1. தலைப்பு
பத்து குஷ்டரோகிகள் சுகமாகுதல்: பிரதான ஆசாரியரான இறைமைந்தர்
2. திருமறை பகுதி
லூக்கா 17:11-19
3. இடம் & பின்னணி
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா கலிலேயா நாடுகளில் வழியாக நடந்து போகும் பொழுது ஒரு கிராமத்தின் வழியாக அவர் செல்லும் பொழுது பத்து குஷ்டரோகிகள் வந்து சுகம் பெற்றதாக லூக்கா மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார்.
4. விளக்கவுரை
அக்காலத்தில், குஷ்டரோகிகளைத் தொட்டால் தீட்டு என்பதாலும், அந்த விஷக் கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் தொற்றக் கூடும் என்பதாலும் அவர்கள் அருகில் வர மாட்டார்கள். ஆகையால், பத்து குஷ்டரோகிகள் இயேசுவுக்கு எதிராக வந்து தூரத்திலே நின்று இயேசுவைப் பார்த்து, “இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டார்கள். இயேசு அந்த பத்து குஷ்டரோகிகளையும் பார்த்து ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். ஆசாரியர்களிடம் காண்பிக்கச் சொல்லி விட்டதால் குணமாகி விட்டதாக அர்த்தம். அந்த 10 பேரும் இயேசு நம்மைத் தொடா விட்டாலும், ஒரு வார்த்தையாவது சுத்தமானீ ர்கள் என்று சொல்லவில்லையே என்று எண்ணாமல், அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து போனார்கள். போகும் போதே சுகமானார்கள்.
ஆனால் அதில் உள்ள ஒரு சமாரியன் மட்டும் திரும்ப வந்து சந்தோஷமான நன்றியுள்ள உள்ளத்தோடு, இயேசுவைப் பார்க்க வந்தான். சந்தோஷத்துடன் இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, உரத்த சத்தமாக, இயேசுவை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரம் செலுத்தினான். அவன் ஒரு சமாரியன். இயேசு அந்த சமாரியனிடம் சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, நீ மட்டும் வந்திருக்கிறாயே, மற்ற ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார். இந்த அந்நியன் மட்டுமே தேவனை மகிமைப்படுத்தினான். அவனுக்கு மட்டுமே நன்றியுள்ள இருதயம் இருந்ததை இயேசு பார்த்தார். அவனை நோக்கி உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று எழுந்து போகச் சொன்னார். இவனுக்கு மட்டுமே இயேசு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்.
5. கருத்துரை
இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டது, “நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்.” ஆனால் சமாரியனான ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வந்தார். அந்த சமாரியன் அக்காலத்து ஆசாரியர்களைக் காட்டிலும் இயேசு கிறிஸ்துவை பிரதான ஆசாரியராக வெளிப்படுத்துகின்றார் என்று புரிய முடிகின்றது. யூத சடங்குகளை விஞ்சும் ஒரு உன்னத பலி, நன்றி பலி சமாரியனின் நாவிலிருந்து புறப்படுகிறது. இயேசு கிறிஸ்து மெல்கிசெதக் முறைமையின் படி, மகா பிரதான ஆசாரியர் என்பதற்கு திருமறை தெளிவான விளக்கத்தைக் கொடுக்கிறது (எபிரெயர்). ஆகவே அவருக்கு நாம் நன்றி செலுத்த கடமைபட்டிருக்கிறோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments