Ad Code

யவீருவின் மகளுக்கு வாழ்வு: சிறுவர் மீது இறைமைந்தரின் கரிசனை 10/3/2023 Jesus and Daughter of Jairus

1. தலைப்பு
யவீருவின் மகளுக்கு வாழ்வு: சிறுவர் மீது இறைமைந்தரின் கரிசனை

2. திருமறை பகுதி
மத்தேயு 9:18; 23-26
மாற்கு 5:21-24; 35-43
லூக்கா 8:40-42; 49- 56

3. இடம் & பின்னணி
மத்தேயு 4:13 சொல்லுகிறது: இயேசு நாசரேத்தை விட்டு வெளியேறி, கப்பர்நகூமில் வசிப்பதாக நமக்கு தெளிவாக சொல்லுகிறது. இப்போது இயேசு மீண்டும் கடலைக் கடந்து, அதே படகில், மறுபுறம், எதிர்க் கரையில், கப்பர்நகூமுக்கு அருகில் செல்கிறார் (மாற்கு 5.21). ஆகவே இயேசுவை யவீரு கப்பர்நகமில் தான் சந்தித்திருக்க வாய்ப்பு அதிகம். மாற்கு அற்புதத்தை செய்த பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு (நாசரேத்) சென்றார் (மாற்கு 6:1).

4. விளக்கவுரை
யூதர்களின் ஒரு தொழுகைக் கூடத்தின் தலைவர் தான் யவீரு. பெரும் மக்களால் மதிக்கப்பட்ட யவீருவிற்கு இருந்த பன்னிரெண்டு வயது மகள் நோயால் பீடிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்தாள்.பெரும்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற பெண்ணிடம் இயேசு பேசிக் கொண்டிருக்கும் போதே யவீருவின் வீட்டிலிருந்து சில ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் யவீருவிடம், “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! இனி எதற்காகப் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?” என்று சொல்கிறார்கள். அந்த ஆட்கள் சொன்னது இயேசுவின் காதிலும் விழுகிறது. அவர் யவீருவிடம் திரும்பி, “பயப்படாதே, விசுவாசத்தோடு இரு” என்று சொல்கிறார்.

பிறகு, யவீருவோடு சேர்ந்து அவருடைய வீட்டுக்குப் போகிறார். அங்கே ஒரே கூச்சலாக இருக்கிறது. அவருடைய வீட்டில் கூடியிருக்கிற மக்கள் அழுகிறார்கள்... கதறுகிறார்கள்... துக்கத்தில் நெஞ்சில் அடித்துக்கொள்கிறார்கள். இயேசு உள்ளே போய், “சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி எல்லாரையும் திடுக்கிட வைக்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். ஆகவே, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரையும் இறந்துபோன சிறுமியின் பெற்றோரையும் தவிர மற்ற எல்லாரையும் இயேசு வெளியே அனுப்புகிறார். இவர்கள் ஐந்து பேரை மட்டும் கூட்டிக்கொண்டு அந்தச் சிறுமி படுத்திருக்கிற இடத்துக்குப் போகிறார். அவளுடைய கையைப் பிடித்து, ‘“தலீத்தா கூமி” (சிறுமியே, ‘எழுந்திரு) என்று சொன்னவுடன் சிறுமி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறாள். இயேசு அந்த பிள்ளைக்கு உணவு கொடுக்க சொல்லி கடந்து சென்றார்.

கருத்துரை
சிறுவர் மீது இறைமைந்தரின் கரிசனை அதிகமாகவே இருந்தது. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள் என்று சொன்னவர் இயேசு. இங்கும் யவீருவின் 12 வயதான பெண் பிள்ளைக்கு புதிய வாழ்வு கொடுக்கிறார். இங்கு யவீருவின் விசுவாசமும் குறிப்பிடத்தக்கது. இறைவன் நமது உணர்வுகளை அறிகிறவர். நாம் இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் இறைவனின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரு தந்தையாக இறைவன் நமக்கு புது வாழ்வு அருளுகிறார். நமது இறை விசுவாசம் தான் நமது வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்று பகருகின்றன. 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments