழிநடத்திற்று. சாரதா சதன் பெண்களால் நிரம்பி வழிந்தது. முதலில் இரண்டு இளம் விதவைகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர்.

இந்நிலையில் 1887 ம் ஆண்டு அமெரிக்கா தேசம் சென்ற ரமாபாய் அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் The High Caste Hindu Woman (உயர்ஜாதி இந்து பெண்) என்ற புத்தகத்தை வெளியிட்டு அதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருந்த சமுதாய கொடுமைகளான சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் (கணவன் மரித்தால் மனைவியை உயிரோடு எரித்தல்), தேவதாசி, பெண் குழந்தை நரபலி, இளம்பெண் திருமணம், பெண்களுக்கு கல்வி மறுத்தல், தாழ்ந்த குலபெண்களை இழிவுபடுத்துதல் போன்ற கொடுமைகளை எடுத்துரைத்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். 

இதை கேள்விபட்ட அமெரிக்க தேசத்திலுள்ள போஸ்டன்( Bosten) நகர மக்கள் இந்தியாவில் சிறுபிள்ளைகளுக்கு என்று ஒரு பாடசாலையையும் மற்றும் பெண்களுக்கு என்று விடுதியையும் கட்டி கொடுப்பதாக வாக்குக்கொடுத்தனர். இதினிமித்தம் 1889 ம் ஆண்டு ரமாபாய் அவர்கள் சாரதா சதனில் போதிய இடவசதி இல்லாததால் பூனா பகுதிக்கு இடம்மாறி அங்கு முக்தி மிஷன் என்று பெண்களுக்கான விடுதியை ஏற்படுத்தினார். முக்தி மிஷன் ஆதரவற்ற பெண்களின் அடைக்கல பட்டணம். திக்கற்ற பெண்களின் உறைவிடம் மற்றும் தேவதாசிகளின் தெய்வீக நிலையமாக செயல்பட ஆரம்பித்தது.

முக்தி மிஷனில் சிறுவர்களுக்கு கல்வி அறிவும் பெண்களுக்கு, தொழிற்கல்வியான தையற்கலை, துணி நெய்தல், பால் பண்ணை, கயிறு திரித்தல், தோட்ட வேலைகள் செய்தல், ரொட்டி செய்தல் போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். இதுதான் மகாராஷ்ட்ர மாநிலத்தின் முதல் பெண்கள் விடுதி ஆகும். 
இந்நிலையில் 1895-96 ல் ஏற்பட்ட கடும் பஞ்சம் மற்றும் காலரா போன்ற நோயின் காரணமாக பலர் மரித்துப்போனாலர்கள். இதனால் அநேக சிறு பிள்ளைகள், அநாதைகள், என்று 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் தேவதாசிகளிற் பிள்ளைகள் முக்தி மிஷனுக்கு அடைக்கலம் தேடி வந்தார்கள். இந்த விடுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான இளம் விதவைகள், தேவதாசி முறையிலிருந்து வெளியே வந்தவர்கள், ஆதறவற்ற பெண்கள், சரீர ஊணமுற்ற பெண்கள் மற்றும் வாழ்வில் சருக்கி விழுந்த பெண்கள் என்று மூவாயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் முக்தி மிஷனில் அடைக்கலம் புகுந்தனர்.

கண்ணொளி இழந்தவர்களுக்கு பிரெய்லி எழுத்து முறையை ரமாபாய் அம்மையார் ககற்று கொடுத்தார்கள். விதவை மறுமணத்திற்காக இந்துமத பூசாரிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து பத்திரிக்கைககளில் எழுதினார். இதையெல்லாம் பொறுக்கமுடியாத இந்துமத பூசாரிகள் ரமாபாயின் முக்தி மிஷனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். இந்துமத பூசாரிகள் ரமாபாயின் விரோதிகளாக மாறினார்கள். சமூக சீர்தீருத்தவாதியான பண்டித ரமாபாய் அம்மையாரை மிகவும் தரக்குறைவாக பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும், பேசியும் அவமானபடுத்தினார்கள். மேலும் இந்துமத பூசாரிகள் முக்தி மிஷனில் கட்டாய மதமாற்று நடைபெறுவதாக குற்றம்சாட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அநேக பெண்களை வெளியேற்றினார்கள். மேலும் அவர்கள் இந்துமத பெண்கள் தேவதாசியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு போகக்கூடாது என்று எச்சரித்து அடைக்கலம் புகுந்த பெண்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.

பண்டித ரமாபாய் அவர்களின் நற்செய்தி மூலம் முக்தி மிஷனில் 1905 ம் ஆண்டு ஜுன் மாதம் 29 ம் நாள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி வெளிப்பட்டது. முக்தி மிஷனில் அநேக பெண்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தங்கள் பாவங்களுக்காக மனம் கசந்து அழுது பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு பரிசுத்தமாய் வாழ அர்ப்பணித்தார்கள். ஆகவே முக்தி மிஷனில் ஒவ்வொருவரும் அனுதினமும் வேதவாசிப்பு, ஜெப ஜீவியம், வேததியானம் மற்றும் நற்செய்திபணியை அனேக பெண்கள் குழுவாக சேர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள். பல பெண்கள் சேர்ந்து மாட்டுவண்டியில் பயணம்செய்து சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்தியை பரப்பினார்கள். இப்டியாக முக்தி மிஷனில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாயிற்று.

பண்டித ரமாபாய் அம்மையாரின் முக்தி மிஷனில் இருந்து அநேக பெண்கள் நற்செய்தி பணியை மராத்திய மக்களிடம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் வேதாகமம் மராத்திய மொழியில் மொழிபெயர்க்க படாத காரணத்தால் பண்டித ரமாபாய் அம்மையார் எபிரேய மொழியையும், கிரேக்க மொழியையும் நன்கு கற்று பரிசுத்த வேதாகமத்தை மராத்திய மொழியில் மொழிபெயர்த்து மராத்திய வேதாகமம் அச்சடிக்கப்பட்டு வெளியிட்டார்கள். ஆகவே நற்செய்திபணி இன்னும் அநேக மராத்திய மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

இறுதிக்காலத்தில் ராமாபாய் 
இதற்கு இடையில் ரமாபாய் அம்மையாரின் சரீரம் மிகவும் பலவீனப்பட்டது. ஆகவே முக்தி மிஷனின் பொறுப்பை 1920 ம் ஆண்டு அவருடைய மகள் மனோரமாவிடம் கொடுத்து ஓய்வுபெற்றார். ஆனால் கடவுளின் திட்டம் வேறுமாதிரியாய் இருந்தது. 1921 ம் ஆண்டு மகாராஷ்ராவில் உள்ள அகமத்நகருக்கு ஊழியத்திற்கு சென்ற மனோரமா எதிர்பாராதவிதத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ரமாபாய் அம்மையாரின் சரீரம் மிகவும் பலவீனமாய் கானப்பட்டபடியால் மகள் மனோரமாவின் அடக்க ஆராதனையில் கூட பங்குபெறமுடியாமல் போயிற்று.

ரமாபாய் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் மகள் மனோரமாவை குறித்து எழுதும்போது கர்த்தரின் சித்தத்தின்படி மனோரமா இயேசுவானரின் சமூகத்தில் இருக்கின்றாள் என்றும் நானும் சீக்கிரத்தில் பரலோகத்தில் இயேசுவின் சமூகத்தில் இருக்கின்ற என் மகளை கான்பேன். ஆகவே இதைக்குறித்து தான் வருத்தப்படுவதில்லை என்று எழுதியுள்ளார்கள். அடைக்கலமற்றோரின் அன்னையாய் பண்டித ரமாபாய் அம்மையார் தன்னுடைய 64 ம் வயதில் ஏப்ரல் 5, 1922 ம் ஆண்டு நித்திய அடைக்கலத்திற்குள் பிரவேசித்தார்.

ராமாபாய் பெற்ற சிறப்புகள்
பண்டித ரமாபாய் அம்மையாரின் சேவையை பாராட்டி இங்கிலாந்து தேசம் உயர்ந்த விருதினை வழங்கி கௌரவபடுத்தியது. அது போல Church of England ம் இந்தியாவில் பெண்களுக்கு செய்த சேவையை கனம்பண்ணி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5 ம் நாள் திருச்சபைகளில் நினைவுகூர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றது.

இந்திய அரசாங்கமும் பண்டித ரமாபாய் பெண்களுக்கெதிரான சமுதான கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, பெண்களுக்கு செய்த சேவையை நினைவுகூர்ந்து 1989 ம் ஆண்டு சிறப்பு தபால்தலையை வெளியிட்டு மரியாதை செய்தது. பெண்களின் விடுதலைக்காய், மேம்பாட்டிற்காய், பெண்ணுரிமை போராளியாக உழைத்த, சமூக சீர்திருத்தவாதியாக, எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கிய பண்டித ரமாபாய் அம்மையார் நவீன இந்தியாவின் சிற்பி ஆவார் என்பது தான் உண்மை.

Post a Comment

0 Comments