1. தலைப்பு
லாசருவுக்கு மறுவாழ்வு: இறைமைந்தரின் அன்பின் வெளிப்பாடு
2. திருமறை பகுதி
யோவான் 11: 1 - 53
3. இடம் & பின்னணி
தூய யோவான் மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார். பெத்தானியாவில் வைத்து இயேசு தம் நண்பர் லாசருவை உயிரடையச் செய்தார். லாசரு பெத்தானியாவில் வாழ்ந்து வந்தார், அது ஒலிவமலை மலையின் கிழக்கு அடிவாரத்தில் எருசலேமின் தெற்கே இரண்டு மைல்கள் தொலைவில் உள்ளது
4. விளக்கவுரை
லாசருவும் அவருடைய சகோதரிகளான மார்த்தாளும் மரியாளும் பெத்தானியாவில் இருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். ஒருநாள் மார்த்தாளும் மரியாளும், ‘லாசருவுக்கு சுகமில்லை, ஆகவே சீக்கிரமாக வாருங்கள்’ என்று பெரேயா மாகாணத்தில் இருந்த இயேசுவுக்கு அவசரமாக செய்தி அனுப்பினார்கள். அப்போது இயேசு உடனடியாகக் கிளம்பாமல் இன்னும் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தார். பிறகு தன் சீஷர்களிடம், ‘லாசரு தூங்கிக்கொண்டிருக்கிறான். நான் அவனை எழுப்ப பெத்தானியாவுக்குப் போகலாம்’ என்று சொன்னார். அதற்கு அப்போஸ்தலர்கள், ‘லாசரு தூங்கினால், அவனுக்கு சரியாகிவிடுமே’ என்று புரியாமல் சொல்ல, இயேசு, ‘லாசரு இறந்துவிட்டான்’ என்று அவர்களிடம் தெளிவாகச் சொன்னார். லாசருவை அடக்கம் செய்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன.
இயேசு பெத்தானியாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் மார்த்தாள் அவரைப் பார்க்க வேகமாகப் போனாள். அவரைப் பார்த்ததும், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள். அப்போது இயேசு, ‘உன் சகோதரன் மறுபடியும் உயிரோடு வருவான். மார்த்தாளே, நீ இதை நம்புகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு மார்த்தாள், ‘உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று நம்புகிறேன்’ என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொன்னார்.
பிறகு மார்த்தாள், ‘இயேசு வந்திருக்கிறார்’ என்று மரியாளிடம் சொல்ல மரியாள் அவரைப் பார்க்க வர, இருந்தவர்களும் அவள் பின்னால் போனார்கள். அவள் இயேசுவின் காலில் விழுந்து அழுது, அவரிடம், ‘எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால், எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்’ என்று சொன்னாள். அவள் படும் வேதனையைப் பார்த்து இயேசுவும் கண்ணீர் விட்டார். அதைப் பார்த்து, ‘இவருக்கு லாசருமேல் எவ்வளவு பாசம்’ என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள்.
இயேசு கல்லறைக்கு சென்று அங்கு கல் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார். அப்போது மார்த்தாள் “ஆண்டவரே, இப்போழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்றாள்.” இயேசு அவளை நோக்கி “நீ விசுவாசித்தால் கடவுளின் மகிமையைக் காண்பாய்” என்றார்..ஜனங்கள் கல்லை எடுத்துப் போட்டவுடன் பிதாவை நோக்கி ஜெபித்து “லாசருவே வெளியே வா” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். மரித்த லாசரு வெளியே வந்தான். அவனுடைய கைகளும், கால்களும் பிரேதச் சீலையினால் கட்டப்பட்டிருந்தது. இயேசு அவைகளை அவிழ்த்து விடச் சொன்னார். இதைப் பார்த்த யூதர்கள் இயேசுவை விசுவாசித்தனர்.
5. கருத்துரை
இயேசுவின் நேசம், அக்குடும்பத்தின்மேல் வைத்திருந்த பரிவு எல்லாம் சேர்ந்து கண்ணீராக வந்தது! தான் செய்யப்போவதை அறிந்தும், அக்குடும்பத்தின் இழப்பில் பங்கெடுத்தவராய் இயேசு இருந்தார்! அவர்களின் உறவினர் யாவரும் அழுவதையும், இயேசு கண்டு உள்ளம் உருகி, கலங்கி அவனை எங்கே வைத்தீர்கள்? என்று கேட்டு அவர்களோடு கூட இயேசுவும் கண்ணீர் விட்டார். கண்ணீர் விட்டு அழுததோடு அல்லாமல் இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாள் ஆன லாசருவை உயிரோடு எழுப்பி அவன் சகோதரிகளிடம் ஒப்படைக்கிறார்.எத்தனை அன்பு உள்ளவர் நம் ஆண்டவர். இதன் மூலமாக கடவுளின் நாமம் மகிமைப்படுத்தப்பட்டது.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments