Ad Code

யோசபாத்: உபவாச ஜெபம் • Josaphat Prayer • SMC

தவக்கால தியானம்: 12
தலைப்பு: யோசபாத்: உபவாச ஜெபம்
வேதப்பகுதி: 2 நாளாகமம் 20 : 6-12
வேதாகம நபர் குறிப்பு : யோசபாத் 
தகப்பன் : ஆசா 
தாய் : அசுபாள் 
பொறுப்பு: யூத தேசத்து ராஜா
சிறந்த பண்பு :
1. கர்த்தரிடத்தில் கேட்டு தன் காரியங்களை ஆரம்பிப்பவர்.( யுத்தத்திற்கு செல்லுவது )
2. கர்த்தரின் வழிகளில் அவனுடைய இருதயம் உற்சாகம் கொண்டதாய் காணப்பட்டது.
3. வேத புஸ்தகத்தை தேச மக்களுக்கு உபதேசிக்கும்படி பிரபுக்களையும்,லேவியரையும் ,
ஆசாரியரையும் ஏற்படுத்தினான். 

விளக்கவுரை :-
மோவாப் புத்திரரும் ,அம்மோன் புத்திரரும், மெகுனியர் ஒன்று சேர்ந்து யோசபாத்துக்கு விரோதமாக யுத்தத்திற்கு வந்தார்கள்.யோசபாத் பயந்து தன் முகத்தை கர்த்தரை நேராக திருப்பி யூதாவெங்கும் உபவாசத்தை அறிவித்தான்.யூதா ஜனக்கூட்டம் முழுவதும் கர்த்தரைத் தேடி கூடினார்கள்.யோசபாத் அறிவித்தபடி யூதா மக்களும் ,எருசலேமியரும் உபவாசத்திற்கு கர்த்தருடைய ஆலயத்தின் புதுப்பிரகாரத்தில் கூடினார்கள். அப்பொழுது யோசபாத் ஜெபித்ததாவது, 

"எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது." என்று கர்த்தரைப் புகழ்ந்து , அவரே அரசாளுகிறவர் , அவரே வல்லமைக்கு பாத்திரர் என்று யோசபாத் ராஜா தம்மை முற்றிலுமாக தாழ்த்தினார்.பின்வரும் ஜெபங்களில் (வசனங்களில்) கர்த்தர் அருளிய வாக்குத்தத்தங்களை அறிக்கையிட்டு தம்முடைய விசுவாசத்தை முன்வைத்து ஜெபித்தார்; முற்றிலும் பெலன் இல்லை, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கர்த்தருடைய ஆலோசனைக்காகவும் ,உதவிக்காகவும் ஜெபித்தார்.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி, யகாசியேல் என்னும் லேவியன் மேல் இறங்கிற்று: அவன் சொன்னது:
"சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

 இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்."

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றி அளித்தார். யூதா மக்கள் பெராக்காவில் கூடி ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம் :-
யோசபாத் போல நாமும் சில வேளைகளில் பெலனில்லை , என்ன செய்வது என்ற தெரியாத
சூழ்நிலைகளை சந்திக்கும் வேளையில் அவர் அண்டை செல்வோம் அவர் இரக்கம் செய்கிறவரும் பெலன் தருகிறவராய் இருக்கிறார்.

உபவாச ஜெபம் என்பது வெறும் உணவு மற்ற காரியங்களை வெறுப்பது மட்டுமில்லாமல் தேவனிடத்தில் அமர்ந்து நம்மை தாழ்த்தி,துதித்து கருத்தாய் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபங்களுக்கு நிச்சயம் ஜெயத்தை தர வல்லவராய் இருக்கிறார்.

எழுதியவர்
திரு. சா. அலெக்ஸ்.
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments