1. தலைப்பு
அத்திமரத்தை சபித்தல்: விசுவாச பயிற்சியளிக்கும் இறைமைந்தர்
2. திருமறை பகுதி
மத்தேயு 21:18:22
மாற்கு 11:12-14
3. இடம் & பின்னணி
எருசலேம் - பெத்தானியா பாதையில் இந்த அற்புதம் நடைபெற்றது. மூன்று நற்செய்தியாளர்களும் தங்கள் பதிவில் சில வித்தியாசங்களை கொண்டுள்ளனர்.
4. விளக்கவுரை
இயேசு சாப்பிட கனிகள் ஏதாவது இருக்குமா என்று பார்க்க ஒரு அத்திமரத்தினிடம் செல்கிறார் (மத் 21:18-22; மாற்கு 11: 12-14, 20-21). அந்த மரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டபோது அவர் அந்த மரத்தை சபித்தார். இந்த சம்பவத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மாற்கு 11:13ம் வசனத்தின் படி, அந்த காலம் அத்தி மரம் கனி கொடுக்கிற காலமல்ல. "அத்திப்பழக் காலமாயிரதாபடியால்" என்று மாற்கு எழுதுகிறார், ஏனென்றால் அது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக, “நல்ல அத்திப்பழமாக முழுமையடைவதற்கு” ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன் நடந்தது. உண்மையாக, இந்த வார்த்தைகளை அவர் சேர்ப்பதன் மூலம் தான் எதைப்பற்றிச் சொல்லுகிறார் என்பதை மாற்கு நன்கு அறிந்திருந்தார். மார்ச் மாத இறுதியில் அத்தி இலைகள் காணப்படும் போது அவைகளோடு சேர்ந்து கொத்தாக சிறிய உருண்டை அத்திப்பழங்களும் தோன்றும். அவைகள் உண்மையான அத்திப் பழங்களுக்கு முன்னோடியாக தோன்றுபவை. இந்த “டக்ஷ்” என்ற பழங்களை விவசாயிகள் மற்றம் வழிப்போக்கர்கள் பசியாக இருக்கும் போது சாப்பிடுவார்கள். எனவே இலைகள் நிறைந்த ஒரு அத்திமரம் தொடக்க அத்திப் பழங்களை இழந்திருந்தால் அந்த வருடத்தில் அம்மரம் நிச்சயமாக கனிகளை கொடுக்காது".
மறுநாள் அவ்வழியாக சென்ற போது, இயேசு சொன்ன படியே, அந்த அத்திமரம் பட்டுப் போயிருந்தது. காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.இதன் வாயிலாக இயேசு ஒரு பாடத்தை சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
5. கருத்துரை
இயேசு ஏன் அந்த அத்தி மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார்? அவர் சொல்கிற பதிலிலிருந்து அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும். விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொல்கிறார் (மத்தேயு 21:21, 22). விசுவாசத்தால் மலையையும் பெயர்க்க முடியும் என்று இதற்கு முன்பு சொன்ன அதே விஷயத்தைத்தான் இயேசு இப்போது திரும்பவும் சொல்கிறார் (மத்தேயு 17:20). கடவுள்மேல் விசுவாசம் வைப்பது அவசியம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான் இயேசு அந்த மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார். “நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்” என்று சொல்கிறார் (மாற்கு 11:24).
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments