Ad Code

அசுத்தஆவி பிடித்தவனை இயேசு குணமாக்குதல்: புத்தி தெளிவிக்கும் இறைமைந்தர் • Jesus Casts Demons into a Herd of Pigs

1. தலைப்பு
அசுத்தஆவி பிடித்தவனை இயேசு குணமாக்குதல்: புத்தி தெளிவிக்கும் இறைமைந்தர்

2. திருமறை பகுதி
மத்தேயு 8:28-33 
மாற்கு 5:1-20 
லூக்கா 8:26-39

3. இடம் & பின்னணி
இயேசு கெதரேனே மக்கள் (கதரேனர்) வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தப் பின்பு இந்த அற்புதத்தை செய்தார். இந்தக் கெர்கெசேனர் நாடு கலிலேயாக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கதிரியா அந்தநாட்டின் தலைநகரம். தெக்கப்போலி என்று அழைக்கப்பட்ட பத்து நகரங்களில் ஒன்று இந்தக் கதிரேயா. இப்பத்து நகரங்களில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் புறஜாதிகளாவார். அவ்விடங்களில் பன்றி வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டவர்கள் காணப்பட்டனர். பன்றி அசுத்த விலங்கானதால் யூதர்கள் அதை வளர்ப்பதில்லை. பன்றி இறைச்சி உண்பதும் யூதருக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. (லேவி 11:7,8 உபா 14:8)

4. விளக்கவுரை
இயேசு கெர்கெசேனர் நாட்டில் வந்த போது பிசாசு பிடித்திருந்தவன் பிரேதக் கல்லரைகளிலிருந்து இயேசுவை நோக்கி வந்தான். அவர்களுடைய குடியிருப்பு கல்லறைகளில். அவனை அநேகர் சங்கிலிகளினாலும், விலங்குகளினாலும் கட்டிப்போட்டிருந்தனர். அவைகளை கூட அவன் தகர்த்துப் போடுவான். அவனை அடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. பிசாசு பிடித்தவன் இயேசுவண்டை வந்தவுடன் அவரை பணிந்து கொண்டான். அதோடு ”இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப் படுத்தாதபடிக்கு தேவன் பேரில் உமக்கு ஆணையென்று” மிகுந்த சத்தமிட்டுக் கூறினான். இயேசு அவனை நோக்கி பேரைக் கேட்டதற்கு “நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன்” என்றது. லேகியோன் இதற்கு ஏராளம் என்று பொருள். இதற்கு 5000 ஆட்கள் கொண்ட ரோமானிய படை எனப் பொருள். 

பிசாசுகள் இயேசுவை நோக்கி பன்றிக்குள் அவைகளை அனுப்பும்படி வேண்டிக் கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே அசுத்தாவிகள் புறப்பட்டு பன்றிக்குள் போயின. உடனே இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலில் பாய்ந்து மாண்டன. அதைக் கேட்ட மக்கள் சம்பவித்ததைப் பார்க்கும்படி இயேசுவினிடம் வந்தார்கள். 

5. கருத்துரை
ஜனங்கள் பிசாசு பிடித்த மனிதன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டார்கள். கிறிஸ்து இயேசு புத்தியை தெளிவித்து விடுதலை ஆக்குகிறார். இயேசு அவ்வூரை விட்டு செல்லும் பொழுது பிசாசிலிருந்து விடுதலை பெற்ற மனுஷன் அவரோடு கூட வருவதற்கு உத்தரவு கேட்டான். இயேசுவோ அவனிடம் “நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய் தேவன் உனக்குச் செய்தவைகளை அறிவி” என்று அனுப்பி விட்டார். அசுத்த ஆவியை துரத்தி, விடுதலையாக்கி, ஊழியம் செய்யும் நற்சாட்சி உள்ள நபராய் மாற்றும் வல்லமை இறை மைந்தருக்கு உண்டு.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments