Ad Code

Mother Teresa

ஒருமுறை மிகுந்த வசதி படைத்த பெண்ணொருத்தி, அன்னை தெரசாவை சந்தித்து, “அம்மா, நானும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் இங்கு வந்து உங்களோடு கூட இந்த குஷ்டரோகிகளுக்கு பணி செய்ய விரும்புகிறேன்” என்றாள். அன்போடு அப்பெண்ணை ஏற்றுக்கொண்ட அம்மையார் அங்குள்ள குஷ்டரோகம் ஆட்கொண்ட நபரை சுத்தம் செய்து புண்களில் மருந்திடுமாறு கூறினார். அருகில் சென்ற அப்பெண்ணோ, “எப்படியம்மா இதைச் செய்வது?” என்று மருந்திட மறுத்துவிட்டார். ஆனால் அம்மையார் அருகில் சென்று அன்பு கனிந்த முகத்துடன் அக்குஷ்டரோக நபரின் கால்களையும், கைகளையும் சுத்தம் செய்து மருந்திட்டார். இதைக் கண்ட அப்பெண், “அம்மா உங்களால் மட்டும் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது?” என்று கேட்டாள். “நான் இவர்களின் கால்களையும் கைகளையும் பார்க்கும்போது சிலுவையில் அறையுண்டு ஆணிகள் கடாவப்பட்ட ஆண்டவரின் கை-கால்களாகவே காண்கிறேன். ஆகவே எனக்கு எந்த வித அருவருப்பும் தெரியவில்லை” என்றார்கள்.
அம்மையாரின் இந்த சிந்தைக்கு அடிப்படை வேத வசனமே ஆகும். அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெய பட்டணத்து மக்களுக்கு ஆலோசனை கூறும்போது ஒரு காரியத்தைக் கூறுகிறார். “நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” என்று கூறினார்.

மனிதர்களாகிய நாம் அநேக நேரங்களில் பிறருக்குச் செய்யும் கடமைகளை முணுமுணுப்போடு செய்கிறோம். உதாரணமாக வயது முதிர்ந்த உங்கள் பெற்றோரை கவனிப்பதாய் இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் குறைபாடோடு பிறந்த உங்கள் பிள்ளையைக் கவனிப்பதாய் இருக்கலாம். அவர்கள் எவ்வளவு நெருங்கின உறவாய் இருந்தாலும் வருடக்கணக்கில் அவர்களை கவனிக்கும் போது சலிப்பும், சோர்வும் வந்துவிடுவது இயற்கையே. ஆனாலும் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு இயேசுவுக்கு செய்வதாக எண்ணி மனப்பூர்வமாக செய்யுங்கள்.

பிரியமானவர்களே! முடியாத ஒருவரை கவனிக்கும் காரியத்தில் மாத்திரமல்ல, வீட்டில் செய்யும் சிறுசிறு வேலைகளிலும் முணுமுணுப்பு வரும்போது இந்த வசனத்தை நினைவுகூருங்கள். முடிந்தால் இந்த வசனத்தை ஒரு சிறிய சாட் பேப்பரில் எழுதி நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் அறையில் ஒட்டிவிடுங்கள். பிறருக்கு செய்யும் கடமையில் கசப்பு ஏற்படும்போது கண்ணில் படும் இவ்வசனம் உங்களை அவ்வேலையை மனப்பூர்வமாய் செய்ய உற்சாகப்படுத்திவிடும்......ஆமென் 



Post a Comment

0 Comments