"பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன், என்னை நாடிய என்னருள் நாதனே" என்ற வாக்கியத்திற்கு சொந்தகாரராகிய பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட ஜேசுட் மிஷனெரிகளில் சிறந்தவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற திருத்தொண்டரின் வாழ்க்கை மற்றும் ஊழியங்கள் குறித்து பார்ப்போம்.
இளமை காலம்
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்கள் இத்தாலி தேசத்தில் வெனிஸ் மாநிலத்தில் காஸ்திக்கிளியோனே என்ற இடத்தில் 1680 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் நாள் பிறந்தார். இவர் 1698 ம் ஆண்டு தன்னுடைய பதினெட்டாம் வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நற்செய்திபணி செய்ய தன்னை அற்பணித்து துறவு பூண்டார். இதற்காக ஆங்கிலம், போர்த்துகீசியம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை கற்றுக்கொண்டார்.
மிஷனரியாக அர்ப்பணிப்பு
பின்னர் ஜோசப் பெஸ்கி தன்னை யேசு சபை அல்லது Society of Jesus என்ற ரோமன் கத்தோலிக்க மிஷனெரி ஸ்தாபனத்தில் இணைத்துக்கொண்டார். ஆகவே வேதாக கல்லூரியில் சேர்ந்து இலத்தீன், எபிரேயம், கிரேக்கு மொழிகளில் வேதாகமத்தையும் இறையியலையும் நன்கு கற்று 1709 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரோமன் கத்தோலிக்க குரு பட்டம் பெற்றார்.
இந்திய மதுரையில் இறைப் பணி
ஜோசப் பெஸ்கி தன்னுடைய 30 ம் வயதில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நற்செய்திபணி செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு மதுரையில் இராபட் நொபிலி மூலம் ஆரம்பித்த மதுரை மிஷன் வருவதற்காக இத்தாலியில் உள்ள லிஸ்பன் நகரிலிருந்து இருந்து ஆறு மாத கடல் பயணம் மேற்கொண்டு இந்தியாவில் 1710 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவா வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து கொச்சி வந்து 1711 ம் ஆண்டு மதுரைக்கு அருகே காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர் சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், மற்றும் தமிழ் இலக்கியம் ஐந்து ஆண்டுகள் கற்று தமிழில் புலமை அடைந்தார். மேலும் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மலையாளம் போன்ற பிள மொழிகளையும் சிறப்பாக கற்றுத்தேர்ந்தார். ஜோசப் பெஸ்கி அவர்கள் முதல் ஆறு ஆண்டுகளில் திருவையாருக்கு அருகிலுள்ள எலக்குறிச்சி, கோட்டப்பாளையம், வடுக்கர்பேட்டை போன்ற இடங்களில் நற்செய்திபணி செய்து அநேகரை ஆத்தும ஆதாயம் செய்தார். ஆகவே அங்கு சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
பிரமாணர்கள் மத்தியில் இறைப் பணி
ஜோசப் பெஸ்கி அவர்கள் உயர் குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கும் நற்செய்திபணி அறிவித்து அவர்களை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்த தீர்மானம் செய்து, தன்னை ஒரு சன்னியாசியாக கான்பித்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டார். மேலும் இந்து மத பிராமணர்களைப்போல நெற்றியில் சந்தனம்பூசி, காதில் முத்துக்கடுக்கன் அணிந்து, காவி உடையை அணிந்துகொண்டு, புலித்தோல் பதிக்காப்பட்ட இருக்கையில் அமர்ந்து, மரத்தால் செய்யப்பட்ட பாதரட்சையை அணிந்து கொண்டு, மரக்கறி உணவை மாத்திரம் உட்கொண்டவராக, பிராமணர்களின் கலாச்சாரத்தின்படி நற்செய்திபணி அறிவித்தார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் இந்துமத பிராமணர்களை பலமுறை விவாதத்திற்கு அழைத்து, இந்து சமய நூல்களில் இருந்தே இயேசுவைப்பற்றி கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி கிறிஸ்துவை பற்றி அவர்களுக்கு பிரசங்கித்தார். இதனால் நூற்றுக்கணக்கான இந்துமத பிராமணர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
இதைக்கண்ட இந்துமத பூசாரிகள் வெகுண்டு எழுந்து மன்னரிடம் பல தவறான தகவல்களை கூறினார்கள். ஆகவே இந்துமத பூசாரிகளின் தூண்டுதல் பேரில் 1714 ம் ஆண்டு மதுரையை ஆண்ட மன்னர், ஜோசப் பெஸ்கியை கைது செய்து, பாரபட்சம் கான்பித்து ஜோசப் பெஸ்கி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். ஆயினும் பெஸ்கி அவர்கள் பல சித்ரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களை சந்தித்து 1715 ம் ஆண்டு மரண தன்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். உள்ளுர் மன்னர்களின் விரோதத்தினால் அங்கிருந்த கிறிஸ்தவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே ஜோசப் பெஸ்கி அவர்கள் கடலூர், இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்.
பெயர் மாற்றம்: வீரமா முனிவர்
ஜோசப் பெஸ்கி அவர்கள் 1725 ம் ஆண்டு தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை தைரியநாத சாமி என்று மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த பெயர் வடமொழி என்பதால் தனது பெயரை செந்தமிழில் வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டார். இவர் தமிழ் மொழி மீது பற்று கொண்டு பல இடங்களுக்குச் சென்று தமிழ் இலக்கிய சுவடிகளை தேடி அலைந்தமையால் சுவடு தேடும் சாமியார் என்றும் அழைக்கப்பட்டார்.
தஞ்சாவூரில் இறைபணி
ஜோசப் பெஸ்கி அவர்கள் நற்செய்தி பணியினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தஞ்சாவூருக்கு அருகே பூண்டியில் பூண்டி மாதா பேராலயமும், தஞ்சாவூரில் வியாகுல மாதா தேவாலயம், பெரியநாயகி மாதா சன்னதி ஆலயம், எலக்குரிச்சியில் அடைக்கல மாதா ஆலயம், கோனான் குப்பத்தில் ஆரோக்ய மாதா தேவாலயம் என்று பல ஆலயங்களை கட்டினார். பின்னர் 1738 ஆண்டுவரை ஜோசப் பெஸ்கி அவர்கள் தஞ்சாவூர் பகுதியில் நற்செய்திபணி செய்து அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.
திருநெல்வேலியில் இறைப் பணி
1742 ம் ஆண்டு ஜோசப் பெஸ்கி என்னும் வீரமா முனிவர், மதுரை மிஷன் பணித்தளத்தை விட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி, ஏலாக்குறிச்சி, மணப்பாடு மற்றும் கோணார்குப்பம் போன்ற பகுதிகளில் நற்செய்திபணி செய்து அநேகரை கிறிஸ்துவின் சீஷராக்கினார். ஆகவே ஆங்காங்கு சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டது.
1745 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திலிருந்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்துமத பூசாரிகளின் கடும் எதிர்ப்பிலும் பாதுகாத்து, அடைக்கலம் கொடுத்த காப்பாற்றினார். இதனால் அநேகர் திருநெல்வேலி பகுதியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
கேரளத்தில் இறைப் பணி
பின்னர் 1746 ம் ஆண்டு ஜோசப் பெஸ்கி அவர்கள் நற்செய்திபணியாளர்களை உறுவாக்க கேரள நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னும் இடத்தில் அமைந்திருந்த ரோமன் கத்தோலிங்க குருமடத்திற்கு நற்செய்தி பணியாளர்களுக்கு கற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் அனேகரை குருத்துவ பணிக்கும், நற்செய்தி பணிக்கும் ஆயத்தப்படுத்தி, அவர்களை தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களுக்கு சேவை செய்யவும், கிறிஸ்துவின் நற்செய்திபணி செய்யவும் அனுப்பினார். இதனால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதிகமானார்கள்.
மொழி & எழுத்துப் பணிகள்
வீரமா முனிவர், ஐரோப்பிய நற்செய்தி பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும், தமிழர்கள் ஐரோப்பிய மொழியை கற்றுக்கொள்ளவும் ஏதுவாக தமிழ்-இலத்தீன் அகராதியையும் பின்னர் தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியையும் முதன் முதலாக உறுவாக்கினார். ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் திருக்குறளை முதன்முறையாக இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
மேலும் ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழ் மொழிக்கு மாபெரும் அருட்கொடைகளை வளங்கினார். தமிழ் உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதைகள் போன்ற பல நூல்களை இயற்றினார்.
வீரமா முனிவர் தமிழின் சிறப்பை ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ள திருக்குரள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி போள்ற பிற நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். ஜோசப் பெஸ்கி அவர்கள் இந்துமதத்தின் மீது நேர்மறையான எண்ணம் கொண்டிருந்தார். மேலும் திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கள், அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை, கருணாம்பரப் பதிகம், லுத்தே இனத்து இயல்பு, போன்ற தமிழ் சிற்றிலக்கியங்களையும் சதுரகராதி என்னும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற தமிழ் இலக்கண நூலையும் வெளியிட்டார். இவையாவும் கிறிஸ்துவின் போதனையை இந்துமத புராண அமைப்பின்படி பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி எழுதினார். இது அநேகரை சென்றடைந்தது. இதனால் அநேகர் கிறிஸ்துவை பற்றி அறிந்துகொண்டார்கள்.
ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் தமிழ் இலக்கிய படைப்புகளால் மிகவும் அரிதாக கருதப்படும் தேம்பாவணிஎன்று அழைக்கப்படும் இயேசு காவியத்தில், கிறிஸ்துவின் அன்பை எளிமையாகவும், இனிமையாகவும் போதிக்க இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளையும், பரிசுத்த வேதாகம செய்திகளையும், இயேசுவின் தந்தை யோசேப்பின் வாழ்க்கை வரலாறையும், வேதாகமத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு கதைகளையும் மூன்று கண்டங்களாக பிரித்து அதை 36 படலங்களாக கொண்டு மொத்தமாக 3615 வரிகளை பயன்படுத்தி தேம்பாவணி காவியத்தை எழுதிமுடித்து வெளியிட்டார். இது ஜோசப் பெஸ்கி அவர்களின் தமிழ் புலமைக்கு இன்றும் சான்றாக விளங்குகிறது.
இவர் ஆண்டவரை துதிக்கும்படியாக எழுதிய ஜகனாதா குரு பரநாதா என்னும் 10 சரணங்களை கொண்ட இனிமையான இரண்டு பக்தி பாடல்கள் இன்றும் கிறிஸ்தவ கீர்த்தனையில் இடம்பெற்று நம்முடைய திருச்சபைகளில் பாடப்பட்டு வருகிறது. எவ்வளவு இனிமையான, கருத்து செரிந்த உன்னதமான தமிழ் பாடல்கள் ஆகும்.
இறுதிக் காலத்தில் வீரமா முனிவர்
பின்னர் 1747 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மணப்பாடு என்ற இடத்தில் நடைபெற இருந்த ரோமன் கத்தோலிக மிஷனெரிகளின் வருடாந்திர பொதுக்குழு கூடுகையில் உரையாற்றுவதற்கு வந்த நேரத்தில் ஏற்பட்ட சுகவீனத்தினிமித்தமாக ஜோசப் பெஸ்கி அவர்கள் தன்னுடைய 67 ம் வயதில் 1747 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ம் நாளில் நித்திய இளைப்பாறுதலுக்ககு கடந்து சென்றார். பின்னர் அவருடைய சரீரம் கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள அம்பலக்காட்டு துறவியர் கல்லரை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய 37 ஆண்டுகால நற்செய்திபணியினால் 12,000 த்திற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
வீரமா முனிவர் பெற்ற சிறப்புகள்
வீரமா முனிவர் என்று அழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழில் 23 நூல்கள் எழுதியமையால் அவரை கௌரவிக்கும்படி தமிழ்நாடு அரசு 1968 ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் இவருடைய சிலையை நிறுவி பெருமை செய்தது. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்து தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை தாய் நாடாக போற்றி, தமிழ் மக்களை தன் மக்களாக பாராட்டி, திருமறைச் செல்வராக, செந்தமிழ் அறிஞராக, பன்மொழி புலவராக, ஓவியக் கலைஞராக, இசை ஆர்வம் மிகுந்தவராக, கலையறியும் குண நலமும் பொருந்தியவராக கிறிஸ்துவின் சேவையை வாழ்நாள் இறுதிவரை உற்சாகமாய் செய்து முடித்தார். இவருடைய நற்செய்திபணியும் தமிழ்பணியும் இன்றுவரை தமிழ் ஆர்வலர்களுக்கும், நற்செய்தி பணியாளர்களுக்கும் சிறந்த முன்னுதாரமாக இருக்கின்றது.
0 Comments