Ad Code

நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனின் சுகம்: இறைமைந்தரின் வியப்பு Healing of the Centurion's Servant 2/3/23

1. தலைப்பு
நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனின் சுகம்: இறைமைந்தரின் வியப்பு

2. திருமறை பகுதி
மத்தேயு 8: 5 - 13
லூக்கா 7: 1 - 10

3. இடம் & பின்னணி
மத்தேயு நற்செய்தியாளர் எந்த இடத்தில் இயேசு இந்த அற்புதத்தை செய்தார் என்று சொல்லவில்லை. ஆனால், லூக்கா கப்பர்நகூமில் என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு நூற்றுக்கதிபதி நேரடியாக இயேசுவிடம் வந்தது போலும், லூக்கா நூற்றுக்கதிபதி யூத முப்பரை அனுப்பி, இயேசு அருகே வந்த பின்பு, சிநேகிதரை அனுப்பியதாகவும் எழுதியுள்ளனர் மேலும் இந்த லூக்கா இந்த நூற்றுக்கதிபதி ஜெப ஆலயத்தை கட்டிக்கொடுத்தவர் என்றும் யூதர்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர் போலும் எழுதியுள்ளார். 

4. விளக்கவுரை
நூற்றுக்கு அதிபதிக்குப் பிரியமான ஒரு வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருக்கிறான். இவனுடைய வேலைக்காரன் திமிர்வாதம் கண்டு வியாதியுற்றிருந்தான். அன்று இந்த திமிர்வாதம் என்ற நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாயிருந்தது. தன்னுடைய வேலைக்காரனை இயேசு குணமாக்கவேண்டுமென்று அவன் விரும்புகிறான். நூற்றுக்கதிபதி என்பவர் நூறு சேவகர்களுக்கு அதிபதியாக ரோமப் பேரரசில் பொறுப்பில் இருப்பவர். அவரது அதிகாரம் எப்படிப்பட்டது என்றால், ரோம அதிகாரத்துக்கு உட்பட்ட அவருக்கு, அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர் உள்ளனர். அவர் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்வார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருவார். அவர் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்வார். இத்தகைய அதிகாரம் மிக்க அவர் இயேசுவிடம் தன்னைத் தாழ்த்துகிறார்.

மத்தேயுவின் pwtjivu- ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்.."

லுக்காவின் பதிவு - "ஆண்டவரே! நீர் வருத்தப்பட வேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை”

மற்றவர்களுக்கு உத்தரவிட்டே பழக்கப்பட்டிருக்கும் ஓர் அதிபதிக்கு என்னே மனத்தாழ்மையான வார்த்தைகள் இவை!இராணுவத்தில் அவன் உயர் பதவியில் இருந்ததனால் இயேசுவின் அதிகாரம் செயல்படும் விதத்தை ஆழமாக அறிந்திருந்தான்.

5. கருத்துரை
“ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்று சொன்னானே, அது ஆச்சரியமல்லவா! இந்த நூற்றுக்கு அதிபதி ஒரு ரோமனாயிருந்தும், தமது வார்த்தையில் அவன் வைத்திருந்த விசுவாசத்தைக் கண்டு இயேசுவே ஆச்சரியப்பட்டார். மட்டுமல்ல, தம்மை ஏற்றுக்கொள்ளாத தமது ஜனமாகிய யூதருக்கு முன்பாக, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றும் இயேசு சாட்சி பகர்ந்தார். ஆண்டவர் எதிர்பார்க்கும் ஆச்சரியப்படத்தக்க விசுவாசம் நம்மிடம் உண்டா? அன்றைய யூதரைப்போல அல்லாமல், இன்று நாம் ஆண்டவருடைய அன்பை எவ்வளவாக உணர்ந்து, அறிந்து அனுபவிக்கிறவர்களாக இருக்கிறோம்? அப்படியிருக்க, விசுவாசிகளாகிய நமது விசுவாசம் கிரியையில் வெளிப்படத்தக்கதாக தேவனுடைய வார்த்தையைப்பற்றிப் பிடித்திருக்கிறோமா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போமாக. 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments