Ad Code

இயேசு குஷ்டரோகியை சுத்தமாக்குதல்: புறக்கணிக்கப்பட்டவர்கள் மீது இறைமகனின் அன்பு • Jesus Cleansed the Leper

1. தலைப்பு
குஷ்டரோகியை சுத்தமாக்குதல்: புறக்கணிக்கப்பட்டவர்கள் மீது இறைமகனின் அன்பு

2. திருமறை பகுதி
மத்தேயு 8:1-4
மாற்கு 1:40-45
லூக்கா 5:12-14

3. இடம் & பின்னணி
மத்தேயு மலைப் பிரசங்கத்திற்கு அடுத்து இதை எழுதியுள்ளார். இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்த போது இந்த அற்புதம் நடைபெற்றதாக எழுதியுள்ளார். லூக்கா, இயேசு கெனசரேத் கடலருகே முதற்சீடர்களை அழைத்த பின்பு, ஒரு பட்டணத்தில் இயேசு இருந்த போது நடைபெற்றதாக எழுதியுள்ளார். 

4. விளக்கவுரை
இயேசுவை தேடி ஒரு குஷ்டராகி வந்து, "உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று விண்ணப்பம் செய்தான். இங்கு அந்த மனிதன் குணமாக்கும் அல்லது சுகமாக்கு என்று கேட்கவில்லை. மாறாக, சுத்தமாக்கும் என்று கேட்கிறார். ஏனென்றால், அவன் வாழ்ந்த சமூகம் குஷ்ரோகத்தை வியாதியாக மட்டும் பார்க்கவில்லை; சமூகத்தின் தீட்டாகவும் கருதியது. குஷ்டரோகிகள் தீட்டானவர்கள் மற்றும் தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்டனர். அதனால் தான் அவர்கள் பாளையத்திற்கு வெளியே வாழும் முறைமை இருந்தது. அவர்களைத் தொட்டால் கூட தீட்டு என்று நம்பப்பட்டது. ஆனால் இயேசு தொட்டு சுத்தமாக்கினார். மேலும் அவரை ஆசாரியரை சந்திக்க சொன்னார். லேவியராகமம் 14 ம் அதிகாரத்தில் குஷ்டரோகி ஒருவன் குஷ்டரோகம் நீங்கினால் என்ன செய்ய வேண்டுமென்று யூதக் கொள்கைகள் இருந்தது. வெளியே வாழும் குஷ்டரோகிகள் சுகம் பெற்றால் கூட, அவர்களை சோதித்து தூய்மையானவர்கள் என்றறிவித்து, ஊருக்குள் விடும் அதிகாரம் ஆசாரியருக்கு தான் இருந்தது. ஆகவே தான் இயேசு இதை சொன்னார்.

5. கருத்துரை
குஷ்டரோகியை அவனுடைய மனைவி பிள்ளைகள் கூடத் தொட மாட்டார்கள் ஆனால் இயேசு அந்த மனிதனைத் தன்னுடைய பரிசுத்தமான கரங்களால் தொட்டு “எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு” என்றார் இயேசு தம் ஊழியக் காலத்தில், அவர்களை புறக்கணிக்கவில்லை. இது தான் இயேசுவின் பரந்து விரிந்த அன்பு. அன்னை தெரசா, உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும், உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து, மருத்துவம் செய்து பராமரித்தார். இயேசுவைப் பின்பற்றிய அன்னை தெரசாவின் மாதிரி வரலாற்றில் முக்கியமான ஒன்று. நாமும் நாம் வாழும் சமூகத்தில், இனம், நிறம், கொள்கை என பல காரணங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் உண்டு. அவர்களின் நல் வாழ்விற்கு நம்முடைய பங்கு என்ன? சிந்தித்து செயல்படுவோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments