1. தலைப்பு
முதற்சீடர்கள் பெற்ற அற்புதம்: இறைமகனின் வார்த்தைக்குக் கீழ்டிதல்
2. திருமறை பகுதி
லூக்கா நற்செய்தி 5: 1 - 11
3. இடம் & பின்னணி
லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே முதற்சீடர்கள் பெற்ற அற்புதத்தை பதிவிட்டுள்ளார். இந்த அற்புதம் கெனசரேத்து கடலருகே நடைபெற்றது. கலிலேயக் கடல் (Sea of Galilee) என்றும் கெனசரேத்து ஏரி (Lake of Gennesaret) என்றும் திபேரியக் கடல் அழைக்கப்படுகின்றது. கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம். இது இதயம் போன்ற வடிவம் கொண்டது என சிலர் கூறுகின்றனர். இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது.
4. விளக்கவுரை
ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர், சீமோன் பேதுரு என்பவரின் படகில் இயேசு ஏறி அமர்ந்து அதில் அமர்ந்தவாறே கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய் மீன்பிடிக்க வலைகளைப் போடுமாறு இயேசு சீமோனிடம் கூறினார். அதற்குப் பேதுரு ஐயரே என்று இயேசுவை அழைத்ததைப் பார்க்கிறோம். ஐயரே என்றால் எஜமானாரே , போதகரே, ஆண்டவரே என்று அர்த்தம். மேலும் இரவு முழுதும் வலைவீசியும் மீனொன்றும் அகப்படவில்லை என்று சீமோன் கூறிப்பார்த்தார். என்றாலும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்று சொல்லி, அவரும், அந்திரேயாவும் அவரோடுகூட இருந்தவர்களும் வலைகளை வீசினார்கள். அதிசயமான விதத்தில் பெருந்திரளான மீன்கள் வலைகளில் அகப்பட்டன; வலைகளும் கிழியத் தொடங்கின. யாக்கோபு மற்றும் யோவான் என்ற மீனவர்களும் துணைக்கு அழைக்கப்பட்டனர். வியப்பும் அச்சமும் மேலிட, சீமோனும் இயேசுவின் கால்களில் விழுந்து தன்னைத் தாழ்த்தினார். பின்னர் இயேசு அவர்களை தம் சீடர்களாக அழைத்த போது, அவர்கள் உடனே பின் சென்றனர்.
5. கருத்துரை
லூக்கா 5:5 "ஆகிலும் உம்முடைய வார்த்தையின் படியே செய்கிறேன்" என்ற பேதுருவின் கீழ்படிதல் அவன் அற்புதத்தை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது. பேதுரு பரம்பரை பரம்பரையாக மீன்பிடி தொழில் செய்பவர். அவருக்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட மீன்கள் எவ்வளவு கிடைக்கும் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் அன்று அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை என்று பேதுரு தன் தொழிலில் தோல்வியை ஒப்புக் கொண்டதைப் பார்க்கிறோம். நம் இயலாமையை ஒப்புக்கொள்ளும் போதுதான், அற்புதத்தை காண முடியும். மேலும், இயேசு அழைத்த போதும், உடனே கீழ்படிந்தனர். திருப்பணிக்கு கீழ்படிதல் மிகவும் முக்கியமானது. கீழ்படிதல் இல்லால் திருப்பணியில் திருப்தி மற்றும் நிறைவு இல்லை. இறைப் பணி பாதையில் இறை சத்தத்திற்கு கீழ்படிந்து பயணித்து அவர் திருப்பெயருக்கு புகழ் சேர்ப்போம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments