✠ புனிதர் யோசேப்பு ✠ St. Joseph
அருள்நிறை கன்னி மரியாளின் கணவர்:
(Spouse of the Blessed Virgin Mary)
பிறப்பு: கி.மு. 39/38
நாசரேத்து
இறப்பு: கி.பி. 21/22
நாசரேத்து (பாரம்பரியம்)
ஏற்கும் சமயம்:
அனைத்துலக கிறிஸ்தவ திருச்சபைகள்
(Universal Church)
நினைவுத் திருவிழா: மார்ச் 19
வரலாறு:
புனிதர் யோசேப்பு (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித அருள்நிறை கன்னி மரியாளின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
புனிதரின் வாழ்வு:
சூசையப்பர், தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த சூசையப்பர், தச்சுத்தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியாள், தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியாள் திடீரென கருவுற்றதால் சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாளை ஏற்றுக்கொண்டார்.
இயேசு, பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும், மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் சூசையப்பர் பாதுகாத்தார்.
பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் ஆலயத்தில் தங்கிவிட்டபோது, சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடியலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாளும் அருகில் இருக்க சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.
நற்செய்திகளில்:
மத்தேயு நற்செய்தி:
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசையப்பருக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும்முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரியவந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் சூசையப்பர் நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'சூசையப்பரே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். சூசையப்பர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை சூசையப்பர் அவரோடு கூடி வாழவில்லை. சூசையப்பர் அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
~ மத்தேயு 1:18-21,24-25
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் சூசையப்பருக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். சூசையப்பர் எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் சூசையப்பருக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, சூசையப்பர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
~ மத்தேயு 2 : 13 - 14, 19 - 21
இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியாள் என்பவர்தானே? யாக்கோபு, சூசையப்பர், சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
~ மத்தேயு 13:54-56
லூக்கா நற்செய்தி:
தாவீதின் வழிமரபினரான சூசையப்பரும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாளோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியாள் கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
~ லூக்கா 2:4-7
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
~ லூக்கா 2 : 21 - 22
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும், அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் ஆலயத்தில் கண்டார்கள்.
~ லூக்கா 2:41-46
0 Comments